மகளே...என் செல்வ மகளே !
கல்யாணம் பண்ணிக்கிற அத்தனை ஆம்பளைகளும் ஒரு வித ஈகோவோடதான் பண்ணிக்கிறாங்கனு நான் சொல்ற வார்த்தையில் ஈகோன்னு சொல்ற வார்த்தை ரொம்ப பேர சங்கடப்படுத்தலாம் ஆனால், ஈகோன்னு நான் சொல்றது ஒரு வித ஆணுக்கே உரிய ஹீரோத்தனத்தை...
காலம் காலமா சினிமாவுல ஆண்களை ஹீரோவா பாத்துட்டு, எப்பவும் ஒரு கூட்டத்தையே அடிச்சு துவம்சம் பண்ணி, வயதான அம்மா, அப்பா, அப்புறம் தங்கை, காதலின்னு எல்லோரையும் காப்பாத்தி கை புடிச்சு கூட்டிட்டு ஜம்பமா வரத பாத்து பாத்து...ரத்ததுல ஊறிப்போயி இருக்கற விசயம். ஆண் அப்டின்னு சொன்னா.. எல்லாத்தையும் பாத்துக்குவான் எல்லா பிரச்சினையும் தீத்துடுவான் அப்டீன்னு ஒரு பொது புத்தியோட சேர்ந்த சூழல் நமக்குள்ள ஆழமா பதிஞ்சு போயிடுச்சு.
அதுவும் நாம ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு போலியான கலாச்சாரத்துல பெண் என்பவள் குடும்பத்தலைவியா இருக்குறதுதான் சரி அப்டீன்னு ஒரு முடிவு பண்ணி....இந்த இடத்துல ஒரு சின்ன விளக்கம் கொடுக்க விரும்புறேன்....அதாவது குடும்பத்தலைவின்னா வீட்டு வேலைகள் செய்து, சமைத்து, கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்து, வேறு ஆண்களுடன் பேசுவது தவறென்று போதிக்கப்பட்டு, குனிந்த தலை நிமிராமல் வெளியில் செல்லும் போது கணவன் பின்னாலேயே சென்று கணவன் பின்னாலேயே வந்து..இப்படியாக நீளும் இத்தியாதிகளை எல்லாம் ஓரளவிற்கு இப்போ கடந்து வந்திருக்கிறோம் என்றாலும்...
திருமணம் என்ற பந்தத்திற்கு பிறகு அதுவும் மிகுதியாக புதிதாக திருமணமான ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்குள் புரிந்தவர்கள் கூட மாட்டிக் கொண்டுவிடும் ஒரு இடம் இருக்கிறது. புரியாதவர்கள் இறுகிப்போய் வாழ்க்கை முழுதும் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். என்ன அந்த புரிதல் என்ன அந்த புரியாமை...?
திருமணம் செய்து கொடுத்தபின் அந்த பெண்ணை தனது சொந்தமாக, தனது காதலாக, தனது உரிமையாக பார்ப்பதில் தவறுகள் இல்லை என்று கொள்ளும் அதே நேரத்தில் அங்கே பொசசிவ்னெஸ் என்ற அரக்கன் சில நேரம் பெண்களிடமும் பழக்கத்தின் காரணமாக பல நேரம் ஆண்களிடம் விளையாட்டுகள் காட்டுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிகுதியான பாதிப்புக்குள்ளாவது பெண்களாயிருப்பதை கணக்குகள் கூட்டி பெண்களை மையப்படுத்தி இக்கட்டுரையை நகர்த்த வேண்டியதை அவசியமாகக் கொள்கிறேன்.
நமது சமூக அமைப்பின் படி பெண் தனது வீட்டாரை விட்டு கணவனோடு வந்துவிடுவது இயல்பான ஒரு விசயமாக பார்க்கப்பட்டாலும் உளவியில் ரீதியாக ஒரு வீட்டில் 23 வருடங்களை ஆடிப்பாடி, கொண்டாடி விட்டு புதிதாய் ஒரு வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் பெண்களின் மனோநிலை எப்படியிருக்கும் என்று இதுவரைக்கும் சரியான ஒரு பார்வை இல்லாமல் போனதற்கு பின்புலமாய் பெண்ணடிமை மனோபாவம் இருந்ததும் ஒரு காரணம்.
பெண்ணடிமைத்தனம் முற்றிலுமாய் தீர்ந்து போய்விடவில்லை அதன் கருஞ்சிவப்பு நிறம் வெளுத்துதான் போயிருக்கிறது என்பதற்கு அவரவர் மனசாட்சிகளே சிறந்த ஆதாரம்.
திருமணமான புதிதில் பெண்ணை தனது மருமகளாக அந்த வீட்டின் பெண்ணாக உரிமைகள் கொடுக்கும் அதே நேரத்தில் அவளது பிறந்த வீட்டு பாசத்தையும், பிறந்த வீட்டில் உள்ளவர்கள் பெண்ணின் மீது வைக்கும் பாசத்தையும் தேவையில்லாத ஒரு விடயமாக பார்க்கும் ஒரு கண்ணோட்டம் இயல்பாகவே வந்துவிடுவதற்கு காரணம் இவள் வீடு இனி கரம்பிடித்தவனின் வீட்டின் நலனைப் பற்றியே இவள் இனி நினைக்க வேண்டும் என்ற ஒரு மனோபாவம் புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்கிறது. இதற்கு காரணம் காலங்களாய் பின்பற்றி வந்த பொது புத்தி.
ஒரு ஆண் தனது குடும்பத்தாருடன் உறவாட, தனது பெற்றோரின் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது கடைமையாக கொள்ளப்படும் ஒரு சமூக கட்டமைப்பில் பெண் தனது பெற்றோர்களைப் பற்றி நினைப்பதும் தன் பிறந்த வீட்டில் தொடர்ச்சியாக ஒரு மாதம் இருந்து வரலாம் என்று எண்ணுவதும் பெரும் குற்றமாக பார்க்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் சில கணவர்கள் அதை தங்கள் தனிப்பட்ட இருவரின் காதலுக்கே எதிரான செயலாக பார்க்கும் மனோ பாவமும் இருக்கிறது.
கல்யாணம் பண்ணி மனைவிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நமக்கு புடிச்சதெல்லாம் செய்யணும், நமக்கு பிடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணனும், லிப்ஸ்டிக் போடக்கூடாது, கொஞ்சம் பளிச்சுனு ட்ரஸ் பண்ணக்கூடாது....சந்தோசமா சிரிச்சு பேசக்க்கூடாது....!!!
இன்னும் தமிழ் நாட்டின் புற நகரங்களில் எத்தனை வீடுகளில் பெண்கள் வேலைக்கு செல்வதையும், துணிகரமாய் தனித்தியங்குவதையும் ஆதரிக்கும் கணவன்கள் இருக்கிறார்கள்? மாமனார் மாமியார்கள் இருக்கிறார்கள்? மாறிடுச்சுன்னு நாம சொல்றது ஒரு அதிக பட்சமா 30% இருக்குமா பாஸ்...? அதுக்கும் மேலயா இருந்திடப் போகுது?...திருமணம் என்ற சடங்கிற்கு பிறகு நீ மனைவி நான் கணவன், இது நமது சமூகம் இப்படித்தான் இயங்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை முழு மனதோடு ஏற்கும் மனோபாவம் இருவருக்குமே இருக்க வேண்டும். இங்கே திணித்தல்களோ கட்டாயப்படுத்துதலோ இருக்க கூடாதுதானே?
'அம்மாவிற்கு வேலை செய்ய முடியவில்லை அதனால எனக்கு கல்யாணத்துக்கு பெண் பாத்துகிட்டு இருக்காங்க.....'என்று சொல்லும் என் சக தோழர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்....பெண் பார்த்து திருமணம் முடிப்பது என்பது வீட்டு வேலை செய்ய என்று ஒரு மனோபாவத்தை மாற்றுங்கள், திருமணம் செய்வதின் நோக்கத்தை சரியாக கொள்ளுங்கள் , திருமணத்திற்கு பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கு உதவுதல் அல்லது வீட்டு வேலைகள் செய்வது என்பது இயல்பாய் நிகழும். இங்கே பெரிய வித்தியாசம் இல்லாதது போலத் தோன்றினாலும் வித்தியாசம் இருக்கிறது. எடுத்துக்கொள்ளும் மனோபாவங்கள் கடைசி வரை நமக்குள் நின்று வழி நடத்தும்...என்பது மறுக்க முடியாத உண்மை....!
பெரும்பாலும் ஆண்கள் திருமணத்திற்கு பிறகு செக்யூரிட்டி ஆஃபீசர்களாகவே மாறி விடுகிறார்கள்...இதற்கு ஏற்கனவே மூளையில் ஏற்றி வைத்திருக்கும் கற்பிதங்கள் தப்பாமல் உதவி செய்கின்றன. இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே என்று தடைகள் போடும் அதே வேளையில் கொஞ்சம் பெண்களின் ஆலோசனைகளைக் கேட்டும், தனித்தியங்கச் சொல்லியும் பாருங்கள் ஆச்சர்யப்படும் வகையில் அவை நமது செயல்களை விட சிறப்பாகவே இருக்கும்.
காலப்போக்கில் பெண்களும் இதற்கு அட்ஜஸ்ட் செய்து வாழத் தொடங்கி விடுதலும் சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது.
ஆனால்....
மறுமுனையில் இருக்கும் பெற்றோர்...அதுவும் பெண்ணை பெற்று சீராட்டி தாலாட்டி கொஞ்சி குலாவி தலைவருடி, அவள் தவழ்வதைப் பார்த்து, நடப்பதை பார்த்து சிரிப்பதை பார்த்து, ஓடுவதை பார்த்து, தோளோடு கட்டிக் கொண்டு தன் சூட்டில் உறங்க வைத்து....
சூடாமணியே...
என் செளந்தர சுந்தரியே
என் குலம் தழைக்க வந்த
குல விளக்கே...
அம்மா, பெண்ணே, தாயே
என் கண்ணே, உயிரே.....
இரவும் பகலும் ஒரு தகப்பனாய், தாயாய் சீராட்டி, அவள் கண்ணில் தூசு விழுந்தால் இதயம் கசிந்து, கைப்பிடித்து உலகம் சொல்லி, ஊரைச் சுற்றி, அவள் நடக்க, அவள் பேச, அவள் சிரிக்க என்று வாழ்க்கையை எல்லாம் அவளின் அசைவுகளுக்குள் சூட்சுமமாய் நிறைத்து விட்டு.... அவள் மெல்ல வளர்கையில் பிரமித்து, முதன் முதலாய் அவள் நீண்டதாய் பின்னலிடும் நேரத்தில் வியந்து, வாழ்க்கையின் அர்த்தங்கள் விளங்கி...என் மகளே.. என் மகளே... என்று சீராட்டி பூச்சூடி..........அத்தனை நினைவுகளையும் நெஞ்சுள்ளே தேக்கிவைத்து.. அவளுக்கென்று வரன் பார்த்து....
அம்மா, மகளே....இவள் தானம்மா உன் கணவன், இவன் தானம்மா உன் வாழ்க்கை, நான் உன் தகப்பனம்மா, உன்னை வளர்த்த ஒரு பிரியமுள்ள பித்தனம்மா, உன்னை மறவாமல் என்னுள்ளே வைத்திருப்பேனம்மா, உன் வாழ்க்கை இனி வேறு, உன் உலகம் இனி வேறு உன் கணவனே இனி உனக்கு தாயாய் தகப்பனாய் இருப்பானம்மா...தந்தை என்னும் உறவுக்கு இனி அங்கே வரவொன்றில்லையம்மா...
காலச்சக்கரத்தின் தன் சுழற்சியில் இனி உன்னை தூர நின்றே பார்க்கும் பாக்கியமே அறமாகப் எனக்குப் போனதம்மா...
உன்னை சீராட்டி வளர்த்த
நினைவுகளை எல்லாம்
என்னுள் காலமெல்லாம் சுமக்கும்
ஒரு சந்தோசக் கூலியம்மா
உன் தகப்பன்!
பிஞ்சாய் உன்னை பொத்தி எடுத்து, என் தோள் சுமந்து, உன் வலி பொறுக்க முடியாத போதெல்லாம் உனக்காக கதறியழுது, காலமெல்லாம் உன்னோடு வரும் பாக்கியமற்று இதோ உன்னை கைப்பிடித்து கொடுக்கிறேனம்மா....
அப்பா மகனே, என் மருமகனே....காலமெல்லாம் என் கண்ணுள் சுமந்த கவிதையை, நான் வடித்த அற்புத ஓவியத்தை, என் செப்புச் சிலையை, என் உயிர் சுமக்கும் என் தாயை உனக்கு தாரமாக்கி தந்தேனப்பா...! அவள் கண்கள் சிவந்து அழும் நேரங்களிலெல்லாம் என் உயிரே போய் திரும்புமப்பா...! உள்ளங்கையில் சுமந்த என் குழந்தையை உன்கையில் கொடுக்கிறேனப்பா...."
அந்த மறுமுனை இந்த மறுமுனை பற்றி சொல்லில் கொண்டு வந்து விளக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த மறுமுனை நோக்கி நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன்.. என்னுள் கலக்கமும், ஒரு பயமும் இருக்கிறது. நாளை என் மகளின் கணவன் யாராய் இருப்பான்? எந்த வீடு புகப்போகிறாள் இவள்? அந்த வீடு அவளை அடக்கி ஆளுமா? இல்லை எதார்த்த வானில் சிறகடிக்க விடுமா? தகப்பனாய் என் பாசங்கள் புரிந்து என்னை அவளோடு அளாவளாவ விடுமா? இல்லை பொது புத்திகள் எல்லாம் சேர்ந்து என்னை அவளை காணவிடாமலேயே தடுக்குமா? கண்டாலும் வார்த்தைகளை ஒதுக்கி விட்டு பரஸ்பரம் மட்டுமே பேசவைக்குமா?
எனக்குத் தெரியாது.
என் மனைவியிடம் பல முறை நானே கூறியிருக்கிறேன் ...திருமணமானால் கணவன் தான் எல்லாமே..அப்புறம் என்ன அப்பா, ஆட்டுக்குட்டி என்று....அவளும் என் மீதுள்ள காதலில் மாறிவிட்டாள்....! ஆனால் அந்த தகப்பன்....இன்னமும் தன் மகளுக்கு நேராக தொலைபேசி செய்தால் மாப்பிள்ளை ஏதும் நினைத்து விடுவாரோ என்று எப்போதும் எனக்கு தொலை பேசி செய்து விட்டு பிறகு பக்கத்தில் என் மனைவி இல்லாவிட்டால்...என்னிடம் அனுமதி பெற்று அவளிடம் பேசும் வழக்கத்தை எனது திருமணமாகிய இந்த ஏழு வருடத்தில் கடந்த ஒன்றரை வருடமாகத்தானே நான் உடைத்துப் போட்டேன்......
நானேல்லாம் படித்தவன், நானெல்லாம் புதிய தலைமுறைகள் பற்றி பேசுகிறேன், நானெல்லாம் முற்போக்குவாதி, நானெல்லாம் ஒரு சீர்திருத்தவாதி, என்று என்னையே எரித்து எரித்து இன்னமும் மாறமுடியாமல் சமுதாய கட்டமைப்பு என்னும் ஒரு முள்வேலி என்னை குத்திக் கிழிக்கிறது, உடலெல்லாம் இரத்தம் வழிய நான் மாற்றத்துக்கு என்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறேன்............
ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை.

