அவள் அது வாழ்க்கை...!(ஒரு பெண்ணின் கதை)
ஏதொ ஒரு நாளில் தாய்க்கு மகளானாள்..
பருவம் எட்டும் முன்னரே
கட்டுப்பாட்டுச் சிறையில் கைதியானாள்..
படிப்பெனும் ஆசை இருந்தும்
விதி வசத்தால் பேதையானாள்..
பருவம் திறந்து விட..
ஆயுள் கைதியாய் உள்ளிருக்கப்பட்டாள்..
எவரோடும் சிரித்து பேச
சாக்கடை வார்த்தைகளால் சல்லடையாக்கப்பட்டாள்...
மனமின்றியே மணமேடைக் கண்டாள் மணவாளனுக்காக.மனதாசை துறந்தாள்..
நாட்கள் செல்ல செல்ல
மண போதை தெளிந்து குடி போதைக்கு சொந்தமானான் கணவன்..
சில நாட்களில் அடித்து
துவைக்கப்பட்டாள் அவனால்..
அணைத்து கிழிக்கப்பட்டால் பல நாள்..
நேசமின்றி அவனால் நடந்த
அந்தரங்கத்தால் புலனடக்கி புழுவானாள்...
..
பிறவிப் பெருங்கடலில்
ஒன்று தாய்மையாம்
அது அவளுக்கு தாமதமாக..
முன்பு இதைப் பற்றி
தள்ளி நின்று பேசியவர்கள்
இப்போது எட்டி நின்றே பேசினார்கள்..
மலடி என்ற பட்டமளிப்பு விழா
தினம் தினம் தெருவுக்கு தெரு
அவளுக்கு நடந்தேறியது..
ஆண் பிள்ளையாம் அவனை விடுத்து
அவமானத் துளிகளை அவளிடம் தெளித்தனர்..
பரிசோதித்துக்கொள்ளலாம் என சொன்னதற்கு
வேண்டதவள் ஆனாள்..
மாமியார் வீட்டிற்கு...
காலம் சென்றது இப்படியே..
இனி துயரமில்லை அவளுக்கு
காரணம் எல்லாம் பழகி விட்டாள்.
காரணமின்றி குடித்தவன்..
காரணம் சொல்லியும் குடித்தான்..
குடித்த கடமை தீர்க்கவே
வஞ்சக வார்த்தையால் அவளை வீழ்த்தினான்..
விழுந்து விழுந்து விரக்தியானாள்..
வியாதிகள் ஒன்றன் பின்னே
ஒன்றாய் அவளை தேட..
நொடிந்து போனாள்..
முன்ஜென்ம பாவம் என ஊரார் தூற்ற.
.இருந்து உயிரை எடுக்கிறாள் என உறவு தாக்க ..முடிவாய் மடிந்து போனாள்..
மருத்துவமனை சம்பிரதாயத்திற்கு
செய்யப்பட்டது பிரேத பரிசோதனை..
இறுதியாய் கூறினார் மருத்துவர்.
."குழந்தை பேருக்கு முயற்சிக்கவில்லையா அந்த வாய்ப்பு அவர்களுக்கு இருந்துள்ளது"
உடல் வாங்க வந்த கணவனின்
நிலை சொல்ல விருப்பமில்லை..
எல்லாம் முடிந்திருந்தது..
அவள் அது வாழ்க்கை...