முக்காலக் கவிஞர் .

பாரதிதான் யாரம்மா?
பாப்பா உனக்குத் தெரியுமா?
பாப்பா பாட்டுப் பாடிய
பாரதியார் தானம்மா..
ஓடி ஆடச் சொன்னவர்.
ஓயக் கூடாதென்றவர்.
காலை படிக்கச் சொன்னவர்.
கடியக் கூடாதென்றவர்
புதுமைக் கவிஞரவர்.
புதுக்கவிதை துணிந்தவர்.
வசனமும் கவிதையாக
வளர்ந்திட வளர்த்தவர்.
தலைப்பாக் கட்டு கவிஞராம்.
தடித்த மீசைக்காரராம்
தமிழோடு பிறமொழிகள்
திறனும் பெறச் சொன்னாராம்.
கருப்புப் பொட்டு இட்டவர்,
கருப்புக் கோட்டும் அணிந்தவர்,
காளியைத்தான் வேண்டுவார்
கவிகள் பாடித் தூண்டுவார்..
கூடிப் பழகப் பாடினார்.
பாடி மகிழக் கூறினார்.
தேடித் தேடி தமிழனை
தேச உணர்வை ஊட்டினார்
நதிகளெல்லாம் இணைந்திட
நாடு வளம் செழித்திட
சேது வழி செய்திட
சிறக்க நலம் சொன்னவர்.
ஈழமதைத் தமிழோடு
இணையப் பாலம் கேட்டவர்.
வாழுந்தமிழ் உலகினை
வரையத்திட்டம் போட்டவர்.
உலகக் கவி கீட்சையும்
உயரம் தாண்டி நின்றவர்.
திலகமான திராவிடமே
உலக மூலம் என்றவர்.
மொழிகள் பல கற்றவர்,
மொழி பெயர்ப்பு செய்தவர்.
மொழிகளெல்லாம் பழகியே
வழி சொன்னார் வளரவே!
சிட்டுகளின் நண்பரவர்
பட்டுவிடக் கூடாதென்றார்.
கெட்டழியும் சூழலை
தொட்டு அன்றே காட்டினார்.
பத்திரிக்கைகள் நடத்தினார்.
எத்திசையும் பரவினார்.
வெள்ளையனின் கண்ணிலே
விரலை விட்டு ஆட்டினார்.
எட்டையபுரம் பிறந்தவர்
இந்தியாவில் வாழ்ந்தவர்.
சாட்டையாகி சமூகத்தின்
சடங்குமுறை ஒழித்தவர்..
சாதிமதக் கொடுமைகளை
நீதி கூறி ஓட்டினார்.
வேதங்களும் பேசுவதை
விளங்கவே எடுத்திடித்தார்.
காதல் செய் என்றவர்
கட்டுடல் கொண்டவர்
எமனையும் காலாலே
எட்டியே உதைத்தவர்
முக்காலக் கவிஞர் இவர்
எக்காலமும் வாழுவார்.
இக்காலக் கவிஞருக்கும்
தக்கோலம் தந்தருள்வார்.
கொ.பெ.பி.அய்யா..