நகைச்சுவை கவிதை

நாலு மணிக்கு எழுப்பச் சொல்வான்
நானும் பாடம் படிக்கணும்பான்
நாலு மணிக்கு எழுப்பிவிட்டா
நடு ஹால்ல தூங்கிவிழுவான்

அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அனைத்துப் பாடமும் படிக்கணும்பான்
அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டா
அப்புறமா எழுப்பு என்பான்

ஆறு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அல்ஜீப்ரா போடணும் என்பான்
ஆறு மணிக்கு எழுப்பி விட்டா
அப்பக் கூட படிக்க மாட்டான்

மாலை நேரம் படிக்கச் சொல்லி
மரியாதையாய் சொன்னாக் கூட
மணிக்கணக்கா புத்தகத்தை
மாறிமாறி பாத்துக் கிடப்பான்

கணக்குப் பாடம் போடச் சொல்லி
கட்டளைகள் இட்டாலும்
கள்ளத் தனம் செய்திடுவான்
காந்திக் கணக்கு எழுதிடுவான்

இயற்பியல படிக்கச் சொல்லி
இறுதிவரை சொன்னாலும்
இஷ்டப்படி நடந்திடுவான்
இயலாதுன்னு அடம்பிடிப்பான்

வேதியியல் படிக்கச் சொல்லி
வேண்டுமட்டும் சொன்னாலும்
வேடிக்கைதான் பார்த்திடுவான்
வேஷம் போட்டு நடித்திடுவான்

உயிரியல படிக்கச் சொல்லி
உட்கார வைத்தாலும்
உண்மையில படிப்பதுபோல்
உருக்கமா நடிச்சிடுவான்

எப்படித்தான் படிக்க வைப்பேன்
எனக்கு ஒண்ணும் புரியலங்க
என்மகன என்ஜினியரா
எப்படி ஆக்குவேன் தெரியலங்க

பதில் :

படிப்போட மகத்துவத்த
பக்குவமா சொல்லிடனும்
படிக்கின்ற சூழலைத்தான்
உருவாக்கித் தந்திடனும்

தேவையான உதவிகள
தானா வந்து செஞ்சிடனும்
தேவைப்படும்போதெல்லாம்
தேநீர் கலந்து தந்திடனும்

அவனுக்கு குறிக்கோளை
அமைத்துத்தான் தந்திடனும்
அவனோட குறிக்கோள்தான்
அனைவர்க்கும் வந்திடனும்

கேபிள் டிவி இணைப்பைத்தான்
கட்பண்ணி வெச்சிடனும்
கம்பியூட்டர் இன்டர்நெட்ட
கட்டாயம் நிறுத்திடனும்

இதையெல்லாம் செஞ்சாலே
இன்ப மகன் படிச்சிடுவான்
இருநூறுக்கு இருநூறு
எல்லாத்திலும் வாங்கிடுவான்.


நன்றி ;;;சைவன்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (21-Jun-13, 1:44 pm)
பார்வை : 473

சிறந்த நகைச்சுவைகள்

மேலே