வள்ளலார் சொன்ன ரகசியம்
வள்ளலார் சொன்ன ரகசியம்
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி
-என்ற பாடல் அவர் பெற்ற மறை ஞான அனுபவத்தின் விளங்குகிறது. இப்பாடலை பலரும் யோகநிலை விளக்கமாகவே கருதுவர். ஆனால் வள்ளலார் குறிப்பிடும் உண்மைப் பொருள் வெளிப்படையானதல்ல. அது மிக ரகசியமானது. யோக, ஞான நெறி நின்றார்க்கு மட்டுமே பொருள் விளங்கக் கூடியது. வள்ளலார் குறிப்பிட்டிருக்கும் ‘வானம்’ என்பது இங்கே பரவெளியாகிய சபையைக் குறிக்கிறது. ஆக்ஞா சக்கரமாகிய புருவமத்தியில் நிகழும் நெற்றிக்கண் திறப்பையே மயில் ஆடுவதாய் வள்ளற் பெருமான் குறிப்பிடுகிறார். மயில் தோகையை விரித்தாடும்போது அந்தத் தோகையில் காணப்படும் கண்களையும், அதனால் ஏற்படும் பரவச நிலையையுமே அவர் ”மயிலாடக் கண்டேன்” என்கிறார்.
அப்படியானால் குயில்?
மயில் தோகையை விரித்தாடும்போது கவனம் வேறு எங்கு செல்லும்? அதன் அழகிலேயே மனம் நிலைபெற்றிருக்கும். அதுபோல ஆக்ஞா சக்கரமானது திறந்த பின் ஏற்படும் பரவச நிலையிலேயே எப்போதும் மனம் திளைத்திருக்கத் தலைப்படும். அப்போது அங்கே ’நாதம்’ தோன்றும். அந்த நாதமாகிய ஒலியையே, இனிமையான அந்த சப்தத்தையே ‘குயில்’ என்று உருவகிக்கிறார் வள்ளலார். குயில் கூவுவது எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, அவ்வளவு இனிமையாகவும், பரவசத்தைத் தருவதாகவும் அந்த உணர்வு இருப்பதாக அவர் குறிப்பிடுவதே ”மயில் குயில் ஆச்சுதடி”.
குயிலின் குரலை நாம் கேட்க முடியும். ஆனால் அந்தக் குயிலின் குரல் எங்கிருந்து வருகிறது என்பதை உணர்வது சற்று கடினமாக இருக்கும். அதுபோல நாத ஒலியை நாம் கேட்டாலும், அது எங்கிருந்து வருகிறது என்பதை அவ்வளவு எளிதில் உணர இயலாது. மேலும் குயிலின் குரலைக் கேட்டுத்தான் நாம் பரவசமாகிறோமே தவிர, குயிலின் உருவத்தைக் கண்டு அல்ல. குயிலின் குரல்தான் இங்கே முக்கியமாகிறதே தவிர, குயில் அல்ல. ஆனால் குயில் இல்லாமல் அந்தக் குரல் இல்லை. இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் ’நாதத்தை’ குயிலுக்கு உருவகித்திருக்கிறார் வள்ளலார்.