சுமையில்லா வாழ்வில் சுகமில்லை (தாரகை)

பனி சுமந்த புற்களுக்கு
களைப்பில்லை
கனி சுமந்த கிளைகளுக்கு
வலியில்லை
ஓயாமல் சிமிட்டுவதால் இமைகள்
தேய்வதில்லை
சாயாமல் நிற்பதால் மரங்கள்
சலிப்பதில்லை

இடி விழுந்து பூமி
உடைவதில்லை
மின்னல் வெட்டி வானம்
கிழிவதில்லை
சுற்றுவதால் பூமிக்கு தலை
சுற்றவில்லை
துடிப்பதால் இதயத்திற்கு
சோகமில்லை

விழுவதால் மழைத்துளிக்கு
காயமில்லை
அழுவதால் பிறந்தசிசுக்கு
நோவுமில்லை
காயாத மலரில்லை
தேயாமல் நிலவில்லை

கொய்யாத மலர்கள்
மாலையாவதில்லை
நெய்யாத நூல்
சேலையாவதில்லை
தோல்விகள் என்றும்
நிரந்தரமில்லை
வெற்றி என்பது
தூரமில்லை!

சுமைகள் சுமையல்ல
ஒத்துக்கொள்.
தோல்விகள் தோல்வியல்ல
ஏற்றுக்கொள்.
வெற்றியை தக்கவைக்க
பழகிக்கொள்.
உன் வாழ்க்கை உன் கையில்
உணர்ந்துகொள்!!!

எழுதியவர் : தாரகை (29-Jul-13, 4:31 pm)
பார்வை : 6791

மேலே