3.கானலைத் தேடி..!-26.4.13-பொள்ளாச்சி அபி.!
“எது நடந்ததோ..அது நன்றாகவே நடந்தது..
எது நடக்க இருக்கிறதோ..அதுவும் நன்றாகவே நடக்கும்..
எது நடக்க இருக்கிறதோ..அதுவும் நன்றாகவே நடக்கும்..,
உன்னுடையது எதை இழந்தாய்..? எதற்காக நீ அழுகிறாய்..?
எதை நீ கொண்டுவந்தாய்..அதை நீ இழப்பதற்கு..?
எதை நீ படைத்திருந்தாய்..அது வீணாகுவற்கு..?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ..அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது..
எதை நீ கொடுத்தாயோ..அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ..அது நாளை மற்றொருவடையதாகும்..,
மற்றொருநாள் அது வேறொருவருடையதாகும்.
இதுவே..உலகநியதியும்..படைப்பின் சாராம்சமுமாகும்..” – கீதையின் சாரம் எனப்படும் அந்த வரிகள், பகவத் கீதையில்,இல்லையென்பது,எனக்கும் தெரியும். சிவலிங்கம் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்.ஆனாலும்,பகவத் கீதையுடன்,இந்த வரிகள் சம்பந்தப்படுத்தப்பட்டு,பரவியிருப்பது குறித்து,அவருடைய சந்தேகத்தை இப்போது தீர்த்துவைக்க வேண்டியதிருந்தது.
சிவலிங்கம்..நீ சொன்ன பாடல் அதில் இல்லை என்றாலும்,கீதையை முறையாகக் கற்றவர்கள் பெறவேண்டிய மனப்பக்குவத்தை இவ்வரிகள் உணர்த்துகின்றன.இந்த மனப்பக்குவம்தான்,நம்மை,ஆசை அல்லது மோகம் எனப்படும், உலக பந்தத்திலிருந்து விடுவித்து,சொர்க்கம் எனும் வீடுபேற்றை அடையச் செய்யும் என்று பகவத் கீதை உணர்த்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
கீதையை நன்கு கற்றுணர்ந்த யாரேனும் ஒரு பண்டிதர்,இதனைக் கூறியிருக்கலாம்.இதை எப்போது கூறினார்கள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதைவிட,இக்கருத்துக்கள் ஏற்புடையவைதானா..? என்பதை ஆராய்ந்து அதன் வழியில்,அதன் பயனை அடைவதே,அறிவுடமை என்பதற்காக இவ்வரிகள் பகவத் கீதையுடன் தொடர்பு படுத்தி,கூறப்பட்டு வந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.”
“சரி..நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இக்கருத்துக்கள் நடைமுறைக்கு ஏற்றதா..? மற்றவர்களுக்கு இக்கருத்துக்களைக் கூறலாமா..? ஏற்றுக் கொள்வார்களா..? இதைப்படிக்கும் பாமர மக்கள் தவறாகப்புரிந்து கொண்டு
நடக்கத் துவங்கினால்,சமூகத்தின் கதி என்னாவது.? இதன் மூலம்,தனிமனித முன்னேற்றமும்,நாட்டின் வளர்ச்சியும் சீர்கேடு அடைந்து விடும்..என்று சிலர் கூறுகிறார்களே..?”
சிவலிங்கத்தின் கூற்றை,நான் உடனடியாக மறுத்தேன். “புரிந்து கொள்ளும் திறமையில்லாதவர்கள்,ஒரு நூலை.அந்தப் படைப்பை,அதில் உள்ள கருத்துக்களை முறையாக அறிந்து கொள்ளவில்லை எனில்,அது அந்த நூலின் குற்றமல்ல.., அமுதத்தை விஷமாக்குபவர்கள் உண்டு.அது அமுதத்தின் குற்றமில்லையே..? அதுபோல தங்கள் இயல்புக்கேற்றபடி,அந்த நூலை, பொருள் படுத்துபவர்களானால், அது அந்த நூலின் குற்றமுமல்ல.!
இதுமட்டுமின்றி,புலனடக்கமும்,பக்தியும், தன்னலமில்லாத் தியாகமும்,தொண்டு புரிதலும் இல்லாதவர்களுக்கு கீதா சாரம் எந்தவகையிலும் உதவாது..! என்றுதான்,ஆன்மீகத்தில் சிறந்த பெரியோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.” எனக்குத் தோன்றிய வகையில் அளித்த விளக்கம்,சிவலிங்கத்தின் மனதை அமைதிப் படுத்தியிருக்க வேண்டும்.
அவர் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்..சிறிது யோசனைக்குப் பின், “கீதாசாரத்தின் நோக்கம் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால்..நீ சொன்னதுபோல,பக்தி,புலனடக்கம்,தியாகம் என்று உணர்வுகள்..மிக,மிக குறைந்துபோய் விட்டதே அப்பா..!” ஆதங்கம் தொனித்த அவரது குரலை நான் மீண்டும் இடைமறித்தேன். “இவையெல்லாம் குறைந்து விட்டது என்று எதைவைத்து சொல்கிறாய்..?”
“அதான் தினசரியும் பேப்பரில் பார்க்கிறோமே..! கொலை கொள்ளை,பாலியல் பலாத்காரம்..அதுவும் சிறுபெண் பிள்ளைகளைக் கூட விட்டுவைக்காத மிருக குணம்..னு படிக்கிறோமே...” படக்கென்று அவர் நிகழ்காலத்தை ஒப்பிட்டபோது,உடனடியாக அவருக்கு என்ன சொல்வது..?
----------------------
மீண்டும் தொடர்வேன்..