2.கானலைத் தேடி..!-25.4.13-பொள்ளாச்சி அபி.!

சிவலிங்கம் வருவதற்குள்.. இருக்கைகளையும், கலைந்து கிடந்த புத்தகங்களையும் ஒழுங்குபடுத்தி வைத்தேன்.

சிவலிங்கம் எப்போதும் தனது கருத்துக்களில் பிடிவாதமாய் இருப்பவரில்லை.அதே சமயம் தனக்கு சரியெனப்பட்டால்,எதற்காகவும் சமரசம் கொள்பவருமல்ல. அவர் எதை ஏற்றுக் கொள்வ தென்றாலும்,அவர் ஏற்றுக் கொள்ளும்படியான நியாயங்கள் அதில் இருக்கவேண்டும். தனக்கு நியாயமாகப் படும் வரையில் அவருடைய தேடுதலும் ஓயாது..,தொடர்ச்சியாகவோ, இடைவெளி விட்டோ..அதில் முடிவு காணாமலும் விடமாட்டார்.

அதற்கு காரணம் உண்டு. தான் நம்புவது மிகச்சரி என்பதற்கு போதுமான ஆதாரங்களை தான் வைத்திருக்க வேண்டும் என்பது அவரது கொள்கை.

எப்படியும் வெகுநேரம் அவர் இன்று பேசிக் கொண்டுதான் இருக்கப் போகிறார். அதனால்.. இருவருக்குமான குடிநீர்,தேநீர்,அவ்வப்போது அவர் புகைக்கும் சிகரெட்டுகள்,புகை வெளியேறுவதற்கு வசதியாக நன்றாக திறக்கப்பட்ட ஜன்னல்கள்.. என அனைத்தையும் வழக்கம் போல தயார் படுத்தி வைத்துக் கொண்டேன்.

சிவலிங்கம்,சமீப காலம் வரை, பக்தியைப் பரப்பும் சில புத்தகங்களை மட்டுமே வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்.இந்த வீட்டுக்கு நான் குடியேறிய பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் என்ற அளவில் பழகத்தொடங்கி,நல்ல நண்பராகிவிட்டார்.

என்னிடமும் சில நூறு புத்தகங்கள் உண்டு. அவற்றை ஒருநாள் பார்வையிட்டவர், அவர் படித்த விஷயங்களுக்கெல்லாம் இணக்கமாகவோ, முரணாகவோ,விவாதிக்கும் பொருள் கொண்ட சில புத்தகங்களைப் பார்த்துவிட்டு,அவற்றை எடுத்துப் படிப்பதும்,விவாதிப்பதுமாக நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நடைமுறை எனக்கும் மிகவும் பிடித்துப் போயிருந்தது.எனக்கு ஏற்படும் சில சந்தேகங்கள் குறித்து அவரிடம் கேட்டால்,அதற்குரிய புத்தகங்களை அவர் கொண்டு வந்து தருவதும்,சில சமயம் நூலகத்திற்கு சென்று எடுத்து வருவது மாகக் கூட அவர் உதவிசெய்கிறார்.அதேபோல நானும்..!

அவருக்காகப் படிப்பதும்,அதிலிருந்து நான் கற்றுக் கொள்வதுமாக,நாட்கள் செல்வது நன்றாகத்தான் இருக்கிறது.

இது ஒருவகையில்,புத்தகவாசிப்பை தொடர்ந்து மேற்கொள்வதற்கும்,வாசித்த அனுபவத்திலிருந்து புதிய படைப்புகளை எழுதவும்,இடைவிடாமல் என்னை தயார் படுத்திக் கொண்டிருந்தது, அதற்காகவே நான் அவரிடம் மிகவும் நன்றி பாராட்டி வந்தேன்.

சிவலிங்கம் வந்துவிட்டார்.

அவரின் கையில்,பார்த்தன்,அர்ச்சுனனை அமரவைத்துக் கொண்டு,தேரினை செலுத்திச் செல்லும் வண்ணப்படத்தை,அட்டையில் தாங்கிய,பகவத் கீதை புத்தகம் இருந்தது.

“ஏனப்பா..உன்னோட வேலையெல்லாம் முடிச்சுட்டியா..?” என்று கேட்டபடியே
எனக்கு முன்னாலிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தபடியே..பகவத் கீதையை எனது கையில் கொடுத்தார்.இன்றைக்கான விவாதம் முழுக்க பகவத் கீதைதான் என்று எனக்கு புரிந்து போயிற்று.

“நீ வரட்டும்னுதான் காத்திட்டிருக்கேன். சொல்லு..என்னமோ விவாதிக்கணும்னு
சொன்னியே..” எனக்கு அவசரமான வேறு பணி எதுவும் இல்லையென்பதை இவ்வாறாக அவருக்குத் தெரிவித்தேன்.

“அப்பாடா.. அப்ப நெறய நேரம் எடுத்துக்கலாம்..”

ம்..ம்.. ஆமோதித்தேன்..

ஏம்பா..பகவத் கீதைன்னதும் உனக்கு எது முதலில் ஞாபகம் வரும்..?, சிவலிங்கம் எடுத்தவுடனே புதிர் போட்டது போல இருந்தது.வழக்கமாக கீதையென்றதும்,எனக்கு எப்போதும் போர்க்களக் காட்சிதான் நினைவுக்கு வரும்.அதற்குப் பிறகுதான் கண்ணனின் உபதேச வரிகள் மனதுக்குள் ஓடும்..’ ஆனால்..சிவலிங்கம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தக் கேள்வியைக் கேட்கிறார் எனத் தெரியவில்லையே..!’ நான் யோசித்துக் கொண்டிருந்த சிலவிநாடிகள் மிக நீண்டதாய் அவருக்கு தோன்றியிருக்குமோ..என்னவோ..?

அட என்னப்பா..இவ்வளவு யோசிக்கிறே..?
எது நடந்ததோ..அது நன்றாகவே நடந்தது..
எது நடக்க இருக்கிறதோ..அதுவும் நன்றாகவே நடக்கும்..னு தொடங்குற வரிகள் உனக்கு ஞாபகம் வரலையா..?

“ம்..ம்..”அவர் அது குறித்து எதையோ சொல்ல வருகிறார் என்பதால், ஆமோதித்தேன்.

“அட..அந்த வரிகளைக் கொண்ட பாட்டே..பகவத் கீதையிலே இல்லேப்பா..நானும் பலமுறை தேடிப்பாத்துட்டேன்..,ஆனா..கீதையின்னதும் எல்லோரும் இதனைத்தானே முதல்லே மேற்கோளாக் காட்டுறாங்க..கீதையிலே இல்லாத ஒண்ணு எப்படிப்பா கீதையோட சம்பந்தப்படுத்தி பரவுச்சு.? இதைத்தான் மெயினா உங்கிட்டே கேக்கணும்னு இருந்தேன்.”

அடுக்கடுக்கான அவரது கேள்விகள்,அதில் தொனித்த ஆதங்கம்..எனக்குப் புரிந்தது.அவர் ஏற்றுக் கொள்ளும்படியான,அவருக்கு மனத் திருப்தியளிக்கும் படியான பதிலைச் சொல்லத் தயாரானேன். உரிய முறையில் சொல்லா விட்டால்.. சிவலிங்கம் லேசில் சமாதானமாக மாட்டாரே..!
---------------
மீண்டும் தொடர்வேன்..

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (25-Apr-13, 10:19 am)
பார்வை : 128

சிறந்த கட்டுரைகள்

மேலே