என்ன பாவம் செய்தாள் அவள்(ன்)

என்ன பாவம் செய்தாள் அவள்(ன்)


....``.திருமணம் முடிவடைந்து ஆறு வருடங்களுக்குப் பிறகே நிர்மலாவுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கின்றது. இதனால் மட்டற்ற மகிழ்ச்சியில் காணப்பட்ட அவள் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தாள்...
அளவுகடந்த மகிழ்ச்சியால் வீட்டுக்குள் அங்கும் இங்கும் இன்பநடைபோட்டுக்கொண்டிருந்த நிர்மலா, இந்தத் தகவலை தொலைபேசியினூடாக கணவனுக்கும் உடன் அறியப்படுத்தினாள். இனிமையான தகவலைக் கேட்டதும் ரூபனின் மனதிலும் இன்பமழை பொழிய ஆரம்பித்தது......

ரூபன், கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் வேலைபார்ப்பதால் அவனால் இந்தத் தகவலைக் கேள்வியுற்றதும் உடனடியாக ஊருக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. நிர்மலாவும் ரூபனும் காதலித்துக் கரம்பிடித்ததால் இரு வீட்டாரும் அவர்களைக் கைவிட்டுவிட்டனர். இதனால் வாடகை வீடொன்றிலேயே அவர்கள் வாழ்க்கை நடத்திவந்தனர். ரூபன் கொழும்புக்கு தொழிலுக்கு வந்தபிறகு அயல் வீட்டு கோமதி அக்காவே நிர்மலாவுக்கு சற்று உதவியாக இருந்துவந்தாள். இந்தக் காலப்பகுதியில் இடைக்கிடையே ரூபன் வீட்டுக்குச் சென்று மனைவியைப் பார்வையிட்டுவிட்டு கொழும்புக்குத் திரும்புவான்.

வைத்தியர்களின் கணிப்புப்படி நிர்மலாவுக்கு மார்ச் மாதத்திலேயே குழந்தை பிறக்கும் என ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாலும், முன்கூட்டியே அவளுக்கு பிரசவம் ஏற்பட்டுவிட்டது . எனினும், அது உச்சக்கட்ட வியாபார காலம் என்பதால் ரூபனால் மனைவியையும் பிறந்துள்ள ஆண்குழந்தையையும் பார்வையிட உடன் வீட்டுக்கு வரமுடியாமல்போனது. மறுபுறத்தில் பணமும் அவனது பயணத்துக்குத் தடங்கலாக அமைந்தது.

சரியாக ஒரு வாரத்தின் பின்னர், மனைவியையும் குழந்தையையும் பார்க்கும் ஆசையுடன் மனதில் கனவுகளைச் சுமந்துகொண்டு, இருவருக்கும் நிறைய பொருட்களை வாங்கிக்கொண்டு, கண்டி பஸ்ஸில் ஏறிய ரூபன், ஜன்னல் ஓரத்து ஆசனத்தில் அமர்ந்தவாறு எதிர்கால வாழ்க்கை குறித்து யோசித்தபடி பயணத்தை ஆரம்பித்தான்.
' நான் ஹோட்டலில் வேலைப்பார்த்தாலும், எனது மகனையாவது நன்கு படிக்கவைத்து நல்லதொரு நிலைக்கு கொண்டுவரவேண்டும்" - என அவன் மனதில் பல விடயங்கள் அலையாக வந்து செல்கின்றன. இந்நிலையில், பிற்பகல் 2 மணியளவில் பஸ் கண்டி நகரைச் சென்றடைந்தது.

அதன்பின்னர், கண்டியில் தான் வசிக்கும் கிராமத்துக்குச் செல்வதற்கு மற்றுமொரு பஸ்ஸில் ஏறிப் புறப்பட்டான். பஸ் கிராமத்தைச் சென்றடைந்ததும், மகனையும் மனைவியையும் பார்க்கும் சந்தோஷத்தில் இரு கைகளிலும் பைகளை ஏந்தியவாறு ரூபன் வேகமாக வீதியைக் கடந்தான். அப்போது, எமன் வடிவில் வந்த லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ரூபன் மீது மோதியது. கண்மூடி கண் திறப்பதற்குள் ரூபனின் உயிரும் அவ்விடத்திலேயே பிரிந்துவிட்டது. அவன் வாங்கிவந்த பொருட்கள் எல்லாம் வீதியில் சிதறிக்கிடந்தன இரத்தம் வீதியெங்கும் பெருக்கெடுத்திருந்தது.

ரூபனின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிர்மலாவுக்கு, ரூபன் இனிமேல் வரவே மாட்டான் என்ற செய்திதான் சென்றடைந்தது. இதனையடுத்து பதறியடித்துக்கொண்டு வீதிக்கு ஓடிவந்த நிர்மலா ரூபனைக் கட்டிப்பிடித்தவாறு `அம்பு பட்ட மானைப்போல் துடிதுடித்து ' கதறி அழுகின்றாள்... இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒருவாறு நிர்மலாவை வீட்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டனர்.

சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப்பிறகு ரூபனுக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. பிறந்து 20 நாட்களிலேயே தந்தைக்கு இறுதிக்கடமைகளைச் செய்யவேண்டிய துர்ப்பாக்கியநிலை அந்தப் பாலகனுக்கு ஏற்பட்டது. தந்தையின் முகத்தைக்கூட அறிந்திராத அந்த மழலை, தந்தைக்கு செய்யவேண்டிய கடமைகளை தாயின் உதவியுடன் செய்யும்போது, அதைப் பார்வையிட்ட கிராமத்தவர்களின் கண்கள் கண்ணீர் குளமாகமாறின.
( உலகில் எவருக்குமே இந்நிலை ஏற்படக்கூடாது எனப் பலர் கதறி அழுகின்றனர்...)

நிர்மலா வசித்த ஊரில் அவளுக்கு இனி யாருமே உதவிக்கு இருக்கவில்லை. அத்துடன், ` பிறந்து கொஞ்ச நாட்களிலேயே இது தந்தையை முழுங்கிவிட்டது| ' என நிர்மலாவின் குழந்தையை கிராமத்தவர்கள் வசைபாட ஆரம்பித்தனர்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிர்மலா, மூன்று மாதங்களுக்குப் பிறகு குழந்தையுடன் அந்த ஊரைவிட்டு வெளியேறினாள். நகரப் பகுதிக்கு வந்த நிர்மலா வீடு வீடாகச் சென்று வேலை தேடினாள். ஆனால், பயன்கிட்டவில்லை. வேலைதேடிச் சென்ற இடங்களிலெல்லாம், அவளின் உடலையே கொடூர அரக்கர்கள் விலைபேசினார்கள்...

தான் அழகாக இருப்பதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துக்கொண்ட நிர்மலா, குழந்தையின் எதிர்காலம் கருதி முடியை மொட்டையடித்துக்கொண்டு - அணிந்திருந்த ஆபரணங்களையும் கழற்றி எறிந்துவிட்டு வெள்ளைப்புடவையை அணிந்துகொண்டு சோகத்தை நிரந்தர முகவரி ஆக்கிக்கொண்டாள். சில நாட்களுக்குப் பிறகு அவளுக்கு வீடொன்றில் வேலை கிடைத்தது. தொடர்ச்சியாக நிர்மலா அங்கேயே வேலைப்பார்த்துவந்தாள். மகனுக்கு 6 வயதானதும் பலத்த கஷ்டத்துக்கு மத்தியில் நிர்மலா அவனைப் பாடசாலையில் சேர்த்து படிக்கவைத்தாள். தந்தை இல்லாத குழந்தை என்பதால் அதிக செல்லம் கொடுத்தே நிர்மலனை, நிர்மலா வளர்த்தாள்... தந்தை இல்லாத குறையையும் போக்கினாள். அதுமட்டுமின்றி, தனது உலகமே மகன்தான் என்ற சிந்தனையிலேயே அவள் வாழ்க்கையை ஓட்டினாள்.

இதற்கிடையில், காலங்கள் காற்றாகப் பறந்தன. நிர்மலனுக்கும் 15 வயதாகிவிட்டது. கட்டிளமைப் பருவம் என்பதால் அவன் தான் நினைப்தெல்லாம் சரி என்ற மமதையில் செயற்பட ஆரம்பித்தான். தாய் காலையில் வேலைக்குச் சென்றபிறகு பாடசாலைக்குச் செல்லாது, நண்பர்களுடன் வீட்டுக்குவந்து தீய பழக்கங்களில் ஈடுபடத் தொடங்கினான். நிர்மலாவுக்கு இந்த விடயங்கள் தெரியாது. குடும்ப நிலைமையை உணர்ந்து மகன் நன்றாகப் படித்துக்கொண்டிருக்கின்றான் என்றே கனவுகண்டுகொண்டிருந்தாள்.

ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. தாயிடம் தினமும் காசுகேட்டு தொல்லைகொடுக்க ஆரம்பித்த நிர்மலன், காலப்போக்கில் தாயை மிரட்டவும் பழகிவிட்டான். அத்துடன் நின்றுவிடவில்லை அவனது செயற்பாடுகள். நண்பர்களை வீட்டுக்கு கூட்டிவந்து தாய்க்கு முன்பிருந்தே மது அருந்தும் அளவுக்குத் துணிந்துவிட்டான்.

இவற்றைத் தட்டிக்கேட்டதும் தாயை நிர்மலன் கடுமையாகத் தாக்கினான். அன்றிலிருந்து நிர்மலா உளவியல் ரீதியில் பாதிப்பட்ட ஒரு நோயாளியாகவே இருந்தாள். இருப்பினும், அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. மகனுக்காகத் தொடர்ந்தும் வீடுவீடாகச் சென்று பாத்திரம் கழுவி உழைத்துவந்தாள்.

எந்நேரமும் தண்ணீரிலே இருந்து ஆடை, பாத்திரங்கள் என்பவற்க் கழுவியதால் 55 வயது கடந்ததும் நிர்மலாவுக்கு உடல்நலம் நன்றாகப் பாதிப்படைந்தது. இதனால் படுத்த படுக்கையிலிருந்து எழும்பமுடியாத நிலையில் அவதிப்பட்டாள் . இரவு வேளையில் வீட்டுக்கு வரும் மகன் நிர்மலன்,
' என்ன வேலைக்கு போய் தொலையலையா? காசு தாடி, தடிமாடு மாதிரி படுத்திருக்கிறாயே...." என்றெல்லாம் தாயை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், காலப் போக்கில் போதைக்காக வீட்டிலிருந்து ஒரு சில பொருட்களையும் எடுத்துச் சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து காசை குடித்து அழித்துவிட்டான்.

நோயால் அவதிப்படும் தாயை அவன் கவனிக்கவில்லை. மனவேதனையுடன் இருந்த நிர்மலா கடந்த காலங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்ததுடன், யாருக்காக வாழ்ந்தேனோ அவனே இன்று என்னைக் கைவிட்டுவிட்டானே.... ஐயோ....ஐயோ... என நித்தமும் புலம்பிக்கொண்டிருந்தாள்.. அன்று மாலை வீட்டுக்கு வந்த நிர்மலன், ' வா, டவுனுக்கு போவோம்... டக்குனு புறப்படு...." எனக் கடுந்தொனியில் தாய்க்கு கட்டளை பிறப்பித்தான். அவளால் எழும்பக்கூட முடியவில்லை. கடைசியில் ஓட்டோ ஒன்றில் புறப்பட்டனர். மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொடுக்கத்தான் மகன் தன்னை அழைத்துச்செல்கின்றான் என்ற சந்தோஷத்தில் இருந்த நிர்மலாவுக்கு நகருக்குச் சென்றதும் காத்திருந்தது அதிர்ச்சி.


வீதியோரத்தில் நிர்மலாவை, அமரவைத்துவிட்டு கோப்பையொன்க் கொடுத்து பிச்சையெடுக்குமாறு பாலுட்டி சீராட்டி வளர்த்த தாயை மகன் மிரட்டினான். இந்த வயதில் தன்னால் உழைக்கத்தான் முடியவில்லை, மகனுக்கு இப்படியாவது காசுதேடிக்கொடுப்போமே என மனதைக் கல்லாக்கிக்கொண்டு வீதியில் செல்பவர்களிடமெல்லாம் பிச்சைப் பாத்திரத்தை நீட்டியபடி நிர்மலா தினமும் மன்றாடினாள். வெயிலிலும் மழையிலும் படாதபாடுபட்டாள். மாலைவேளையில் அவ்விடத்துக்கு வரும் நிர்மலன் பணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு சென்றுவிடுவான். தாய் சாப்பிட்டாளா அல்லது இல்லையா என்றுகூட ஒரு வார்த்தை கேட்கமாட்டான்.

கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிர்மலா சில மாதங்களின் பின்னர் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள். உயிர் பிரியும் தறுவாயில்கூட ..... ஐயோ இனி யார் அவனுக்குத் துணையாக இருக்கப்போகின்றார்கள் என்பதைப் பற்றியே அவளது உள்ளம் சிந்தித்துக்கொண்டிருந்தது.

வீதியில் பிணமாகக் கிடந்த நிர்மலாவை, நகர சபை ஊழியர்கள் லொறியில் ஏற்றி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். சில நாட்கள் கடந்தும் யாருமே அந்த உடலுக்கு சொந்தம் கோராததால், வைத்தியசாலை வளாகத்திலேயே நிர்மலா புதைக்கப்பட்டாள். சொந்த மகன் உயிருடன் இருந்தும் அநாதைப் பிணமாகவே அவள் இவ்வுலகிலிருந்து பிரிந்துசென்றாள்.
முழுமையாக போதைக்கு அடிமையான நிர்மலனுக்கு தாய் இறந்த விடயம்கூடத் தெரியாது. ( சனியன் இங்கிருந்து ஓடிவிட்டது .... புருஷன் இல்லாதவ....என அவன் தாயை சதா திட்டிக்கொண்டிருப்பான். நிர்மலனுக்கு மனம் பாதிப்படைந்துவிடும் என்ற காரணத்தினால் நிர்மலனின் தந்தை எப்படி இறந்தார் என்ற விடயத்தைக்கூட அவள் சொல்லவில்லை என்பது அவனுக்குத் தெரியாது.)

வாடகை கட்டாததால் நிர்மலனை வீட்டு உரிமையாளர்கள் துரத்திவிட்டதும், தங்குவதற்கு இடமின்றி வீதிவீதியாக அலைந்த அவன், சமூகத்தில் பல சீரழிவான விடயங்களில் ஈடுபட்டு தற்போது அவல வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றான்......

(ஒவ்வொருவரும் அன்னையை நிச்சயம் போற்ற வேண்டும். கோடி செலவில் கோவில் கட்டி மரியாதை செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை. மனம் என்ற கோபுரத்துக்குள் அவளை வைத்து வழிபடவும். நிச்சயம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாகும். அம்மாதான் எம் வாழ்வின் அடித்தளம் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்தக் கதையில் வரும் தாய்க்கு ஏற்பட்ட நிலை இவ்வுலகில் வேறு எந்தத் தாய்க்குமே ஏற்படக்கூடாது என எண்ணி ஒரு நிமிடம் நாம் இவனைப் பிரார்த்திப்போமாக....)

எழுதியவர் : இரா. சனத் கம்பளை (20-May-13, 5:18 pm)
சேர்த்தது : raasanath
பார்வை : 273

மேலே