மஞ்சள்

மங்களத்தின் மறுபெயர் மஞ்சள்!
தங்கத்தின் நிறம் மஞ்சள் !
அறிவின் நிறம் மஞ்சள் -வாழ்க்கை !
நெறியின் குறியீடும் மஞ்சள் !

செம்மண் குழைந்த செரிவான நிலத்தில்
செம்பொன் நிறத்தில் செழிக்கும் மஞ்சள் !

கொத்து கொத்தாய் குலமே தழைக்க
நித்தமும் நாடுவர் குளிர்ந்த மஞ்சளை

திருமணம் புதுமனை திருவிழா எதிலும்
திருவிளக்குடன் முதலிடம் வகிக்கும் மஞ்சளே !

தேய்ந்தாலும் தெய்வ தன்மை உடையவள்
காய்ந்தாலும் கற்பகத்தரு பெருமை உடையவள்

வாழ்வின் இலக்கணத்தை வாகாய் உணர்த்தியவள்
வாழ்வதன் பொருளை வழிய வழிய சொன்னவள்

மருந்தாய் உணவாய் மகிமை பெற்றாய்
நறுந்தேன் செய்யும் நலமெல்லாம் நீ செய்தாய்

மூக்கொழுகல் தலைப் பாரம் மார்ச்சளி எல்லாம்
தீக்குள் நுனி சுட்டுப் புகையை முகர்ந்தால்

சில நொடியில் சளிஎன்னும் சிக்கல் தீரும்
பார் இது பாட்டி வைத்தியம் ஆனால்
பாரெல்லாம் போற்றும் பழைய வைத்தியம்
***
உழைத்த உழவர் உவப்புடன் போற்ற
உழவர் திருநாள் பொங்கல் நன்னாளில்

மஞ்சளே முன் வரிசையிலே நீ தோரணமாய்
கொஞ்சம் நாணும் கொடியிடை பாவையாய்

சாய்ந்தும் இருப்பாய் காய்ந்தும் இருப்பாய்
காய்ந்தாலும் மணம் கொடுப்பாய் மங்களமாய்

வறுமையில் அடகு கடையில் வாசம் தங்கத் தாலி
சில நாள் சுமங்கலி கழுத்தில் நீ தான் தாலி

பொறுமையாய் நெஞ்சில் தவழ்ந்து பின்னர்
முகமெல்லாம் கலந்து முத்திரை பதிப்பாய்
இகமெல்லாம் தேடினும் இனி நிகர்இல்லை உனக்கு

அரிசி உடன் கலந்து அட்சதை மேன்மை
பரிசத்துடன் மணமக்கள் மீது பாசமாய்த் தூவ-உன்

பிறப்பின் நோக்கம் நிறைவாய் நிலைக்கும்
சிறப்பாய் உலகில் சீர் பெற்று வாழ்வாய்!
மஞ்சளே நீ மங்களமாய் வாழ்வாய்!!

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (30-Jun-13, 8:24 pm)
பார்வை : 3269

மேலே