என் பணி ... எனக்கான தருணம்...!!

என்னை நானே புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத தருணம் இது!
முதல்முறையாக பரிதவித்த தருணம்... படித்து வேலை இல்லாமல் இருந்த நிமிடங்கள்!
அனைத்து கேள்விகளுக்கும் ஆளாக வேண்டிய கட்டாயம்.குடும்ப சுமைகளை தூக்கி சுமக்க வேண்டிய தருணமும் கூட!
பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் அலைந்த அலைச்சல்களுக்கு விடை கிடைத்தது !
கிடைத்த முதல் வேலை... சம்பளம் பற்றி கவலையில்லாமல் மனம் முதலில் சம்மதித்தது !
புதிய வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அனைத்தையும் கற்று கொள்ள அதிக ஆர்வம் காட்டியது மனது!
புதிய இடம், புதிய நண்பர்கள் என அனைத்தும் நிறைவாய் அமைய பணியும் பிடித்து போனது.
வாங்கிய முதல் சம்பளம் குறைவாக இருந்தாலும், மனம் நிறைவாய் இருந்தது... இது என் உழைப்பு என்ற பெருமிதத்தோடு!
சுமையென எதுவும் தெரியவில்லை வந்த வருத்தங்களும் பனியென விலகிபோனது... பணியில்!
இந்த வசந்தங்களை எனக்கென்று காட்டவே காலங்கள் விலகி ஓடி இருக்கிறது என்பது தாமதமாய் புரிந்தது.
ஐந்து வருடங்கள் உருண்டு ஓடிவிட்டது.... இருந்தாலும் அதே பழைய மகிழ்ச்சி, சலிப்பு வராத அளவு காலங்களும் கடந்து விட்டது!
இன்று சூழ்நிலை காரணமாக பணியை விட வேண்டிய கட்டாயம். விரும்பமின்றி எழுத்துபூர்வமாய் எழுதி கொடுத்துவிட்டேன்!
என் கடைசி நாள் அதிக அழுத்தங்களுடன் துவங்கியது. என் பிரிவின் வருத்தங்களை அனைவரிடம் உணர முடிந்தாலும், பதில் வருத்தங்களுக்கு இடம் கொடுக்காவண்ணம் புன்னகையித்து கடந்து விட்டேன்.
கடைசி கட்ட பணிகளில் என் கடைசி கையெழுத்தையும் பதித்தாயிற்று.கடந்து செல்ல வேண்டியது மட்டும்தான் மிச்சம்.
எனக்கு என்று உரிமை கொண்டாடிய என் கல்லூரி என்னை விட்டு கொடுத்த தருணத்தை மீண்டும் எனக்கு தந்து விட்டது இந்த பணி!
புன்னகையோடு எழுந்தேன் கண்ணீரை மறைத்து கொண்டு... வார்த்தைகள் இன்றி கைகளை மட்டும் அசைத்து விடை பெறுகிறேன்... அனைவரிடமிருந்தும் !!!