“வரலாறாய் வாழ்பவர்”

வாசமிக்க மலர்களில் கூட
பேசும் மலர் குறைவு
வானாளாவ வாழ்ந்தவர்களில்
வரலாறாய் வாழ்பவர் குறைவு

தொண்டின் மறு உருவமாம்
தூய்மையின் திரு உருவமாம்
என்றும் நம்முள் வரலாற்றுச் சுவடாய்
அன்பின் தெய்வம் "அன்னை தெரசா"

படிப்பும் நகைப்பும் இளமையில் இயல்பாம்
விருப்பும் வெறுப்பும் தனிமையின் உணர்வாம்

வெள்ளை புடவையில் நீலகரையும்
இனிதே சொல்லும் அவர் தம்உருவம்
இணைந்தே நாமும் அவர் பின்னே
உறுதியுடன் தான் அணிவகுப்போம்

தேன்மிக்க மலரைத்தான் வண்டு நாடும்
சோறிட்ட கையில்தான் குழந்தைகள் கூடும்
அகிலம் காக்கும் ஆண்டவனாயினும்
அரவணைக்கும் அன்னை கைதான் அன்பாகும்

அதிசயமிக்கவரின் ஒரு விரலே
எங்கள் வாழ்க்கையின் விளக்காகும்

உலகை காக்கும் கடவுளின் சேவகி
உயிரிலும் உணர்விலும் அவர்தம் சாதனை
இளம்புயலாக இந்தியா வந்தார் - இன்றும்
நம்முடன் இளமையாய் வாழ்கிறார்

சாக்கடை தந்த சேரி குழந்தையை
குப்பை தொட்டி பெற்ற குழந்தையை
ஊனமுற்றிடினும், மனவளர்சி குன்றிடினும்
இந்திய தூணை இனிதே அணைத்தார்

ஏழையின் ஏக்கம் தனதென்றார்
அதுதான் வாழ்க்கை சுகமென்றார்

வெள்ளை ஆடையில் ஏழையின் குடிசையில்
மருத்துவ உதவிமேற்கொண்டார்
ஆர்வம் பொறுப்பு உற்சாகம்
ஒருங்கே கொண்டவர் நம்அன்னை.

அன்பும் பாசமும் அவரிடம் அருவி
காசும் பணமும் அவருக்கு தூசு
தனக்கு அளித்த வண்டியை கூட
ஏழைக்காகவே ஏலம்விட்டார்

ஏழை குழந்தைக்கு தாயென்பதே- தன்
எதிர்கால லட்சிய வாழ்க்கை என்றார்

இரந்த எச்சிலை தனதாக்கி
ஏழைக்கு எங்கே உணவென்றார்
பொறுமையின் இலக்கணம் தன்னுள் கொண்டு
புதுவழி ஒன்றை கற்பித்தார்

உறவே வெறுத்த தொழுநோயாளியை
தனதே உறவாய் ஏற்றுக் கொண்டு
தொழுநோயாளிக்கு தொண்டு செய்து
வானம்தொட்டு வரலாறாய் நின்றார்

காச நோய்க்கு காவியமான தெரசா பெயரை
தனதாக்கி தளரா தம்பணி செய்து வந்தார்

மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ்னால்
அடிமட்ட ஏழைக்கு பாரபட்சம் இன்றியும்
முதியவருக்கு காப்பகம் “காளிகட் இல்லம்”.
அன்னையின் சாதனை இன்றும் சொல்லுமே

பரிசுக்கே பரிசளித்து கௌரவித்தோம்
அன்னையின் பெயரால் நோபல்கே
உலகை சுற்றும் அன்னைக்கு
கடவுசீட்டு என்பதே தேவையில்லை

தூக்கம் மறந்து தூயபணி செய்தார்
ஏழைக்கு அன்னை என்றபெயர் கொண்டார்

ஏழைக்கு கல்வியும் வயிற்றுக்கு உணவுமே
வாழ்க்கை கண்ணென உணர்ந்தார்
தனக்கு விருந்திட்ட உணவை கூட
ஏழைக்கு பகிர்ந்தார்..அகிலத்தை மிஞ்சினார்

இத்தனை ஏழையை நெஞ்சில்தாங்க
அவருக்கு வலித்தது சிறிதாக
கடவுளும் விரும்பி அவரை அழைக்க
கலங்கியே நம்மிடம்விடை கொண்டார்

இத்தனை சிறிய இதயத்தில்
அத்தனை பெரிய எண்ணம் கொண்ட
இவரல்லவோ "வரலாறாய் வாழ்பவர்"
என்றால் மிகையில்லை...

எழுதியவர் : bhanukl (30-May-13, 10:03 pm)
பார்வை : 537

மேலே