வருங்கால இந்தியாவின் மாணவர் பங்கு (கட்டுரை)

இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான். மான் + அவன் = மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்+அவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றாகள். இப்பருவத்தினரின் மீது ஊக்கம் செலுத்தி வருவதால் மாண்+அவர்கள் பங்கு வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது.

பெருமைமிக்க திறமைகள் இப்பருவத்தில் தான் கிடைக்கும். மண்ணைக் குழைத்தால்தான் பாண்டம் வரும். மாணவர்களை செம்மைப்படுத்தினால்தான் இந்தியா வளரும். இந்தியாவின் ஆக்கப் பூர்வ சக்தியே இந்த மாணவர்கள் தான். மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.

தேசியத் தலைவர்கள், மாணவர் பருவத்திலேயே இந்தியாவிற்கு ஆற்றவேண்டிய பங்குகளை செய்ததினால்தான் இன்றும் அவர்கள் சரித்திரத்தில் நிலைத்து இருக்கிறாகள். அன்றைய காலக் கட்டத்தில் சுதந்திரம் தான் பிறப்புரிமையாக கருதப்பட்டது. இன்றையக் காலக்கட்டத்தில் மேலும் ஒரு பாரம் மாணவர் சமுதாயத்தின் மீது விழுந்துள்ளது. அதுதான் தீவிரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம். வேலிப் போட்டால்தான் விலங்குகள் பயிரினை மேயாது. இந்தியாவின் வேலிகளாக மாணவர்கள் இருந்தால்தான் தீவிரவாதங்கள் தலைத் தூக்காது. காந்தி தேசத்தில் கோட்சேக்களை வளரவிடக்கூடாது. அவர்களை அழிப்பதில் பெரும்பங்கு மாணவர்களுக்கு இருக்கிறது என்பதை இன்றைய தருணத்தில் மாணவர்கள் முழுமையாக உணரவேண்டும்.

மாணவர்களின் சேவைகளில்தான் இந்தியாவின் தேவைகள் எதிர்ப் பார்க்கப்படுகிறது. இன்றையக் காலக் கட்டத்தில் இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதங்களை ஒடுக்குவதற்கு மாணவர் சமுதாயம் பல நல்ல யுக்திகளை கையாள வேண்டும். இந்த இந்திய மண் எதிரியையும் வாழ வைக்கின்ற கருணை மண். அதனால்தான் இந்த மண்ணில் மட்டும் மனித இனத்திற்கு எதிராக மரண தண்டனைகள் மறுக்கப்படுகின்றன. எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் சிறைவாசத்தின் மூலம் அகிம்சை வழியில் அவர்களை திருத்தக்கூடிய கண்ணியம் இந்த மண்ணிற்கு உண்டு. கண்ணியத்தைக் கடைப் பிடிக்கக்கூடிய சட்டத் திட்டங்களைப் பின்பற்றக் கூடிய மாணவ சமுதாயம் உருவாக வேண்டும். (அல்லது) உருவாக்கவேண்டும்.

ஒளிதரும் நெருப்பாக இருக்க வேண்டுமே தவிர ஒழிக்கும் நெருப்பாக மாணவ சமுதாயம் மாறக் கூடாது. இதற்க்கு சிறந்த எடுத்துக் காட்டாக நமது இந்திய ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான
Dr A P J அப்துல் கலாம் போன்ற மாணவர்கள் சமுதாயத்திற்குத் தேவை. கற்றக் கல்வியால் இந்தியாவிற்கு ஆற்றக் கூடிய கடமைகளையும் கற்று வரக்கூடிய மாணவர் சமுதாயம் தேவை.

புயல் வீசினால் படகை செலுத்த நினைப்பது தவறு. தீய சக்திகளை தீய சக்திகளால் அழிக்க நினைப்பது தவறு. புயலைப் போன்ற தீய சக்திகளை பொறுமையோடு யோசித்து களைவதற்கு தேவையான காரியங்களை உருவாக்க வேண்டும்.

படிக்கின்றப் பருவத்திலேயே இடையூறு வந்தால்தான் சிறந்த சிந்தனை வளரும். ஈர மண்ணில்தான் பூக்கள் அழகைக் கொட்டும். மாணவப் பருவத்தில்தான் மனதைக் கட்டுப் படுத்த முடியும். அதற்கான பயிற்ச்சிகள் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டப் பயிற்சிப் பெற்ற மாணவர் சமுதாயத்தின் மூலம் இந்தியாவின் தேவைகள் எதிர்ப் பார்க்கப்படுகின்றன. வருங்கால இந்தியாவின் மாணவர் பங்கு இன்னொரு கால சரித்திர சுவடாகும்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன் (13-Jul-13, 7:24 am)
பார்வை : 49388

மேலே