போற்றுவோம்

போற்றுவோம் !
22 / 11 / 2024
மாதுளைக்குள் மாணிக்கப் பரல்களை
நேர்த்தியாய் அடுக்கி வைத்தது யார்?
சோளத்தில் மஞ்சள் பொத்தான்களை
சீராய் பொருத்தி வைத்தது யார்?
முள்ளுடம்பின் பலாவினுள் தேன்சொட்டும்
சுளைகளை நார்வலைக்குள் சிக்கவைத்தது யார்?
மெல்லிய வாழையின் தலையில் பாரமான
குலையை தொங்க விட்டது யார்?
வான்தொடும் தென்னையின் கடினமான ஓட்டிற்குள்
சுவையான இளநீரை ஏற்றிவைத்தது யார்?
பூத்துச் சிரிக்கும் மலர்களுக்கு பல
வண்ண பூச்சு அடித்து வைத்தது யார்?
கெட்டியான பூமிதனை துளைத்து நீர்தேட
மெல்லிய வேர்களுக்கு வலுவிட்டது யார்?
வளைந்து கொடுக்கும் நாணலுக்கு புயற்காற்றை
எதிர் கொள்ளும் துணிவை கொடுத்தது யார்?
இயற்கையா? இறையா? எதுவான போதும்
இறையை வணங்குவோம் ! இயற்கையை போற்றுவோம் !

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (22-Nov-24, 9:12 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 44

மேலே