காயும் ஈரம்...(21-ஆம் நூற்றாண்டின் புதுச்சேரியின் சிறந்த சிறுகதை )

காயும் ஈரம்...

“ஒரு ஜென்மம் எத்தனைப் பேருக்குத் தான் இப்படி சொற்ப காலத்தில் காசி தீர்த்தம் விடுமோ? பசி... அகோரப் பசி கொண்டலையும் பிரம்ம ஹத்தி இன்னும் எத்தனை பேரை முழுங்கப் போறதோ... பகவானே” என்று தன்னைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டே போகும் மன்னியை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் கனகா!

சுப்பு சாஸ்திரியின் அந்திம நேரம் வெகு வேகமாக நெருங்கிக் கொண்டு இருந்தது.

“இழுத்துண்டு இருக்கும் போதே ரேழியிலே கொண்டு வந்துப் போட்டுங்கோ... காசி தீர்த்தம் கொடுத்தாச்சோனோ”. கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது.

“இன்னும் கொஞ்ச வருஷம் இருந்திருக்கலாம் என்னமோ அவசரமா போயிண்டு இருக்கார்” வெங்கிட்டு அய்யர் பேசினார்.

“ஆம்பிடையான் போயிட்டப் பிறகு வாழ்க்கையிலே என்னங்காணும் இருக்கு. சுப்பு சாஸ்திரி போயிண்டு இருக்கிறதும் சரிதான்” கோபால சாஸ்திரி காரியங்களுக்குரிய சாமான் பட்டியல் தயாரித்தவாறு பேசினார் ­ தன் மனைவி இறந்துப் போய், நான்கு ஆண்டுகள் ஆகியும் சரீர பசிக்காக அலைபாயும் உள்ளம் கொண்டவர்.

சுப்பு சாஸ்திரியின் இளமைக் கால சினேகிதன் கிட்டய்யர் , “எல்லாரும் காசி தீர்த்தம் விட்டாச்சோன்னா? கனகா... வா... நீயும் தீர்த்தம் விடு உன் தோப்பனார்க்கு” என்றார்.

கனகா தன் அருகில் வந்து நின்றவுடன் சுப்பு சாஸ்திரியின் மூடிய வல கை கனகாவை நோக்கி எழுந்தது.

“கனகா , சுப்பு என்னமோ நோக்குத் தரான் போல... என்னன்னு பாரு” கிட்டய்யர் சொன்னார்.

“ஆமா அம்மா சொத்தையெல்லாம் எழுதிக் கொடுத்துட்டா ! தோப்பனார் தன் பங்குக்கு எந்த எழவைத் தரப் போறாளோ”...? பொரிந்தாள் மன்னி.
கனகா தன் கையை பிரித்துப் பார்த்தாள்.

குங்குமம் வைத்த ஒரு சிறு ஜாதி மல்லிகைப் பூ... கீழே விழுந்தது.

“போற நேரத்திலேயாவது சுப்பு சாஸ்திரி தன் ஆம்பிடையாளின் அபிலாஷையை பூர்த்தி செய்ய சம்மதம் கொடுத்தாரே. கனகா உன் சம்மதத்தையும் சேர்த்து காசிதீர்த்ததோடு ஊத்து” வெங்கிட்டய்யர் கூறினார்.

காசி தீர்த்தம் வழிந்தது!

குமுறினாள் கனகா!

“சரி...சரி...நாழியாகிறது. சாமாவுக்கு ஆள் அனுப்பியாச்சோன்னோ?“ கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது.

பிராமணார்த்தத்திற்கு வர வேண்டியவன் தான் இந்த சாமா.

எழவு மற்றும் திவம்சம் காலங்களில் இரண்டாவது இலைக்கு உரிய ராஜா இவன். இவன் அரசாட்சி அப்போதுதான்.

முதல் இலைக்குரிய வாத்தியார் யாராய் இருந்தாலும் சாமாவோட இரண்டாவது இலைக்கு அவ்வூரில் பெரும்பாலும் போட்டியே இதுவரை இருந்தது” கிடையாது.

தானுண்டு தன் வேலையுண்டு என தனது ‘குட்டிச்சுவர்’ போன்ற சிதிலமடைந்த ஒட்டு வீட்டில், ஒன்றிரண்டு ஓடுகள் கூரையாய் உள்ள இடத்தில் அப்பிராணியாய் கிடப்பான்! ஆனால் நல்ல உடற்கட்டு! களையான முகம்.

(தொடரும்....)

எழுதியவர் : மீண்டும் அகரம் (15-Aug-13, 7:13 am)
பார்வை : 114

மேலே