வாலி இறங்கற்பா

அம்புகளால் வாலியை துளைத்த
இராமனின் கோவில் ஶ்ரீரங்கத்தில் .
பழி தீர்க்க
வரிகளால் நெஞ்சை துளைத்த
வாலி பிறந்ததும் ஶ்ரீரங்கத்தில்.
வாழும் போது உன் கவிதையால்
என்னுடன் பேசினாய்.
இப்போது என் கவிதையால்
உன்னுடன் பேசலாமா?
தாடி வைத்த வாலி
அரை நூற்றாண்டு
பாடி வைத்து
சகாப்தம் ஆனாய்.
வானொலியில் வாழ்கை தொடங்கி
வான் ஒளியாய் முடிக்கிறாய்.
சொற்கத்திலும் கண்ணதாசனுடன்
போட்டி போட துடிக்கிறாய்.
தமிழ் மேல்
அக்கறை கொண்டவன்
தமிழை தனியாய் விட்டு
அக்கரை ஏன் போனாய்?
படகோட்டியாய் தொடங்கி
திரை கடல் கடந்தவன்
வாழ்கைப் படகை
ஓட்டி முடித்து விட்டாயோ?
கறை இருந்தும் இனிமையானவன்.
நரை இருந்தும் இளமையானவன்.
யயாதிக்கு தன் இளமையை கொடுத்த
புரு போல
தமிழுக்கு உன் இளமையை
கொடுத்து விட்டாய்.
அதனால்
இறப்பில் மரணத்தை
தோற்கடித்து விட்டாய்.