ஒரு சிப்பி மூன்று முத்து - 3

இந்த இந்த தொடரின் மூன்றாம் பாகம் இது. ஏற்கனவே நண்பர்கள் விமல், செம்மல் இளங்கோவன் போன்ற படைப்பாளிகள் பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொண்டோம். இந்த பாகத்தில் வரும் படைப்பாளி ஒரு அட்டகாசமான எழுத்தாளன் என்பது அவனுடைய வரிகளை வாசிக்கும் போதே துல்லியமாய் தெரிகிறது. வயதுக்கும் வரிகளும் எந்த சம்பந்தமும் இல்லை..இவரின் படைப்புக்களை வாசிக்கும் உங்களுக்கே அந்த நியாயம் புரியும் !

=தமிழ்தாசன்=

இடம் : மதுரை
பிறந்த தேதி : 20-Jan-1986
பாலினம்` : ஆண்
சேர்ந்த நாள் : 29-Jul-2011
பார்த்தவர்கள் : 647
புள்ளி : 227

இந்த படைப்பாளியைப் பற்றி அதிகம் யாம் சொன்னால் நன்றாக இருக்காது! வாசிப்போருக்கு புரிந்துக் கொள்ள முடியும் இவர் எப்படிப்பட்ட பாவலன் என்று ! மூன்று முத்து என்று தலைபிட்டப் படியால் மூன்று படைப்புக்களை எடுத்துக் காட்டுகிறோம். தோழரின் அத்தனையும் முத்துக்களாகத் தான் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எமக்கு.
------------------------------
-----கண்ணீர்------
கவிதை எண் - 46740

பாடவந்த பாடுபொருளுக்கு எவ்வளவு தூரம் உயிர் கொடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் முயற்சி செய்திருக்கிறார் இந்த கவிஞர். காதலுக்கு அடுத்தப் படியாக “கண்ணீர்” என்ற தலைப்பில் தான் கவிஞர்கள் அதிகப் படியான கவிதைகளைப் எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இப்படி சில வரிகளை எழுத எண்ணியும் இருக்க மாட்டார்கள்.
மிக இலகுவாக எழுதி இருக்கிறார் இந்த வரிகளை. அழகாகவும் ரசனையாகவும் உண்மையாகவும் இருக்கும் இலக்கியமே காலத்தால் அழியாதது கீழே உள்ள வரிகளைப் பாருங்கள் -

பூவிழிகளில் புயல்
மையம் கொண்டதால்
புருவத்திற்க்கு கீழே
பெய்த பூ மழை....

அது மட்டுமா சமகால அரசியல் பற்றி தன் கண்ணீரில் எப்படி எங்கள் இதயங்களை ஊறவைகிறார் என்று பாருங்களேன்....
=========
இரு விழிகள் என்னும்
இலங்கை தேசத்திலிருந்து
துரத்தப்பட்ட
ஈழ தமிழன்....

எப்படி ஒரு சிந்தனை எப்படி ஒரு கவிதை...
ஒரு கவிஞனின் வரிகளை வாசிக்கும் போது அந்த கவிதை நம்மை எப்படி ஆட்கொள்கிறது என்பதை பிரமாதமாக எடுத்துச் சொல்கின்றதே இப் பாவலனின் / பாலகனின் வரிகள் !
--------------------------
சத்திய சோதனை
கவிதை எண் - 87484

இந்த படைப்பில் உள்ள அத்தனை எழுத்துக்களும் எகிறிப் பாயும் ஈட்டியாய் இருக்கிறது. என்னவொரு கவிதை..அப்பப்பா....சொல்ல முடியாத வீரிய சீரிய வரிகளன்றோ இவை.
இதோ தன் விரல் நுனியால் தட்டச்சில் இருந்து அரசியல்வாதிகளை நோக்கி ஈட்டி எறிகிறான் இந்த கவிஞன் இப்படி -

உழைக்கும் வர்க்கத்தை
உறிஞ்சு குடித்து
ஏழு தலைமுறைக்கு
சொத்து குவித்து
தேர்தல் களத்தில்
தெரிவித்தார்கள்
"நான் ஏழையாக பிறந்தவன்"
=============
அடுத்து எறியும் ஈட்டி “காமாச்சாரிகளின் கன்றாவிகளுக்கு” சாவுமணி அடிக்கிறது இப்படி....

மடம் நிறுவி
உலகெங்கும் கிளை பரப்பி
மறைவாய்
மஞ்சம் அமைத்து
மங்கைகளோடு மகிழ்ந்துகூடி
சட்டப்படி எல்லா பெண்களையும்
சகோதரிகாளாய் ஏற்பதே
இன்றைய பிரம்மச்சரியம்.

இந்த கவிதை நீளமாய் இருக்கிறது மீண்டும் மீண்டும் ஆயிரம் தடவை படித்தாலும் சலிப்புறாது மனது.
---------------------
இதை காதலென்று சொல்லலாம்
கவிதை எண் - 89792

இந்த கவிஞனின் வரிகளை வாசித்துக் கொண்டு செல்லும் போது “காதல் பற்றி எப்படி பாடுவானாய் இருக்கும் இந்தப் புலவன்” என்று ஒரு எண்ணம் மனதுள் வந்தது. தேடிப் பார்த்தோம் தேன் குடித்தோம்! அட்டகாசமாய் எழுதித் தள்ளி இருக்கிறான் தன் வரிகளை. என்னவொரு யதார்த்த சிந்தை பாருங்களேன்....

புத்தனை தழுவ
போகிறபோது
மலர்களை பெய்கிறது
போதிமரம்.
துணிவில்லை
உன் மீதான ஆசையை
துறப்பதற்கு.....
==========
சமூக அக்கறையில் ஊறி கிடக்கும் ஒரு கவிஞன் எந்த பாடு பொருளில் பாட நினைத்தாலும் தன் சமூகசேவை எண்ணத்தை கைவிடமாட்டான். இந்த உவமையைப் பாருங்கள் எங்களை எங்கே கொண்டுச் செல்கின்றது என்று -

மண்ணுக்குள் மக்க
மறுக்கும்
குவிந்த நெகுழி
குப்பைகள் போல
என் மனதெங்கிலும்
உன் காதல்

இவை மட்டுமல்ல கவிதையின் முடிவு கன்னத்தில் அறைந்து செல்கிறது..வாசித்துப் பாருங்கள்....
-----------------
இவர்களைப் போன்றோரின் கவிதைகளை வாசிக்க சொல்லிக் கேட்கிறேன் இப்படி இவர் கவனிக்கப் படாமல் இருக்கிறாரே என்ற ஆதங்கத்தால் மட்டுமல்ல. இது போன்ற வரிகளை வாசித்தால் தான் நம்மில் பலருக்கு புரியும் நாம் கவிதை என்று சொல்லி எழுதிக் கொண்டிருக்கிறோம் என்ற நியாயம்!

Added by :தமிழ்தாசன்

எழுதியவர் : (4-Apr-13, 10:22 am)
சேர்த்தது : கலாமன்றம்
பார்வை : 140

மேலே