வணக்கத்திற்குரிய வயிறே

மனித பிறப்பின்
மத்திய அரசே !
கருவறையை சுமக்கும்
கவிதை தொகுப்பே !
பெண்ணினத்தை பெருமைப் படுத்த வந்த
பெண்குயின் பறவையே !

நீ
நேரத்திற்கு
பசி என்கிற சாட்டை அடிக் கொடுப்பதால் தான்
ஓடி ஓடி
உழைக்கிறான் மனிதன் .

ஆமாம் ,
கைகால்களை
உழைப்பிற்கு அனுப்பி விட்டு
மூன்று வேளை
வாடகை வசூலிக்கும்
சூட்சமத்தை எங்கு கற்றாய் ?

இதயம் முதல் குடல் வரை
வாழவைக்கும் நீ
வாய்ப் பகுதிக்கு மட்டும்
எப்படி அடிமை யாகினாய்?
அது ,
அரைத்து போடுவதை
அடைகாக்கும் கிடங்காய்
எப்படி மடிந்து போனாய் ?

சிலருக்கு தொப்பையாய்
சிலருக்கு சப்பையாய்
இந்த
பாகுபாட்டை எங்கு பயின்றாய் ?

உணவின் அஞ்சலகமே !
உயிரின் வாழ்விடமே !

தயிரோ ....பயிரோ
சோறோ.....மோரோ
மீனோ .....மானோ
ஆடோ......மாடோ
வெந்த தோ...வேகாததோ
மருந்தோ ....விருந்தோ
அனைத்தையும்
அள்ளிப்போட்டுக் கொள்ளும்
அரசியல் வாதியே .....

உன்னை
புகையால் ,போதையால்
புகையிலையால்
மனிதன்
பாழாக்கும் போதெல்லாம்
உடனே
சூரிய கதிராய் சுட்டெரிக்காமல்
நுரையீரலை கரியாக்கி
குடலை கொலையாக்கி
பின்
ஆறடிக்குள் அடக்கி
பேசா ஊருக்கு
பேசாமலேயே போகச்செய்யும்
பேரறிவாளன் நீ !

நீ
இருக்கும் போது
கண்டுகொள்ளாத மனிதன்
நீ மறியல் செய்தால் தான்
மருந்தை கொண்டு
பேச்சுவார்த்தைக்கே
வருகிறான் !

நீ
என்ன எமனுக்கு கைப்பிள்ளையா
சித்திர குப்தனின் சித்தப்பா மகனா
நீ
இருக்கும்
நம்பிக்கையில் தானே
இந்த உடலே
ஒய்யாரமாய் இயங்குகிறது

என்ன செய்தாலும்
கொஞ்சம் பொறு !
நீ கோபப்படும் போதெல்லாம்
மருந்துகளால்
உன் காலில் அடிக்கடி
விழுவோம் .....
மன்னித்து மறு வாழ்வு கொடு !
மானுடம் தழைக்கட்டும்
அதன் பின்பாவது,
உன் வாயிற் பகுதியை
மிகுந்த உணவு
நிரப்பமால் போகட்டும் !



!

எழுதியவர் : yathvika (27-Aug-13, 1:25 am)
பார்வை : 193

மேலே