இளம் குற்றவாளிகளாக மாறுகின்ற குழந்தைகளின் உளவியல் காரணங்கள்

இளம் குற்றவாளிகளாக மாறுகின்ற குழந்தைகளின் உளவியல் காரணங்கள்

குழந்தைகள் நம் சமுதாயத்தின் கண்ணாடி. குடும்பத்திலும், சமுதாயத்திலும் நடக்கும் ஒவ்வொன்றையும் அப்படியே பிரதிபலிப்பவர்கள்தான் குழந்தைகள். ஓவ்வொரு குழந்தைகளும் பிறப்பில் உயர்ந்த குணம் என்றோ தாழ்ந்த குணம் என்றோ நல்லவர்கள் என்றோ தீயவர்கள் என்றோ பிறப்பதில்லை. அவர்களை, குடும்பமும் அவர்களின் சமூகமும்தான் நிர்ணயிக்கின்றது. ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு மனமுண்டு. அதை போல் தான் குழந்தைகளுக்கும் ஒரு தனி திறமை உண்டு அதை கண்டு ஊக்குவிக்கவேண்டிய பெற்றோர்களும், ஆசிரியர்களும் இன்று பிற பிள்ளைகளோடு ஒப்பிடுவதால் அவர்கள் சிறுவயதினிலே தாழ்வுமனப்பான்மையை வளர்க்கின்றனர். ஓவ்வொரு பெற்றோர்களும் தன் பிள்ளைகளை தன் குழந்தை பெரிய கல்விமானாகவும், அறிவியல் வல்லுனராகவும்இ பிறர் போற்றும் சிறப்பானவனாக ஆகும் விதத்தில் வளர்க்க ஆசைபடும் பெற்றோர்கள் அவர்களை ஒரு நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறையுடையவர்களாக வளர்க்க இன்று பெரும்பாலான பெற்றோர்கள் முயற்சிப்பதில்லை. அதனால்தான் இன்று பல குழந்தைகள் இளம் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.

குடும்பத்தினால் ஏற்படும் பிரச்சனைகள்:

வானில் சிறகை விரித்து முழு ஆகாயமும் தன்னுடையது என வானில் பறக்கும் சிட்டுக் குருவியைப்போல் எதைப்பற்றியும் கவலையின்றி வளரும் பருவம் குழந்தைப் பருவம். ஆனால் இன்று பெரும்பாலான குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர் என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இதன் பின்னணி என்ன? என்று ஆராயும் போது குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளே பெரும் பங்கு வகிக்கின்றது. இன்று பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளின் முன்பாக சண்டை போடுதல், அவர்களிடையே ஏற்படும் விரிசல்கள் குழந்தைகளை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றது. மேலும் National Longitudinal Survey of Children and Youth (NLSCY) நடத்திய ஆய்வின் படி, பெற்றோர் மிகக் கண்டிப்பான குழந்தை வளர்ப்பு முறையினைக் கொண்டவர்களாக இருப்பதால், குழந்தைகள் அதிகளவு வன்முறைத் தன்மைகள், பொதுநலநோக்கற்ற, அன்பற்றஇ சமூக அக்கறை இல்லாதவர்களாக வளர்கின்றனர் என்று NLSCY கூறுகிறது. பெற்றோர்களின் தோழமையான உணர்வு, பிள்ளைகளிடம் இன்பகரமான சூழலைத் தோற்றுவிக்கின்றது என்பது உளவியலாளர்களின் முடிவு. எதிர்மறையான பெற்றோர்களின் குழந்தைகள் பின்நாட்களிள் இளம் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.

இன்றைய கல்விமுறை:

இன்று பெரும்பாலான பிரச்சனைகளுக்கு கல்விமுறையும் ஒரு காரணமாக உள்ளது. ஒரு குழந்தையின் மன வளர்ச்சிக்கு மீறிய கல்வி பாடத்திட்டம் இன்றைய குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது. கல்விச்சுமை அதிகரிப்பினால் அவர்கள் ஓய்ந்து விளையாடும் நேரம் இல்லாமல் போயிற்று. இதன் விளைவு இன்று பெரும்பாலான குழந்தைகள் சிந்திக்கும் திறனின்றி, நோய் எதிர்ப்பு சக்தி இன்றி நோய்களின் பிறப்பிடமாக வாழ்கின்றனர். இது ஒரு புறம். மற்றொரு புறம் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முக்கிய பொறுப்பிலுள்ள ஆசிரியர்களே குழந்தைகளைக் கண்டிப்பதற்குப் பதில் தண்டிக்கின்றனர். ஆசிரியர் தொழில் என்பது ஒரு புனிதமான ஒன்று. இன்று வெற்றி பெற்ற பெரும்பான்மையானவர்களுக்கு பின் எத்தனையோ ஆசிரியர்களின் தியாகமும் உழைப்பும் உள்ளது. அதற்கு சாலச் சிறந்த உதாரணம் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் Dr. அப்துல்கலாம் போன்றவர்களின் வாழ்க்கை. இப்படிப் போற்றத் தகுந்த ஆசிரியர்களில் ஒரு சில ஓநாய்களாய் வலம் வரும் சிலர் குழந்தைகள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து வருகின்றனர். இன்று ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் இதற்கான செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன. எத்தனையோ சட்டங்கள் இயற்றினாலும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவற்றில் பாதிக்கபட்ட குழந்தைகள் பின்நாட்களில் இளம் குற்றவாளிகளாக மாறுகின்றனர். இதற்கான தீர்வுகளைப் பற்றி முழுமையான செயல்திட்டங்கள் இல்லை என்பதே வேதனையான உண்மை.

சமூகப் பொருளாதாரம்:

மாறி வரும் பொருளாதார, சமூகச் சூழல்கள் மேலும் குழந்தைகளை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளுகிறது. இன்று குடும்பங்களில் ஏற்படும் பொருளாதாரக் குறைபாட்டினால் குழந்தைகள் கட்டாயமாக வேலைபார்க்கும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு குழந்தைத் தொழிலாளர்கள் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் உடல் மற்றும் மன ரீதியான வன்கொடுமைகள் மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் பெரும்பாலான குழந்தைகள் ஆளாக்கப்படுகின்றனர். சில சமயங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டு வீட்டுவேலை, பிச்சை எடுத்தல், குப்பை பொறுக்குதல் மற்றும் பாலியல் தொழில்களுக்கு அவர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். அவ்வாறு இல்லையெனில் கொலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கபட்ட குழந்தைகளே பின்நாட்களில் இளம் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2011ல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருடந் தோறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2 சதவீதக் குற்றங்கள் இளம் குற்றவாளிகளால் செய்யப்படுபவை. தமிழகத்தில் மட்டும் இளம் குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை 2007ம் ஆண்டு 805, 2008ம் ஆண்டு 911. ஆனால் இளம் குற்றவாளிகளின் குற்றங்களுக்குப் பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும், தூண்டுதலும் இருக்கின்றன என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.

முடிவாக ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை அரங்கேற்றுவதை நிறுத்த வேண்டும். அதற்குத் தேவையான விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தன் குழந்தைகளுக்கு நற்பண்புகள் கற்றுக்கொடுப்பதாக எண்ணி அவர்கள் அறியாமலேயே குழந்தைகளின் மீதான வன்கொடுமை அரங்கேற்றப்படுகிறது. பெற்றோருக்கு அடுத்தபடியாக கருதப்படும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று. கிட்டத்தட்ட எதிர்காலச் சமூகத்தையே கட்டமைக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மேலும் குழந்தைகளை வன்கொடுமைகளிலிருந்து மீட்கும் பொறுப்பும்; அவர்களுக்கு உண்டு. ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூறிய புகழ்பெற்ற வாசகத்தை போல், 'மனிதகுலம் உய்வதற்கான ஒரே நம்பிக்கை என்னைப் பொறுத்தவரையில் ஆசிரியர் பணியில்தான் அடங்கியிருக்கிறது' என்ற கூற்று மெய்ப்பட செயல்படவேண்டும். சமுதாயத்திலுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குழந்தைகளை பாதிக்காத வண்ணம் அரசு குழந்கைகள் பாதுகாப்பு அம்சத்தை வலுப்படுத்த வேண்டும்.

நன்றி



க.மலைச்சாமி B.Sc., MSW

எழுதியவர் : JamesG.Malaichamy (11-Apr-13, 12:49 pm)
சேர்த்தது : JamesGMalaichamy
பார்வை : 261

சிறந்த கட்டுரைகள்

மேலே