சில வருடல்கள்
எனது கவிதை வரிகளில்,
எழுத்து மலர்களின் வாசங்கள்
உன் நினைவு தென்றல்
கொண்டு வரும்
இன்பக் கனவின்
உயிர்த் துடிப்புகள்!
உன் அரும்புமீசை
தூரிகை தீட்டும்
இந்த கவிதைகள்
பேசும் சித்திரங்களாவது
எனது வார்த்தைகளில்
உன்னை காண்பதற்கே!
உன் நினைவு மாளிகையின்
சுவர்களில்
என் எண்ணங்களின்
ப்ரதிபலிப்புகள்
இங்கே கவிதைகளாக
என் வார்த்தைகளில்!
உன் மீசைத்தூரிகை
என் எண்ணங்களை
படங்களாக
கவிதை வரிகளில்
எழுதுவது எப்படி?
உன் மீசை செய்த
(அ)ஹிம்சை போராட்டத்தில்
என் மனம் என்னுடன்
செய்யத் தொடங்கியது
ஒத்துழையாமை இயக்கம்!
அதனால் சிறைப்பட்டது
உன் இதமான நினைவுகளில்!
எத்தனை வருடக் கடுங்காவல்
அளிக்கப் போகிறாய்
நீ எனக்கு
உன் இதயச் சிறையில்?
என் இதய வானில்
என் கற்பனைச் சிறகுகளால்
எத்தனை உயரத்தில் நீ!
கண்ணாளா,
நான் ரோஜாக் கூட்டத்தில்
ஒளிந்து கொள்ள
அனுமதி கேட்டபோது
நீ பதைத்தது
இன்னும் என் நினைவில்
நீங்காதிருக்கிறது.
நான் தொலைந்து
விடலாம் என்றாயே!
என் இதயத்தில்
இடம் பிடித்த உன்னிடம்
நான் கேட்கும் ஒரே ஒரு வரம்
"என் இதயத்தை
பிறர் எவருக்கும் நீ
கடன் கொடுத்து விடாதே.
உன் விழிகளால்
என் உள்ளத்தில்
நீ எழுதிய கனவு,
காவியமாய் திரண்டு
உன்னையே சந்தமாக்கி
உன் நினைவுகளையே
காவியப் பொருளாக்கியது!
உன் பார்வை ராகங்கள்
என் இதய வீணையில்
ஏற்படுத்திய சுரங்கள்
என் கவிதையில்
இங்கே
உனக்கு காணிக்கையாக!
ஊடகம் இன்றியே உடுருவும்
இந்த உன் பார்வை
அறிவியல் படி
கடத்தியா? ஊடுருவியா?
ஏனிந்த ஆராய்ச்சி
காதலுக்கு கண்ணில்லாதபோது
அன்புக்கு மட்டும் எதற்கு அறிவு?

