ஏதோ எதற்கோ,,,
ஏதோ எதற்கோ,,,
அகங்காழ்த் திரைமறைவிலே
அணையிட்ட கடற்கரைக்காயல்
கொதிக்கிறது குருதிக் குழம்பு
அகண்டாகார ஞானமுணர்ந்திட்ட
நீலோற்பல விழிகளில்
ஓர் ஏமாற்றப் பிடித்தம்
எதற்கென்றே அறிந்திடாத
நெடுநாள் காத்திருப்புகள்
காயக்கிலேசத் தவங்களாக
எண்மருவி கடிகையும்
கணினித் திரைக்
கட்டகத் தாம்பாளமும்
கடன் கொடுத்த எதிரிகளாக
பழைய கணக்கின்
மீள்வருகை பதிவுகளெல்லாம்
புனர்ஜென்மவரங்களாக
தென்றல் காற்றிடம்
ஏனோ கோபம்
ஆறாதப் புண்களுக்கு
தீண்டாமல் சற்றுத்
தள்ளிச் செல்லக்கூடாதாவென
நியதியில் சில மாற்றங்கள்
காமக் கிழத்தியின்
கைப்பட்ட ரோஜா
வாசம் மாறாமல் கிடக்கிறதாம்
சிறையுண்ட புதரிலே
நீண்ட ஆயுள் வேண்டி
காஞ்சனத்தூள் மொழுகிய
காம்பரா தாழ்வாரங்களில்
தொடர்ச்சங்கிலிக் கனவுகள்
ஆர்ந்து கிடக்கும்
தேயிலை வற்றல்களினிடையிலே
எதையோ தேடுவதைப் போல
சாசுவதத் துலக்குதல்களினால்
புலவியரும்பிட
சார்புநிற்றலுக்கு
துணைவரக்கேட்க அலசுகிறேன்
ஆரிருள் விழுங்கிய
என்னுள் ஒருவனை
அனுசரன்

