அணில் குட்டி (சிறு கதை)
அப்போது என் மகன் சூர்யா பிறந்து ஆறு மாதக் குழந்தையாக இருந்தான்.நல்ல பப்ளிமாஸ் போல் இருப்பான்.என்னிடம் சிறப்பு வகுப்புப் படிக்க வரும் பெண் குழந்தைகள் மிகவும் விரும்பி அவனைத் தூக்கித் தூக்கி வைத்துக் கொள்வர்.வேறு யாராவது கேட்டால் "எலி தங்கத்தை விழுங்கியதைப் போல "வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டார்கள்.என் மனைவியும் அவர்களோடு விளையாட்டுப் பிள்ளையாய் அலைந்து கொண்டிருப்பாள்.
ஓரிரண்டு மாதங்கள் போயிருக்கும். அப்போதுதான் என் பிள்ளைக்கு சாதம் ,இட்லி போன்றவற்றைக் கொடுக்க ஆரம்பித்திருந்தோம்.
தினமும் காலை ஒன்பது மணிக்கெல்லாம் என் மனைவி வீட்டு முற்றத்து வேப்ப மர நிழலில் நின்றுகொண்டு அவனுக்கு ஏதாவது ஊட்டுவாள்.
இந்த மரத்தில் சில காகங்கள் ,ஒரு சில குருவிகள் இருப்பது உண்டு.நல்ல புஷ்டியான வாலுடன் தாவித் திரிந்த ஒரு அணில் குட்டியும் இருந்தது.இந்த அணில் எங்கேயிருந்தது என்று தெரியாது.தினமும் என் மகனுக்கு சோறூட்டும்போது இந்த அணில் மட்டும் மரத்தில் இருந்து இறங்கி என் மகனுக்கு விளையாட்டுக் காட்டும்.என் மனைவி அவ்வப்போது அணிலுக்கும் ஒரு இட்லி துண்டைபோடுவாள்.அதை கொஞ்சமும் பயமின்றி மரத்திலிருந்து இறங்கி எடுத்து இரண்டு கைகளால் (முன்னங்கால்கள்)பிடித்துக் கொண்டு மெதுவாக சாப்பிடும்.நானும் என் வாசலில் அமர்ந்தபடி இவர்கள் விளையாட்டில் அவ்வப்போது கலந்து கொண்டதுண்டு.எங்களிடம் இந்த அணில் நன்றாகப் பழகிவிட்டது.ஏதாவது உணவுப் பொருளைக் கையில் வைத்து நீட்டினாலும் கூடக் கைமீது ஏறி அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பழகிவிட்டது."இவர்கள் நம்மை ஒன்றும் செய்து விட மாட்டார்கள்" என்று அது திடமாக நம்பியது
நாங்கள்தான் "எங்கேயாவது கையைக் கடித்து விடுமோ "என்று சந்தேகத்துடன் பயந்தபடி கை நீட்டினோம்.(நாம் மனிதர்கள் அல்லவா? அவ்வாளவு சீக்கிரமாக நம்பிக்கை வருமா என்ன?)
இப்படியிருக்கையில்,வழக்கம்போல் அது தினமும் வந்து விளையாட ஆரம்பித்தது.என் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தால் கூட சரியாகக் காலை ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக் குள்ளேயே வந்து அங்கும் இங்கும் ஓடி கீச்சுக் கீச்சென்று கத்தி அவனை எழுப்பி,அவனுக்கு காலை உணவு கொடுக்கும் நேரத்தை என் மனைவிக்கு நினைவூட்டும்.அடுத்த தெரு மரத்தில் இருந்து எங்கள் வேப்ப மரத்துக்கு ஒரு கேபிள் கட்டியிருந்ததார்கள்! நான் உதட்டைக் குவித்து "ப்சூ" என்று ஒரு சத்தம் எழுப்பினால் அந்தக் கேபிள் வழியாக தட தடவென ஓடிவந்து என் முன்னாள் நிற்கும்.
ஒரு நாள் என் மாமனார் விடுமுறைக்காக ஊருக்கு வரச் சொன்னார் என்பதற்காக கிளம்பி விட்டோம்.அங்கு நிறையப் பேரைப் பார்கவேண்டியிருந்ததால் திரும்பி வர ஒரு வாரத்துக்கும் மேலாகி விட்டது.வீட்டுக்கு வரும் வரை எங்களுக்கு அணிலின் நினைவு வரவேயில்லை. வீடு வந்து சேர்ந்த போது மாலை நான்கு மணி இருக்கும்.என்வீட்டு சுவற்றில் ஒரு அணில் நின்றுகொண்டு எங்கும் நகராமல் இருந்தது.ரொம்ப சிறியதாகத் தெரிந்ததால்
இது நம் அணில் இல்லை. நம் அணில் மிகவும் புஷ்டியாக அல்லவா இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அது அப்படியே நழுவித் தரையில் விழுந்தது. உடனே ஓடிச் சென்று பார்க்கையில் அது எங்கள் அணில்தான் என்று தெரிந்தது.மயக்கமான நிலையில் இருந்த அதற்குத் தண்ணீர் கொடுக்க முயன்றேன்.அது ஒருமுறை என் பிள்ளையைக் கண்களைத் திறந்து நன்றாகப் பார்த்துவிட்டுக் கண்களை மூடிவிட்டது.
சற்று நேரத்தில் அது இறந்து விட்டது.
எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.கடந்த ஒரு வாரமாக எதுவும் சாப்பிடாமல் இருந்து அது இறந்திருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது.
இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பேசி வம்புகள் வளர்க்கும் மனிதர்களைக் காட்டிலும் எங்கள் மீது வைத்த பாசத்தால் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட எங்கள் அணில் குட்டி மிக மிக உயர்ந்ததாகப் பட்டது!

