குருவிக்கார குமாரு..! – சிறுகதை- பொள்ளாச்சி அபி

எட்டாவது படிக்கிற இந்தக் குமாருப் பையனுக்கு, பள்ளிக்கோடம் லீவு விட்டாச்சுன்னா.., சேக்காளிகளோட சேந்து சுத்துறதைவிட,தனியா தோட்டம்,காடு,குளம் குட்டைன்னுதான் சுத்தப் புடிக்கும். வானத்துலே,குளத்துலே,மரத்துலே உக்காந்துருக்குற பறக்குற,பாடுற பட்சிகளை யெல்லாம் பாக்குறதுலதான் அவனுக்கு ரொம்ப இஷ்டம்.வித,விதமா பாக்குற பறவைகளெயெல்லாம்,படமா வரைஞ்சு வெச்சுக்குறதும் அவனோட பொழுதுபோக்காவே போச்சு.அதுக்குன்னே தனியா ஒரு பெரிய நோட்டு வெச்சுருக்கான்னா பாத்துக்குங்களேன்.
அன்னிக்கு ஞாயித்துக் கிழமை.வழக்கம்போல லீவு.காலையிலே நிதானமாய் சாப்புட்டுட்டு இருந்தான் குமாரு,திடீர்னு கீச்..கீச்..னு சத்தம் கேட்டது.நிமிர்ந்து பாhத்தப்போ,வாசல்படியோரமா ஓட்டுச்சந்துலே உக்காந்துகிட்டு இருந்த அந்தப் பெண் சிட்டுக்குருவி கண்ணுலே பட்டுச்சு.அதோட அலகுலே ஒரு இறக்கையையும்,காய்ஞ்சுபோன சின்ன வைக்கோலையும் சேத்துப் புடிச்சுகிட்டு, பரபரப்பா அங்கியும் இங்கியும்,துறதுறுன்னு பாத்துகிட்டு இருந்துச்சு.‘அட..இத்தனை நாளா இல்லாத அதிசயமா,இந்தக் குருவி இங்க வந்து உக்காந்திருக்கு..’குமாருக்கு அதைப் பாக்கவே சந்தோஷமாயிருந்துச்சு.
குமாரோட தட்டுலே போடறதுக்காக,அத்தை சரசு ஆவி பறக்க இட்லியை எடுத்துட்டு, அடுக்களைக்குள்ளேருந்து வெளிய வந்ததைப் பாத்துட்டு,அந்தக் குருவி அப்படியே,‘விருட்’னு வெளிய பறந்துருச்சு.
இப்ப வீட்டுக்கு வெளியே இருக்குற கொய்யா மரத்துலேருந்து,குருவியோட சத்தம் கேட்டது. கீச்..கீச்..,மனுஷங்களைப் பாத்தா அதுக்கு அவ்வளோவ் பயமா..? இல்லே எச்சரிக்கையான்னு தெரியலே..!
குமாரு அவசர அவசரமாய் இட்லிகளை பிச்சு முழுங்கி,கையைக் கழுவிட்டு வெளிய ஓடிவந்து கொய்யா மரத்துக்கு மேல உக்காந்திருந்த குருவியைத் தேடினான். கீச்..கீச்..,கீச்..கீச்.. இப்போ அடுத்தடுத்தாப் போல இரண்டு குருவிகள் கத்துற சத்தம் கேட்டது.கிளைங்களோட,இலை இடுக்குலே அந்தப் பெண்குருவியோட,ஒரு ஆண்குருவியும் சேந்து,கத்திட்டு இருந்துச்சு.அதோட அலகுலேயும், கொஞ்சம் கனமா ரெண்டு மூணு வைக்கோல் இருந்தது.ஆனா, ரெண்டும் ஒரே இடத்துலே உட்காராம,சட்சட்..னு இடம் மாறிமாறி, உட்கார்றதும்,பறக்குறதுமா இருந்துச்சு.அதப் பாக்கும்போது,அதுக ஏதோவொரு அவசரத்திலே இருக்கறதும் குமாருக்கு தெரிஞ்சது.
சரசு,வீட்டுக்கு வெளியிலே வந்து, பின்கட்டுலே யிருந்த மாட்டுத் தொழுவத்துக்கு போயிட்டு இருந்தா.கொய்யா மரத்தடியில் வந்து நின்ன குமாரோட நடமாட்டத்தை குருவிகளும் கவனிச்சுட்டுத்தான் இருந்தது..கீச்.கீச்..இப்ப அதுக ரெண்டும் என்னவோ பேசிக்கிற மாதிரியும், குமாருக்கு தெரிஞ்சது.‘விசுக்’குனு பறந்த குருவிக ரெண்டும்,நேராப் போய்,முதல்ல உக்காந்த ஓட்டுச்சந்திலேயேயே திரும்பவும் உக்காந்துச்சு. கீச்..கீச்..,
ஆளுங்களோட நடமாட்டத்தை அனுசரிச்சு,அதுங்க பேசிக்கிறதும்,பாக்குறதும்,விருட் விருட்டுனு பறக்குறதும் குமாருக்கு ரொம்பப் புடிச்சுருச்சு. இன்னைக்கு குளம் குட்டைக்கெல்லாம் போக வேண்டாம்.வீட்டுலேயே இருந்து. இதுக பண்றதைக் கவனிப்போம்னு முடிவு செஞ்சுட்டான் குமாரு.
இப்ப ஓட்டுச் சந்துலே உக்காந்து இருந்த குருவி களைக் காணோம்.ஓடிப்போய் வீட்டுவாசல் படியிலே நின்னு,கவனிச்சான்.அட்டாலிக்கு மேலயிருந்து,இப்ப குருவிகளோட சத்தம் கேட்டுச்சு.ஆனா,என்ன பண்ணுதுகன்னு தெரியலை.
ரெண்டு,மூணு நிமிஷம் கழிச்சு,வெறும் வாயோட குருவிக ரெண்டும் பறந்து வெளியிலே போச்சுக. உடனே,ஓடிப்போய் வீட்டுக்கு பின்னாலேயிருந்த ஏணியை ஒத்தையாளா தூக்கிட்டு வந்தான். அட்டாலி பக்கத்துலே ஏணியைப் போட்டு,மெதுவா ஏறிப் பாத்தப்போ,அட்டாலிப் பலகைக்கும், ஓட்டுக்கும் நடுவுலே,கொஞ்சம் குழியாயிருந்த செவுத்துமேலே,வைக்கோலு,பஞ்சு,கலர்த்துணி,
கம்பின்னு கொஞ்சமாத் தெரிஞ்சது. ஆகா..நம்ம வீட்டுலேயே குருவிக கூடு கட்டுதா..? கட்டட்டும்.. கட்டட்டும்..குமாருக்கு மனசு பூராவும்,ஏதோ தீபாவளிக்கு சொந்தக்காரங்க வந்த சந்தோஷமா இருந்துச்சு.
'குருவிங்க ரொம்ப அவசரத்துலே இருந்த மாதிரி பரபரன்னு இருந்துச்சே..!. இதுக ஒவ்வொண்ணா பொறுக்கிகிட்டு வந்து எப்ப கூடு கட்டறது.?' குமாரோட மனசுக்குள்ள நெனப்பு ஓடிச்சு. படபடன்னு கீழே இறங்கினான்.வீட்டுக்குள்ளே இருந்த நல்ல பஞ்சு கட்டு ஒண்ணையெடுத்து சின்ன சின்னதாப் பிரிச்சு வெச்சுகிட்டான்.பின் கட்டுக்குப் போய் தொழுவத்திலேருந்து கை நிறைய வைக்கோலை எடுத்துட்டு,குருவி தூக்குற அளவுலே சின்னசின்னதா ஒடிச்சான்.அப்புறம் பிரிச்சு வெச்ச பஞ்சையும்,ஒடிச்சு வெச்ச வைக்கோலையும் எடுத்துகிட்டு,திரும்பியும் ஏணிமேலே ஏறிப்போய்,குருவிக கண்ணுலே படற மாதிரி எல்லாத்தையும் போட்டான். 'இந்தக் குருவிகளுக்கு நாமளே ஒரு கூடு கட்டித் தந்துரலாமா..? ஊகும்..குருவிக..அதுங்களோட கூட்டை எந்தத் இடைஞ்சலுமில்லாம அதுகளே கட்டிகிட்டாத்தான்,அங்க வசிக்கலாம்னு அதுகளுக்கு நம்பிக்கை வரும்'.குமாரு கீழே இறங்கிட்டான்.
கொஞ்சநேரம் கழிச்சு,ரெண்டு குருவிகளும், அதுக ளோட அலகுலே,புடிக்க முடிஞ்ச அளவுலே, கொஞ்சம் வைக்கோலை எடுத்துட்டு திரும்பவும் அட்டாலிக்கு வந்துச்சு.
இப்ப குமாருக்கு ஒரே சந்தோஷம்.அந்தக் குருவிக, “பஞ்சையும் வைக்கோலையும் தேடிட்டு, எங்கெல்லாமோ போனோம்.., அட, கைக்கு எட்டுற தூரத்திலேயே இதெல்லாம் கெடக்குதே.. கீச்.. கீச்..”ன்னு பேசிக்கும்.ம்..ம்;..சீக்கிரம் கூடு கட்டிக்கலாம்னு அதுகளும் சந்தோஷப் படுமில்லே.!
குமாரு எதிர்பார்த்த மாதிரியே,அரை மணி நேரங் கழிச்சு,வந்த ரெண்டு குருவிகளும்,வீட்டுக்கு வெளியே கீச்..கீச்..னு கத்திகிட்டே பறந்து போயிடுச்சு. இப்ப அதுக சத்தத்துலே.,நமக்கு நல்ல கூடு கிடைச்சுருச்சு..ன்னு அதுக பேசிகிட்டே போறதா,குமாரு கற்பனை பண்ணிகிட்டான்.ஆமா இப்ப எதுக்கு அதுக வெளியே போகணும்.? அதுக வயித்துக்கு இரை தேடப் போயிருக்குமோ.? அடடா..அப்பவே இந்த ரோசனை வந்திருந்தா.. நல்லாயிருந்திருக்குமே..!
நேரா அடுக்களைக்குள்ளே போனான் குமாரு. அந்தந்த மூட்டையிலிருந்த அரிசியையும், சோளத்தையம் கை நிறைய அள்ளிகிட்டு, திரும்பவும் அட்டாலிக்குப் போனான்.குருவிக கட்டி வெச்சிருந்த கூடு,இப்போ நல்லா தெரிஞ்சுது. ஒழுங்கில்லாத வட்டமாத் தெரிஞ்ச கூட்டுக்குள்ளே, சின்னச்சின்னதா இறக்கைகளும், பஞ்சும், வைக்கோலுமா பரப்பி,உக்காரும்போது உறுத்தல் இல்லாம இருக்கற மாதிரி உள்ளுக்குள் ளேயே மட்டம் பண்ணி வெச்சிருந்ததுக.ஊம்..நல்ல சொகுசுக்கார குருவிகதான்.., குமாருக்கு லேசா சிரிப்பும் வந்தது. கையிலிருந்த தானியத்தை கூட்டுக்கு பக்கத்திலேயே அளவாப் பரப்பி வெச்சுட்டு,கீழே இறங்கிகிட்டான் குமாரு. அதுக்கப்புறம் குருவிக இனி எப்ப திரும்பி வரும்னு காத்துகிட்டு .வீட்டுலேயே இருந்துட்டான் குமாரு.
வெயில்லே,வெளிய தெருவுலே ஊர்சுத்தப் போகாம,வீட்டுலேயே அடங்கிக் கிடந்த,குமாரை, ஆச்சரியத்தோடப் பார்த்துகிட்டே வந்த சரசுவை வாசப்படியிலேயே வழிமறிச்சு.. “அத்தை,நம்ம வீட்டு அட்டாலி மேலே ரெண்டு குருவிக கூடு கட்டியிருக்கு..”
“நெசமாவா..ஆச்சரியமாக் கேட்ட சரசுவோட குரல்லே அப்படியொரு சந்தோஷம்.குருவி கூடு கட்டுற வீட்டுலே,குழந்தை பாக்கியம் நிச்சயம்..னு, குப்பாயிக் கிழவி அப்பப்ப சொல்லிகிட்டு இருக்குறதை அவளும் கேட்டுருக்கிறாளே.., அது நெசமா,பொய்யான்னு தெரியலை. சிலப்போ.. அப்படி ஒண்ணு நடந்துச்சுன்னா.., “சரி குமாரு.., அதுகளுக்கு தொந்தரவா இருக்குற மாதிரி எதையும் செஞ்சுடாதே”ன்னுசொல்லிகிட்டே,வீட்டுக்குள்ளே போயிட்டாள்.போனவளுக்கு கூடவே இன்னொரு சந்தேகமும் வந்துச்சு, “உனக்கு எதுவும் குறையில்லேம்மா..உம் புருஷனுக்குத்தான் மருந்து மாத்திரை குடுத்து,ஒரு குழந்தைக்கு தகப்பனாக்க முடியுமான்னு பாக்கோணும்..,அதுக்கு உம் புருஷன்,தெனமும் தண்ணியடிக்காம, பீடி, சிகரெட் குடிக்காம இருக்கோணும்.அதை நிறுத்தலேன்னா,ஒண்ணும் நடக்காது..”, டவுனு ஆஸ்பத்திரி டாக்டரம்மா அன்னைக்கு சொன்னது திரும்பவும் காதுக்குள்ளே கேட்டுச்சு.அவங்கிட்டே பெரியவங்களை வெச்சு எடுத்துச் சொல்லியும் அவன்,இன்னைக்கு வரைக்கும் திருந்தலை.., “ஏண்டி,குடிகாரன் எவனுக்கும் கொழந்தை யில்லாமயாப் போச்சு..? நாப்பது வயசுதாண்டி ஆச்சு,ஆம்பளை நெனச்சா அம்பது வயசுலேயும் முடியும் தெரியுமா.? ” ன்னு புருஷங்காரன் காளிமுத்து எதிர்கேள்வி கேட்டானேயொழிய, எதையும் இன்ன வரைக்கும் நிறுத்துன பாடில்லை. இனியென்ன நடக்கும்னு சரசுவுக்கும் புரியலை.
கிழக்கே வெளிச்சம் மங்கும்போது,கூட்டுக்குத் திரும்பி வந்த குருவிக..கொஞ்ச நேரம்,கீச்..கீச்..னு.. கத்திகிட்டு இருந்துச்சுக..அதுலே ஏதோ ரகசியம் இருக்குற மாதிரி பட்டுச்சு குமாருக்கு.
சரசுவும் என்னதான் கைவேலையா இருந்தாலும், குருவிக மேலயும் அப்பப்ப கவனத்தை
வெச்சுகிட்டா..
அடுத்த நாள்லேருந்து,பள்ளிக்கோடம் போறதும், வர்றதுமா இருந்த குமாரு,சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும்,மறக்காம அட்டாலி மேலே ஏறி, குருவிகளுக்கு தீனி போடறதும்,கூட்டைப் பாத்துக்குறதுமா இருந்தான்.அவ்வளவா வெளிச்சம் படாத இடத்திலேயிருந்த குருவிக்கூட்டுக்குள்ளே எட்டிப் பாக்கவும் முடியலே.ஆனா..‘குருவிக நம்ம வீட்டுலேயேதான் இருக்குது..’ன்னு அவனுக்கு தெனமும் நிம்மதியாயிருந்துச்சு.இப்பல்லாம் ஆண் குருவியோட சத்தத்தையும்,பெண்குருவியோட சத்தத்தையும் தனித்தனியா அடையாளம் கண்டுபுடிக்கத் தெரிஞ்சுகிட்டான்.இப்படியே ஒரு வாரம் வேகமா ஓடி முடிஞ்சது.
அன்னைக்கு ஞாயித்துக் கிழமை.குருவிக சத்தம் எதுவும் கேக்கலை.இன்னிக்கு அந்தக் கூட்டை, பக்கமாப் போய் பாத்துடனும்னு ஒரு ஆசை வந்துச்சு குமாருக்கு.மெதுவா அட்டாலி மேலே ஏறினான்.கூடு கண்ணுக்கு தெரிஞ்சது.இன்னும் கொஞ்சம் பக்கமாப் போயிப் பாக்கலாம்னு குத்துக்கால் போட்டபடியே கூட்டைப் பாத்து நடந்தப்போ,கூட்டுக்குள்ளே இருந்த பெண்குருவி, கீச்..கீச்..னு கத்திகிட்டே விருட்னு வெளியே பறந்துச்சு.அது கோபத்தோட கத்திட்டுப்போன மாதிரி தெரிஞ்சது. பறந்துபோன பெண்குருவி, ஓட்டுச்சந்துலே போயி உக்காந்துகிட்டு,இன்னும் உக்கிரமா கத்துச்சு.அது,அந்தச் சின்னச் சந்துக்குள்ளேயே அந்தப்பக்கமும்,இந்தப்பக்கமுமா அலை பாய்ஞ்சுது.அதோட கீச்..கீச்..இன்னும் உக்கிரமா இருந்துச்சு.., ‘பெண்குருவி இருக்கறது தெரியாம மேலே ஏறி வந்துட்டமே..’ குமாருக்கும் கொஞ்சம் வருத்தமாயிடுச்சு.சங்கடத்தோட கூட்டைப் பார்த்தான்,வெளிர் பச்சைக் கலரும், வெள்ளையுமா அஞ்சு முட்டை இருந்தது.
அதைப் பாத்ததும். குமாருக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும்,இன்னொரு பக்கம் வருத்தமாவும் போச்சு, ‘பெண்குருவி முட்டை போடும்போதோ, அடை காக்கும்போதோ நாம வந்து இடைஞ்சல் பண்ணிட்டமே..அடச் சே..!’ ன்னு நெனச்சுட்டே அவசரஅவசரமா கீழே இறங்கி வந்துட்டான். அதுக்குள்ளே எங்கிருந்துதான் அந்த ஆண்குருவி வந்துச்சோ தெரியலை.இப்ப ரெண்டும் சேந்துட்டு கத்தி,களேபரம் பண்ணிகிட்டு இருந்துச்சு. ‘ஏண்டா இப்படி தொந்தரவு பண்றீங்க..ன்னு திட்டிகிட்டு இருக்குமோ..?’
வேகமா கீழே இறங்குன குமாருக்கு,‘ஏணி இங்க இருந்தாத்தானே அடிக்கடி ஏறிப்பாக்கத் தோணும்.?’ அப்படி யோசனை வந்தப்பவே முடிவு பண்ணிட்டான்.மொத வேலையா அதத் தூக்கிட்டுப் போய்,தொழுவத்துலேயே போட்டான்.வரும்போதே கதவையும் சாத்தி வெச்சுட்டு வந்துட்டான்.பாவம் அந்தக் குருவிக..இனி இவனாலே எந்தத் தொந்தரவும் இருக்காதுன்னு நம்பட்டும்.! நேராப் போய்,கொய்யா மரத்துகிட்டே நின்னுகிட்டான்.
இப்பவும் அந்தக் குருவிக,ஓட்டுச்சந்துலேயே நின்னுகிட்டு கத்திகிட்டுருந்துச்சு.இன்னும் அதுகளுக்கு கோபம் தீரலை போல இருக்கு.! வீதியிலே இறங்கி,அவங்க தோப்பைப் பாத்து நடக்க ஆரம்பிச்சுட்டான்.
தோப்புக்குள்ளே சரசுவும்,குத்தகைக்காரன் பொண்டாட்டியும்,தண்ணித் தொட்டிமேலே உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க.குமாரு வர்றதைப் பாத்த சரசு,”இளநி ஏதாவது போட்டு வெச்சிருந்தா,ஒண்ணு சீவிக்குடேன்.தாகத்தோட வர்றானோ என்னவோ..? என்று சொல்ல, குத்தகைக்காரன் பொண்டாட்டி,இறங்கிப்போனாள். “குமாரு..இளநியைக் குடிச்சுட்டு,ரெண்டுபேரும் வீட்டுக்கு போலாம்”.
“வேண்டாம் அத்தை.இன்னும் கொஞ்சநேரம் இங்கியே இருந்துட்டுப் போலாம்.”னு ஆரம்பிச்சவன், குருவிக் கூட்டுலே முட்டைக இருந்ததைப் பார்த்ததையும்,குருவிக அவங்கிட்டே கோவிச்சுகிட்டதையும் சொன்னான்.
சரி..அப்படியே செய்யலாம்..னு சொன்ன சரசு, குருவி முட்டைகளை அடை காக்க ஆரம்பிச்சுருச்சுன்னா,பன்னென்டு நாளுலேருந்து, பதினைஞ்சு நாளு கழிச்சுத்தான் குஞ்சுக வெளிய வரும். அதுவரைக்கும் அதுக்கு தொந்தரவு இருக்கக் கூடாது.பாத்துக்கோ..ன்னு சொல்ல,குமாரும் சரி..சரின்னு வேகமாத் தலையாட்டினான்.
அதுக்கப்புறம் ஒரு வாரம் கழிச்சு,குமாரு பள்ளிக்கோடம் விட்டு வந்தப்போ,அட்டாலிக்கு ஏற வசதியா ஏணியை அங்க யாரோ போட்டு வெச்சிருந்தாங்க.. குருவிகளுக்கு தீனியைப் போட்டுட்டு,இத எடுத்து வெச்சுட்டமே..பின்ன யாரு இதை திருப்பியும்,இங்க கொண்டு வந்து போட்டதுன்னு குமாருக்கு வந்த சந்தேகத்தை கேக்கலாம்னா,சரசுவும் வீட்டுலே இல்லை. காளிமுத்துவையும் காணோம்.அவனே ஏணியைத் தூக்கிட்டுப்போய் தொழுவத்துலே போட்டுட்டு வந்தவன்,வெளியபோயி சேக்காளிகளோட விளையாண்டதுலே,அதை மறந்தே போனான்.
அதுக்கப்புறமும்,கழிஞ்ச ஒரு வாரத்துலே,ஆண் குருவி அவ்வளவா வெளிய போகாம,அடிக்கடி கூட்டுக்கு பறந்து வர்றதையும்,அது வாயிலே சின்ன,சின்ன பூச்சி,புழுவையைல்லாம் புடிச்சுட்டு வர்றதையும் குமாரு அப்பப்ப பாத்துகிட்டுத்தான் இருந்தான்.வெறும் தானியம் மட்டும் சாப்பிட்டா குருவிகளுக்கு பத்தாது போல.. நாளைக்கோ, நாளன்னைக்கோ கூட்டுலே புதுசா குஞ்சுகள் வந்துடும்.
முட்டையிலிருந்து வெளிய வர்ற குஞ்சுகள், இறக்கையே இல்லாம,இளஞ் சிவப்பா..அப்படியே மொழு மொழுன்னு இருக்கும்.அதோட வாயெல்லாம், பெரிய குருவிக மாதிரியில்லாம மஞ்சக்கலருலே இருக்கும்.கண்ணுகளைத் தொறக்காம,தாய்க்குருவியோட சூட்டைத் தேடி, தலையை அங்கியும்,இங்கியும் ஆட்டிகிட்டே
இருக்கும்..’ குமாரு, இதுவரை குருவிக்குஞ்சு களைப் புஸ்தகத்துலேயும், போட்டோவிலேயும் தான் பாத்துருக்கான்.இனி அதையெல்லாம் நேராப் பாக்கப்போறதை நெனச்சு மனசுக்குள்ளே ரொம்ப சந்தோஷப்பட்டான். ‘இந்த வாரம் லீவு அன்னைக்கு அதுகளைப் பாத்து, நாம என்ன பாக்குறோமோ அதை அப்படியே அச்சுஅசலா நம்ம நோட்டுலே வரைஞ்சு வெக்கோணும்’னு முடிவு பண்ணுன குமாரு,‘ஆனா..,பெரிய குருவிகளுக்கு பயமோ, தொந்தரவோ இல்லாமயும் பாத்துக்கோணும்..னு அவனுக்கு,அவனே எச்சரிக்கையும் பண்ணிகிட்டான்.
அன்னிக்கு ஞாயித்துக் கிழமை.வழக்கம் போல, சரசு,காலையிலே எல்லாவீட்டு வேலையும் முடிச்சுட்டு,தோப்புக்கு போயிட்டாள்.காளிமுத்து மாமா படுக்கையை விட்டு இன்னும் எந்திரிக்கா மயே புரண்டுகிட்டு கிடந்தாரு.இன்னிக்கு எங்கியும் சீட்டுக் கச்சேரி இல்லை போல இருக்கு.அட்டாலி மேலே பெரிய குருவிக சத்தத்தோட,புதுசா ரெண்டு மூணு சத்தம் சின்னதாக் கேட்டுகிட்டே இருந்துச்சு. இன்னைக்கு எப்படியாவது அதுங்களையெல்லாம் பாக்கலாம்முனு பாத்தால்,இவரு வேற படுத்து புரண்டுகிட்டு இருக்காரு.இப்ப ஏணியை எடுத்துட்டு வந்து வீட்டுக்குள்ளே போட்டா கத்துவாரு..சரி அவரு வெளிய போகட்டும்.அப்பறமா வந்து பாத்துக்கலாம்..’ ஆசையை அடக்கி வெச்சுட்டு, குமாரு வெளிய கிளம்பிட்டான்.
சேக்காளிகளோட ஊர்சுத்திட்டு,நல்ல உச்சிவெயில் நேரத்துலேதான் வீட்டுக்கு திரும்பி வந்தான் குமாரு. வெத்தலை பாக்கு போட்டபடி,வூட்டுத் திண்ணையிலே ரொம்ப பகுமானமா உட்கார்ந்திருந்த காளிமுத்து மாமாவும்,மூர்த்தி அண்ணனும்,பேசிகிட்டு இருக்கிறது தெரிஞ்சது.
‘நல்ல பசி வேற..,முதல்லே சோத்தைப் போட்டு தின்னுட்டு,குருவிகளை பாக்கணும்..,’ யார் மொகத்தையும் பாக்காம,நெடுநெடுன்னு நேரா அடுக்களைக்கு போக இருந்தவனுக்கு,அட்டாலி மேல ஏறுறதுக்காக,குமாரு எப்பவும் போடற மாதிரியே போட்டு வெச்சிருந்த ஏணி கண்ணுலே பட்டுச்சு.அவனுக்கு ஆச்சரியமாப் போச்சு.’நாம போடாம யார் இந்த ஏணியைக் கொண்டு வந்து போட்டாங்க..?’ என்னமோ தப்பா இருக்குற மாதிரி மனசுலே பட்டதும் ஓடிப்போய் ஏணியிலே ஏறி, கிடுகிடுன்னு அட்டாலிக்குப் போனான்.
அங்கே,குருவிக் கூட்டை திருட்டுப்பூனை வந்து கலைச்ச மாதிரி,எல்லாம் சிதறிக்கிடந்தது. குருவிகளையும் காணோம்,குஞ்சுகளையும் காணோம்..’என்ன ஆச்சுன்னே தெரியலையே..’ குமாருக்கு மனசெல்லாம் படபடன்னு அடிச்சுகிச்சு. ரொம்ப பதைச்சுப் போயிட்டான். ‘பூனை ஏதாவது வந்து கலைச்சுப் போட்டுடுச்சா.. மாமாகிட்டே கேப்போம்.’ கிடு.கிடுன்னு கீழே வந்து திண்ணைக்குப் பக்கத்திலே போகும்போது, காளிமுத்து மாமா,மூர்த்திகிட்ட சொல்லிகிட்டு இருந்ததைக் கேட்டதும்,குமாருக்கு அப்படியொரு ஆத்திரம் தலைக்கேறிப் போச்சு.
மாமாகிட்டே பேசிகிட்டிருந்த மூர்த்தி “என்ன இருந்தாலும் நீங்க அப்படியெல்லாம் பண்ணிருக்கக் கூடாது.எனக்குப் பேசவே புடிக்கலை மாமா..நா அப்புறமா வர்றேன்..”னு சொல்லிகிட்டே, திண்ணையை விட்டு எறங்கி,வாசலைப் பாத்து நடந்து போய்கிட்டு இருக்கும்போதுதான்,வீட்டை விட்டு வேகமாக வெளிய வந்த இந்தக் குமாருப் பைய,எதையோ அவசரமா தேடிகிட்டு இருக்குறது தெரிஞ்சது.ஆனா..அதைப் பத்தி விசாரிக்கணும்னு மூர்த்திக்கும் அப்ப தோணலை.அவம் பாட்டுக்கு வீதியிலே இறங்கிப் போயிட்டான்.
இந்தக் குமாரு என்ன நெனச்சானோ தெரியலை. கிணத்து சுவத்தோரமா வெச்சிருந்த கைக்கு வாகான உருட்டுக் கட்டைய எடுத்துகிட்டு,வேகமா திரும்பி வந்தவன், காளிமுத்துவோட மண்டையிலும், முதுகிலுமா. சும்மா மொத்து மொத்துன்னு அடிச்ச அடியிலே, காளிமுத்து மாமா அலறிக்கிட்டே,வெத்திலை எச்சியொழுக,மூச்சுப் பேச்சில்லாம வுழுந்தாரு. என்னமோ ஏதோன்னு பதறிகிட்டே,பின்கட்டிலிருந்து சாணிக் கையோட ஓடிவந்த சரசு அத்தை,உருட்டுக் கட்டையோட, ஆவேசம் பொங்க அய்யனாரு மாதிரி நிக்கற குமாருப் பயலைப் பாத்து, “டே..குமாரு.அடப் பாவி மகனே..ஐயோ..நிறுத்துடா..”ன்னு கத்திகிட்டே வந்ததைப் பாத்துட்டு,திருப்பியும் அடிக்கிறதுக்காக ஓங்குன கைய அப்பத்தான் நிறுத்தினான்.தடுக்காம வுட்டுருந்தா கொலையே பண்ணிருப்பானோ என்னவோ..பதிமூணு வயசுப் பய கண்ணுலே அப்புடியொரு கொல வெறி..!
காளிமுத்து மாமாவோட அலறல் சத்தம்; கேட்டு, வீதியிலே இறங்கிப் போயிகிட்டு இருந்த மூர்த்தி, போனவழியே திரும்பி,அடிச்சுப் பிடிச்சு ஓடிவந்து பார்த்த போது. எப்பவும் சாந்தமா இருக்குற இந்தக் குமாரோட, ருத்திரமூர்த்தி கோலத்தை அதிசயமாப் பாத்தான்.இப்ப அதவிட முக்கியமா காளிமுத்து மாமாவுக்கு என்ன ஆச்சு..? பாக்கோணுமே.., அஷ்ட கோணலா வுழுந்து கெடந்த காளிமுத்தை அப்படியே மடியிலே தூக்கிப் போட்டுகிட்டான், அவரு தலையிலேருந்து ரத்தம் வழிஞ்சுகிட்டே இருந்தது. தோள்ளயிருந்த துண்டை எடுத்து, தலைக்காயத்தை துடைச்சு,ரத்தம் இனி வராதபடி அடைச்சுப் பிடிச்சுகிட்டான்.
“மாமா..மாமா..மூர்த்தி கூப்பிட்டுப் பார்த்ததுக்கு, காளிமுத்து ஒண்ணும் மறுபேச்சு பேசறதாவே காணோம். “அத்தை.., ஓடிப்போய் கொஞ்சம் குளுந் தண்ணீ எடுத்துட்டு வாங்க..” மூர்த்தி பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சரசு சமையல் கட்டு வரை ஓடியிருந்தாள்.இமைக்கிற நேரத்திலே திரும்பி வந்தவ கிட்டேயிருந்து தண்ணியை வாங்கி,காளிமுத்து மூஞ்சியிலே,பதமா பூவுக்குத் தெளிக்கிற மாதிரி ரெண்டு தரம் தண்ணியைத் தெளிச்ச மூர்த்திய,மெதுவா கண்ணு தொறந்து பார்த்தாரு காளிமுத்து. “அக்கா..இனி ஒண்ணும் பயமில்லே..நா சுருக்கா வண்டி எடுத்துட்டு வந்துர்றேன்.டவுனு ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துறலாம்..” மூர்த்தி சொன்னப்ப,சரசு தலையத் தலைய ஆட்டினா.
இந்த ரணகளம் நடந்துகிட்டு இருக்கும்போதே, வீதியிலே போன ஜனம் ஒவ்வொண்ணா வீட்டுக்குள்ள வரத்தொடங்கி கூட்டமாயிடுச்சு. என்ன ஏதுன்னு ஆளாளுக்கு விசாரிச்சுட்டு இருக்கும் போதே..குமாரு அங்கிருந்து மேக்கால இருக்குற நடராசுக் கவுண்டரு தோப்புக்குள்ளே ஓடி, இருட்டான மாந்தோப்பு நெழலுக்குள்ளே பதுங்கிகிட்டான்.வெறுப்புலே கொஞ்சநேரம் எதையோ வெறிச்சுப் பாத்துகிட்டே இருந்த குமாரு..அப்புடியே கொஞ்ச நேரம் தூங்கிட்டான். தூக்கத்துலே சிட்டுக் குருவிங்கெல்லாம் ஆவியா வந்து..அல்லாடிக்கிட்டு அலர்ற சத்தமாக் கேக்குது.“ என்னை மன்னிச்சுக்கோங்க..ன்னு,அவன் வாய் விட்டு அழுகுறதும்,கண்ணுலேருந்து கண்ணீர் தானாப் பொங்கி வழியுறதுமா நேரம் ஓடிகிட்டு
இருந்துச்சு.
மேக்குத் திசையிலே சூரியன் இறங்குனப்பவும், மாமரத்திலிருந்து இறங்காமயே உக்காந்துட்டு இருந்தான் குமாரு.
சரசுவும்,மூர்த்தியும் லாந்தரும் கையுமா "குமாரு.. டேய்..குமாருன்னு..சத்தம் குடுத்துட்டே தேடி வர்றது தெரிஞ்சது.குமாரு எதுக்கு மாமாவை அடிச்சான்னு சரசுவுக்கு இன்னும் தெரியலை. ‘திடீர்னு அவன் ஆவேசப்பட்டு, நடந்துகிட்டதுக்கு ஏதாவது காத்து கருப்பு அடிச்சிருக்குமோ..? சரசுவுக்கு இதுதான் யோசனையாவே இருந்துச்சு. அல்லாக் கோயிலுக்கு கூட்டிட்டுப் போய் மந்திரிச்சு வுடனும்னு அவ தீர்மானம் பண்ணிகிட்டா.., குமாரு..டேய் குமாரு..” சத்தம் ரொம்பக் கிட்டக்க வந்துருச்சு.இனி ஒளிஞ்சு உக்காந்தும் பிரயோசனமில்லே.
குமாரு,மாமரத்திலிருந்து கீழ இறங்கி,முன்னால வந்து நின்னாலும் சரசுவை ஏறெடுத்து பாக்கலை. அவனைக் கண்ணுலே பாத்ததும்தான் ரெண்டு பேருக்கும் நிம்மதியாச்சு. வா..குமாரு..வீட்டுக்கு போகலாம்.அரட்டாம உருட்டாம,எப்பவும் போல தாய்ப்பாசத்தோட சரசு கூப்பிட்டதும், குமாரு மனசு உடைஞ்சு போய் அழுதான்.அவனை அணைச்சுப் பிடிச்சுகிட்ட சரசு,அப்படியே,வீட்டுக்கு நடத்திக் கூட்டிட்டுப் போனாள்.
குமாரோட தேம்பலெல்லாம் நின்னுபோன பின்ன,போற வழியிலே,முர்த்திதான் கேட்டான், “ஏண்டா குமாரு..திடீர்னு அப்படிப் போட்டு மாமாவை அடிச்ச..,பெரியவங்களை அடிக்கலாமா..? அவரு உன் தகப்பன் மாதிரிடா குமாரு..!”
“ஆமா..எவனோ பொச கெட்டபய சொன்னான்னு, கூட்டுலேருந்த குருவிங்க,அதோட குஞ்சுக, எல்லாத்தையும்,பொறிவெச்சு புடிச்சு,சுட்டுத் தின்னதுமில்லாம, சிட்டுக்குருவி லேகியம் பண்ணி சாப்பிட்டா..இன்னும் வீரியம் கெடைக்கும்னு சொன்னா..எனக்கு கோவம் வராம என்ன செய்யும்..? பெத்த புள்ளைய அறுத்து சாப்பிடற மாதிரி தோணலை. அதுவும் உசிருதானே..! உங்கிட்ட சொன்னதைக் கேட்டுட்டு நீ சும்மா போயிட்டே..,என்னாலே பொறுத்துக்க முடியலை..”ன்னு சொன்ன குமாரு, திரும்பவும் அழுதுட்டான்.
மூர்த்திக்கும்,இப்பத்தான் காளிமுத்து மாமா மதியம் சொன்னது ஞாபகம் வந்தது.சரசுவோட கண்ணெல்லாம் தண்ணிலே மெதக்குறது தெரிஞ்சது.
வீட்டு வாசப்படியேறும்போது,தலைக்கட்டோட இருந்த காளிமுத்து மாமா, யாரையும் பாக்க முடியாம தலையைக் குனிஞ்சுகிட்டாரு.!
-------------