மதி, விதியை வெல்லுமோ?

முன்னொரு காலத்தில், மிகச் செழிப்பாய் ஒரு கிராமம் இருந்தது. அக் கிராமம் செழிப்பாய் இருப்பதற்கு அம்மண்ணில் நடந்த விவசாயமே காரணம். விவசாயம் நன்றாய் நடந்ததற்கு, அவ்வூர் மக்களின் ஒய்வுஒழிச்சல் இல்லா உழைப்பே காரணம். உழைப்பு மட்டும் இருந்தால் போதுமா, அவ்வூரில் பெய்த மழையும் காரணம். மழை பெய்து, நிலம் செழித்து, விடாமுயற்சியுடன் உழைப்பிருந்தால் மட்டும் போதுமா, இவை அனைத்திற்கும் மேலே தெய்வ அனுக்ரகம் வேண்டாமா? அதுவும் ஆதிநாராயணப் பெருமாள் வடிவில் அங்கிருந்தது.

காக்கும் தெய்வம் ஆதிநாராயணப் பெருமாள் கடைக்கண் பார்வையோடு, அவரது பாஞ்சசன்யம் எனப்பட்ட (குறிப்பு : பாஞ்சசன்யம் என்பது பெருமாள் கையில் உள்ள சங்கு, அதை எடுத்து பெருமாள் ஊதினால், இடி இடித்து மழை பெய்யும் என்பது நம்பிக்கை) பெருமை மிகு சங்கநாதத்தால், மழை பெய்து, பூமித்தாய் செழித்து, மக்கள் வியர்வை சிந்த உழைக்கும்போது, எந்த ஊர்தான் செழிப்பாய் இராது.

ஒருநாள், இப்படி செழிப்பாய் இருந்த ஊருக்கு ஒரு மகரிஷி வந்தார். அவருக்கோ மிகுந்த பசியாய் இருந்தது. தன் பசியறிந்து, உணவிட யாராவது முன்வரமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு அவ்வூர் மண்ணை மிதித்தவருக்கு, மக்கள் அனைவரும் உழவு வேலையில் மும்மரமாய் இருக்க, ஏமாற்றமே எஞ்சியது.

அக்கால முனிவர்களின் கோபம் ஊருக்கு ஆகாது. கோபத்தின் உச்சத்தில் இருந்த அம்முனிவரோ, மக்கள் அனைவரும் உழவு வேலையில் மும்மரமாய் இருந்ததாலேயே தன்னுடைய பசியை அறியவில்லை என்பதால், இனிமேல் அவர்களது ஊரில் பசியும், பஞ்சமும் தலைவிரித்தாடவேண்டும் என்று சாபமிட்டார். அதற்கு பிள்ளையார் சுழியாக, இனிமேல் இவ்வூரில் மழை பெய்யாமலிருக்க, பெருமாள் சங்கெடுத்து ஊதக்கூடாது என்பதால், பெருமாளைப் பார்த்து, பெருமாளே இவ்வூர் மக்களைக் காத்ததுபோதும். இன்றிலிருந்து, உன் சங்கைத் தலைக்கு வைத்துக்கொண்டு நன்றாக நீ உறங்கு என்று கட்டளையும் இட்டுவிட்டுப் போனார்.

பிறகென்ன, பெருமாள் தூங்க, மழை பொய்க்க, விவசாயம் கெட்டொழிய ஆரம்பித்தது. விவசாயம் கெட்டதால், மக்கள் பசி, பஞ்சத்திற்கு ஆளாயினர். கால்நடைகள் இறக்க நேர்ந்தது. ஊரும் சுடுகாடாக மாறத்துவங்கியது. ஒவ்வொரு குடும்பமாக, அவ்வூரை விட்டு அகல ஆரம்பித்தனர்.

இவை ஒருபுறமிருக்க, ஊரில் ஒரேஒரு புத்திசாலி வயோதிகர் மட்டும் எது நடந்தாலும் அதை கண்டுகொள்ளாமல், தன்பாட்டுக்கு ஏறு பூட்டி, தனது வறண்ட நிலத்தை உளுதுகொண்டே இருந்தார்.
நாட்கள் நகர்ந்தன. கிட்டத்தட்ட ஊரே காலியாகிவிட்டது.

இவ்வாறு இருக்கும்போது, ஒருநாள், பெருமாள் கண்விழித்தார். ஊரை சுற்றிப்பார்த்த பெருமாளுக்கு, மக்களைக் காணாததால், ஒரே வருத்தமாகப் போய்விட்டது. இவ்வளவிற்கும் நடுவில் ஒரேஒரு வயோதிகர் மட்டும் எந்தக் கவலையும் இன்றி, உளுதுகொண்டிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்ட பெருமாள், அவருக்கு அருகில் சென்று, என்ன பெரியவரே, ஊரே பஞ்சத்தில் இருக்கும்போது நீர்மட்டும் ஏன் வறண்ட நிலத்தை உளுதுகொண்டிருக்கிரீரே, உமக்கென்ன பைத்தியமா? என்று கேட்டார். அதற்கு அந்த முதியவரும் பெருமாளைப் பார்த்து, லேசாகப் புன்னகைத்துவிட்டு தன பணியைத் தொடர்ந்தார். பெருமாளுக்கோ பெருத்த அவமானமாகிப்போய்விட்டது.

உடனே, அந்த பெரியவரின் முன்னின்று, ஓய் வயோதிகரே! அனைத்து லோகங்களையும் காத்து இரட்சிக்கும் பெருமாள் நான், எனக்கு பதில் சொல்லிவிட்டு பின்னர் வேலைசெய்யும் என்றார் சிறிது கோபத்துடன்.

உடனே அப்பெரியவரும், பெருமாளை வணங்கி, இறைவா, என்தொழில் எனக்கு மறக்கக்கூடாது என்பதற்காகவே நான் உழுது உழுது பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ, உன் கடமைகள் அனைத்தையும் மறந்து, நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறாய்.

உதாரணத்திற்கு, உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றார் பெரியவர். உடனே பெருமாளும் தயாராக,

பெரியவரும் பெருமாளிடம், உன் இடது மேற்கையில் இருப்பது என்ன? என்று கேட்டார். அதற்கு உடனே பெருமாளும், என் இடது மேற்கையில் சங்கு இருக்கிறது என்றாராம். உடனே முதியவரும், அதை வைத்து என்ன செய்வாய் என்று கேட்டதற்கு, பெருமாளும் சங்கை வைத்து ஊதுவேன் என்றாராம். அடுத்து பெரியவரும், இத்தனை நாள் தூங்கிய உனக்கு, சங்கில் எந்தப்பக்கம் வாய் வைத்து ஊதுவது என்பது இந்நேரம் மறந்துபோயிருக்கும். முடிந்தால் ஒருமுறை ஊதிக்காட்டு பார்க்கலாம் என்றார். அதைக் கேட்ட பெருமாளும், சங்கை ஒருமுறை பார்த்துவிட்டு, வெற்றிப்பெருமிதத்துடன் ஊதினாராம்.

பாஞ்சசன்ய சங்கின் ஒலி கேட்டதும், இடி இடிக்க, மழை கொட்டித்தீர்க்க, ஏரி குளம் நிறைய, நிலங்கள் பண்பட்டு மீண்டும் செழித்ததாம் அக் கிராமம்.

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (20-Aug-13, 11:34 pm)
பார்வை : 213

மேலே