தேரிலே உலாவரும் தேவனோ?(தாரகை)
தேரிலே உலாவரும் தேவனின் அழகினை
நேரிலே கண்டு வியந்தேன் - அவன்போல்
பாரிலே யாரையும் பார்த்ததில்லை ஆக
பாவைநான் காதலில் வீழ்ந்தேன்!
வீதியுலா வருகின்ற வீரனே உன்னிடத்தில்
சேதியொன்று சொல்லத் துடித்தேன் -இந்த
சோதிநிலா நெஞ்சை சுண்டி இழுத்ததால்
சொக்கி இக்கவி வடித்தேன்!
உண்மையும் நேர்மையும் உன்னிடம் கண்டதால்
என்னையும் உன்னிடம் தந்தேன் -இனி
பொன்னையும் பொருளையும் மண்ணையும் கூட
மன்னவன் அன்பிற்காய் இழப்பேன்!
அமைதியாய் நதியருகே அமர்ந்திருந்த வேளையிலே
இமைமூடாக் கனவொன்று கண்டேன் -அதில்
உமைச்சேரும் காட்சியால் சுமையெல்லாம் இறங்கிட
உற்சாகத்தில் மெய் மறந்தேன்!
கண்டதும் வந்த காதலோ என்றெண்ணி
தன்போக்கில் நீயும் போனால் -வேறு
தண்டனை இவளுக்கு தரணியில் வேறில்லை
என்பதை மறந்திட வேண்டாம்!!!