கொன்றொழிக்க துடிக்குது என் மனம் (தாரகை)
சனியன் இந்த சாதிவெறி குணம்
மனிதம் கொன்று ஆக்கிவிடும் பிணம்
விரல் பட்டால் தீட்டு,
நிழல் பட்டால் பாவம்
குருதிக் குழாய் வெடிக்குமளவு சினம்
கொன்றொழிக்க துடிக்குது என் மனம்.
மலமது மஞ்சள் நிறம் உண்போர்க்கு,
இரத்தமது சிவப்பு நிறம் எல்லோர்க்கும்.
மணம் நிறம் அதில் ஏதும் மாற்றமுண்டா?
மானம் கெட்ட மேல்சாதி மடையர்களுக்கு
இதயமது கருப்புநிறம் என்பேன்டா
ஏன்- இதயமே இல்லையென்றும் சொல்வேண்டா
கால்நடையின் கழிவுகளை உரமாக்கி
கழனி வயல்வெளிகளில் வியர்வை சிந்தி
காகம் எச்சம் புழு ஊரும் மண்ணில் விளையும்
தானியங்கள் காய்கறிகள் உனக்கு வேண்டும்
அப்போது நாறவில்லை என் வியர்வைமேனி
இப்போது தெரிகிறதா என் தாழ்ந்தசாதி.
பால்கறந்து தர வந்த என் வீட்டு பெண்ணின்
பால்சுரக்கும் மார்பின்மேல் உன்கண்கள் மேயும் படுத்து புணர்ந்து பாழ்படுத்தியனுப்பும் பொழுது
பாழாய்ப்போன உன்சாதி தடுக்கவில்லை???
உழைக்கும் வர்க்கம்,நீ வதைக்கும் கீழ்சாதி.
உட்கார்ந்து அதை உறிஞ்ச வெட்கம் இல்லை???
மண்ணென்றும் மயிரென்றும் திட்டமாட்டேன்
மயிர்தானே தலைகவசம் உயர்ந்ததன்றோ?
மண்தானே நமை தாங்கும் தாய்மடியன்றோ?
எதனோடும் உனை ஒப்பிட்டு பேசமாட்டேன்
இழிவென்று இவ்வுலகில் ஏதும் இருந்தால்
இழியோனே! உன் ஈனப்பிறவி ஒன்றேயாகும்!

