பாலுமகேந்திரா...என்னும் மௌனம் !
கேமரா கவிஞன் என்று அறியப்பட்ட தொப்பியணிந்த தொங்கு மீசைக்குச் சொந்தக்காரனான பாலு மகேந்திரா தனக்குள் நிரம்பிக் கிடக்கும் வாழ்வியல் உணர்வுகளை கன கச்சிதமாய் காட்சிப்படுத்தி, அந்த காட்சிகளின் மூலம் தான் சுகித்ததை ரசிகர்களுக்கு இடம் மாற்ற . அவன் மீட்டிய 'சந்தியா ராகம்' என்னும் திரைப்படம் என்னை மேகமாய் மோதிச் செல்ல.....
இதோ குளுமையில் நனைந்து கிடக்கிறேன் நான்...
சம்பவங்களுக்குள் வாழ்க்கையை கரைத்துக் கொண்டு இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மெல்லிய உணர்வுகளைக் காட்சிப்படுத்தும் கலையை எங்கே இருந்து கற்றாய் பாலுமகேந்திரா....? என்று அவரது கரங்களைக் பிடித்துக் கொண்டு கதறத்தான் தோன்றுகிறது. தகப்பனுக்கு சமர்ப்பணம் என்று வாக்கியப்படுத்திவிட்டு ஆரம்பிக்கும் திரைக்கதையில் தொடர்ச்சியாய் வசனங்களோ, இசையோ சி(ப)ல நிமிடங்களுக்கு இல்லை...
எதார்த்தத்தைப் படைக்கிறேன் பேர்வழி என்று எருமைமாடுகளுக்கு எல்லாம் அரிதாரம் பூசி படமெடுக்கும் ஒரு காலச்சூழலில் பாலுமகேந்திராக்களின் கேமரா சரியாய் காட்சிகளை பதிவு செய்வதே மிகப்பெரிய கவிதைதான். பாலுமகேந்திரா தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் தனக்குள் அடர்ந்து கிடக்கும் மெளனத்தையும், மெல்லிய இழையோடும் சோகத்தையுமே, வாழ்க்கையினூடே படர்ந்து கிடக்கும் நிலையாமையையுமே தொடர்ச்சியாய் சொல்ல முயன்று கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. பாலுமகேந்திராவின் படத்தைப் பார்த்து முடித்தவர்களுக்கு ஆழமான படத்தின் தாக்கம் இருக்குமே அன்றி, பெரிதாய் ஒரு செய்தியும் பகிர இருக்காது .. என்னைப் போலவே... ஆனால்...
ஏதோ ஒன்றை சொல்லவேண்டுமென்ற தாகத்தோடு, கரடு முரடாய் நான் உணர்ந்ததை இங்கே வார்த்தைப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன்.
முதுமையின் விடியல் சோம்பலானது மட்டுமல்ல சோகமானதும் கூட....அது ஏழை பணக்காரன் என்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இடுப்பு எலும்பிலே வலிக்கும், கணுக்கால்கள், ஆடுதசைகள், முட்டி, முழங்கால், தோள்பட்டை, கழுத்து, புஜங்கள் என்று எல்லா பிரதேசங்களிலும் இழைவுத்தன்மை வற்றிப் போயிருக்க .... வலி என்பது முதுமையின் விடியலில் நாம் விழித்து
எழும்போதே உடன் எழுந்து விடுகின்றன....
சொக்கலிங்க பாகவதர் உடல் மடக்கி காலையில் விழித்து எழும், சில நொடிகளை கேமரா மேலே நான் சொன்ன எல்லாவற்றையும் காட்சிப்படுத்தி விடுகிறது. வயதான காலத்தில் யாருமில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு வழியில் நொண்டியடித்து ஆடிப்பார்க்கும் சில்லுக்கோடு ஆட்டமும், தண்ணீரில் ஓட்டினை விட்டெறிந்து அந்த சந்தோசத்தை பேரனுபவமாய் அந்தக் கிழவர் கிரகித்துக் கொள்ளும் நிமிடங்களும்.....அதி அற்புதமானவை.
காட்சிப்படுத்த முடியாத
கதையொன்று எனக்குள்
ஊறிக்கிடக்கிறது எப்போதும்....
என் கனவுகளில் நான் கட்டும்
ஆலமரத்து ஊஞ்சலில்...
அந்தக் கதையேறி ஊஞ்சலாடும்....
நதிகள் நடை பயில்கையில்
நதியின்மேல் அது நடை பயிலும்..
பெருமழையினூடே சிலிர்க்க வைக்கும்
குளிராய் பூமி எங்கும் பிரயாணம் செய்யும்....
வயல்வெளியினூடே காற்று செய்யும்
சில்மிசங்களை அது கண் கொட்டாமல்
பார்த்துச் சிரிக்கும்....
என் கதை என்னவோ நல்ல கதைதான்..
ஆனால்...என்ன ஒன்று...
என்னால் காட்சிப் படுத்த முடியவில்லை...
அவ்வளவுதான்...!
இப்படித்தான் சந்தியா ராகம் எனக்குள் புகுந்து விளையாடி தாக்கத்தைக் கொடுத்து விட்டு ....சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டது.
சோகத்தையும் மெளனத்தையும் சேர்ந்து கொடுக்கும் முதுமை எல்லோருக்கும் பிடித்து விடாது. எனக்கு என்னவோ... சொக்கலிங்கபாகவதரின் முதுமையும், தனிமையும், வாழ்க்கையின் கோர முகங்களை வாயைப் பாதி திறந்து கொண்டு பகுதி நாக்கை காட்டி எதிர்கொள்ளும் பொறுமையும் நிரம்பப்பிடித்துப் போய்....இன்றே எனக்கு முதுமை வராதா என்ற ஒரு எண்ணத்தை பெரும் வேட்கையாய் நிறைத்துப் போட்டுவிட்டது.
பாலு மகேந்திரா கேமராக் கவிஞன் மட்டுமல்ல.....உணர்வுகளின் நாயகன்...!
இத்தனை ஜாலங்களையும் பாலுமகேந்திரா சாரை நிகழ்த்தச் சொல்லி விட்டு பிரளயமொன்று மெளனமாய் இதன் பின் நின்று கொண்டிருந்து விட்டு .. சொக்கலிங்கபாகவதரின் மனைவி இறக்குமிடத்தில்.....ஒற்றை புல்லாங்குழலாய் ...சோகத்தை இறைத்துப் போட்டு..... நம்மை கதறவைக்கிறது. அந்தப் பிரளயத்தின் பெயர் பின்னணி இசை.....!!!!!!!
இங்கே இந்தப் படத்தில் அதிகமாய் பின்னணி வாசித்திருக்காவிட்டாலும்..எப்போதெல்லாம் அவரின் வாத்தியம் இசைக்கத் தொடங்குகிறதோ அதற்கும்...அதற்கு அடுத்த இசைக்கும்.....இடையேயான இசையில்லாத மெளனம் முழுதும் இசையாகவே பிரம்மாண்டமாய் விசுவரூபமெடுத்து நிற்கிறது.
வாசிக்கும் போது வாத்தியக்கருவிகளால் மகிழ்விப்பவன் இசைக்கலைஞன் ஆனால் வாத்தியம் இசைப்பதை நிறுத்திய பின்பும் மெளனத்திற்குள் நம்மை பிடித்துத் தள்ளி ஆளுமை செய்பவன் கடவுள்...! இந்தப் படத்தில் நம்மை ஆள்வது இசை அல்ல.. ஒரு இசைக்கடவுள்...!
பாலுமகேந்திரா எடுப்பது எல்லாம் வெறும் செல்லுலாய்டு படங்கள் இல்லை... அவை எல்லாம் உயிருள்ள ஜீவன்கள்...! அவனின் கதைக்கு உயிர் இருக்கிறது, பாத்திரங்களுக்கு உயிர் இருக்கிறது, அவன் காட்சியமைப்பிற்கு உயிர் இருக்கிறது, படத்தில் அவ்வப்போது வந்து போகும் இசைக்கும் துடிப்பான உயிர் இருக்கிறது.
சிங்கக் கதையை பேத்தியிடம் சொல்லும் சொக்கலிங்க பாகவதர் சாதாரணமாய் அலுப்போடு போனால் போகிறதென்று கதை சொல்லும் சாதாரண தாத்தா அல்ல....
அவர் நிஜமாய் சிங்கமாகவே மாறி, சொல்லும் கதையில் பேத்தி ஆழ்ந்து லயித்து சந்தோசப்பட வேண்டுமென்ற பிரயாசைக் கொண்டவராய், மனைவியை இழந்து விட்டு தம்பி மகனின் வறுமையினூடே அவனுக்குச் சுமையாய் வந்திருக்கிறோமே .... என்ற இயலாமையில் இந்தக் கதையையாவது சொல்லி பயனாய் இருப்போமே என்ற சிரத்தைக் கொண்டவராய், தான் கதை சொல்லும் அந்த கணத்தில் லயித்துப் போய் குழந்தையாய் மாறியே போனவராய் அத்தனை உணர்வுகளையும் கொட்டி கதை சொல்லும் ஒரு உணர்ச்சிப் பிழம்பான பாவமான தாத்தா....
மேலே நான் சொன்ன அத்தனையையும் விளக்கிச் சொன்னது ஒரு சிறு அறையும், ஒரு சிறுமியும், சிறு விளக்கும், சொக்கலிங்க பாகவதரின் குரலும் மட்டுமே....
சந்தியா ராகத்தை வார்த்தைப்படுத்த முடியாது நண்பர்களே..... அது மெளனத்தின் மொழி....!!!! இவ்வளவு நேரம் நான் இங்கே மொழிப்படுத்திக்கொண்டிருப்பது எனது ஆற்றாமையையும் காலங்கள் கடந்து காட்சி வழியாய் சத்தியத்தையும், அன்பையும், வரலாற்றினையும் சாட்சிகளாய் எடுத்துக்காட்டவேண்டிய சினிமா என்னும் கலை...பொழுது போக்கு என்னும் அடையாளத்தை சாக்கு போக்கு சொல்லி தனது கழுத்தில் மாட்டிக் கொண்டு சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறதே என்ற வருத்தத்தையும் தான்....
அபஸ்வரங்களே மிகையாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சினிமா உலகத்தில் பாலு மகேந்திராக்களின் ஸ்வரங்கள் கர்ண கம்பீரமானவை..... நிஜமாய் உள்வாங்கிக் காணும் மனிதர்களை ஆழ்நிலை தியானத்திற்குள் தரதரவென்று இழுத்துச் செல்லும்....சக்தி பீடங்கள்....
மெளனத்தை விவரிக்க நான் எத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் முடியாது என்னும் என் இயலாமையை ஒத்துக் கொண்டு தோல்வியோடு என் பேனா தற்காலிகமாய் வாய் மூடிக் கொள்ள...
நான் மீண்டும் சந்தியா ராகத்திற்குள் மூழ்குகிறேன்....