சித்ரா பௌர்ணமி ***************

***************
சித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணிய பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப் பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார்.
இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பெளர்ணமி தினத்தில் அவதரித்தார்.
அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதி வந்தார்.
ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் கமாதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பெளர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.
சித்ரா பெளர்ணமி: இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சித்திரை நட்சத்திரம், பெளர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் – பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர்.
சித்திர குப்தனை வேண்டிக் கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பெளர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப் போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பெளர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
சித்ரா பெளர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

எழுதியவர் : படித்தது..... (25-Apr-13, 9:28 am)
பார்வை : 664

மேலே