வள்ளலார் அருள் வாக்கு
வள்ளலார் அருள் வாக்கு
1
விழலுக்கு இறைத்த நீரல்ல மகவே
விழுகின்ற இறை(ரை)யாம் அன்பு
மகனே! மகளே! நின் மீது எங்கும் எப்போதும் விழுகின்ற இறை மற்றும் இரையாகிய அன்பாம் "யாம்", வீண் போவதற்காக இறைக்கப்பட்ட நீரல்ல! மருட்குழியின் அகண்ட இருளில் விழுந்து கிடக்கும் உன் மீது விழுகின்ற அருண்மழை தித்திக்குந் திரு நிலையில் உன்னை எழுப்புவதற்கே அன்றி வேறெதற்கோ? அன்பெனும் அமுத இரை விட்டு, இறை வேறுண்டோ? இறையையே இரையாக உண்ணும் பக்குவம் நினக்கு வரும் வரைக்கும், அவசிய வாழ்வில் எப்படி நீ ஏற முடியும்? அவசரப் பிழைப்பெனுஞ் செயற்கை நடைமுறையில் உழலும் உனக்கு அவசிய வாழ்வெனும் இயற்கை அருண்முறையைத் தரவே, அன்பெனும் வள்ளல் யாம் இற(ர)ங்கினோம்! உணர்வாயாக!
2
ஈன நிலையுளே ஞான மகவுனால்
ஆழ இற(ர)ங்கினோம் யாம்
மகனே! மகளே! அன்பே சிவமும் அருளாஞ் சத்தியுமாகிய நின் அம்மையப்பனின் ஞானக் கொழுந்தே நீ! ஈன நிலையென்னும் மருட்குழி மாயையைக் கரைக்க உன் மூலமாகவே யாம் ஆழ இற(ர)ங்கினோம்! மருட்குழியா நின்னை ஈன்றது, எம் திரு மகவல்லவோ நீ! ஞாபகங் கொள்வாயாக! அம்மையப்பனின் அருட்கொடையாகவே மருண்மயக்கம் நீக்க பூமியில் நீ அவதரித்திருக்கிறாய்! நின் மூலம் எம் அருளரசு செயல்படும்! அச்சமோ, கலக்கமோ வேண்டாம்! "யாமிருக்க பயமேன்!"

