ரூபாயின் பயணம்
கொளுத்தும் வெயில் நேரம்... வண்டிகள் ஒன்றுக்குப் பின்
ஒன்றாக சேர்ந்து பச்சை நிற விளக்குக்காகக் காத்திருந்தது. டிராபிக் போர்டு 60 விநாடிகளை கவுண்டவுனாக எண்ணிக்கொண்டிருந்தது. அழுத குழந்தை தன் தாயை பார்த்தது போல பிச்சைக்காரர்கள் தங்கள் தட்டுகளுடன் ஒவ்வொரு வண்டியின் முன் சென்று பிச்சை கேட்கத் தொடங்கினர். அதில் தன் இரு கால்களையும் இழந்த முப்பது வயது மதிக்கத் தக்க பெண் தானும் தன் தட்டுடன் நீல நிற டிவிஎஸ் 50ஐ நெருங்கினாள். வயது ஐம்பதைத் தாண்டிவிட்டாலும் இருபத்தைந்தைப் போல் கம்பீரத்துடன் தானும் தன் பங்கிற்கு டிராபிக் போர்டு எண்களைப் பின்னோக்கி எண்ணிக்கொண்டிருந்தார் வண்டிக்கு சொந்தக்காரர். அந்த பெண் அவரிடம் சென்று தட்டை நீட்ட, உடனே கிடைத்தது சில்லறை அல்ல. "சீ போ அந்த பக்கம்" என்ற அவரது திட்டுக்கள் தான். அவரது செல்ல நாயைக் கூட அப்படி அவர் திட்டியதில்லை. ஏதோ பழக்கப்பட்டது போல் அவளும் அங்கிருந்து நகராமல் "ஐயா சாப்பிட்டு ரெண்டு நாளாச்சி! ஒரு ரூபாயாவது போடுங்க சாமி" என்று குரலைக் கூட்டினாள். "இப்ப போறியா இல்லையா" என்று அவர் கையை ஒங்க, இருந்த இடம் தெரியாமல் அங்கிருந்து மறைந்தாள் அந்த பெண். "இதுங்கள மொதல்ல ஒழிக்கணும்" என்று பக்கத்து வண்டிக்கரரிடம் புலம்பியபடியே தன் வண்டியை கொஞ்சம் முன்னுக்குத் தள்ளினார்.
5.. 4... 3.. 2... 1.. சிவப்பு மறைந்து பச்சை விளக்கு எரியத் தொடங்கியவுடன் தனது டிவிஎஸ் 50ஐ ரேஸ் செய்து இரண்டு
அடி கூட நகர்ந்திருக்க மாட்டார். அதற்குள் பலத்த சத்தத்துடன் பின் டயர் வெடித்து பஞ்சரானது. "சனியன் இது வேறையா. இன்னிக்கு பதினஞ்சு ரூபா மிச்சமாகுதேன்னு நெனச்சேன். எழவு போச்சா" என்றபடி பஞ்சர் கடைக்காக தெருவை முழுவதுமாக நோட்டம் விட்டார்.
சொல்லிவைத்தது போல வலக்கை பக்கம் ஒரு கடை இருந்தது. அனால் கடை என்று சொல்லுமளவுக்கு அங்கு ஒன்றும் இல்லை. உடைந்து போன தொட்டியில் கொஞ்சம் அழுக்கு தண்ணீர், நிழலுக்கு ஒரு கூரை. கூரையில் நான்கைந்து டயர்கள், தரையில் இரண்டு மர நாற்காலியுடன் கொஞ்சம் இரும்பு சாமான்கள். மெக்கானிக் துறையில் பட்டம் பெற்ற
உணர்வோடு பஜாஜின் முன் பக்கத்தில் ஏதோ முடுக்கிகொண்டிருந்தார் கடை முதலாளி.
"தம்பி! பின்னாடி பஞ்சர் போடுப்பா" என்று வண்டியை ஓர் ஓரமாக நிறுத்தினார் வண்டிக்காரர். "டேய் ஆள் வந்திருக்காங்க பாரு" என்று முதலாளி குரல் கொடுக்க உள்ளிருந்து ஓடி வந்தான் முத்து. இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு வெற்றிகரமாக இரண்டாமாண்டு பஞ்சர் போட்டுக்கொண்டிருக்கும் பையன். கையில் இரண்டு இரும்பு சாமானைக் கொண்டு வந்து பின் புற டயரைக் கழட்டி உள்ளிருந்து டுயுபை எடுத்து அதில் காற்றை நிரப்பி அருகிலிருந்த தொட்டி நீரில் முக்கினான். ஓட்டை விழுந்த டுயுபின் ஒரு முனை தண்ணிரைக் கொப்பளிக்க செய்யவே, ஓட்டையை அடையாளம் கண்டு கொண்டு பின் ஏதோ பசையையும் ரப்பர் துண்டையும் கொண்டு ஓட்டையை அடைத்து, மீண்டும் நீரில் முக்கி சரி பார்த்துக்கொண்டான். இப்போது நீரில் எந்த சலனமும் இல்லை என்பதை தெளிவு படுத்திக்கொண்டு, டயரை பின்புறம் முடிக்கினான்."எவ்ளோ தம்பி", வண்டிக்காரர் சொல்லி முடிப்பதற்கு முன் "20 சார்" என்று பதில் கொடுத்தார் கடை முதலாளி. "ஏம்பா பத்த இருபது ஆக்கிட்டீங்களா? இந்தா பதினஞ்சு" என்று நீட்டினார் வண்டிக்காரர். அவரும் முதல் போனி என்று அலட்டிக்கொள்ளாமல் வாங்கிக்கொண்டார். "எவன் முகத்துல முழிச்சேனோ! சனியன்" என்ற தோரணையில் வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து மறைந்தார் வண்டிக்காரர்.
"டேய் இந்தா! போய் டிபன் முடிச்சிட்டு வா" என்று வாங்கிய பதினைந்தில் ஐந்தை எடுத்து முத்துவிடம் நீட்டினார் கடை முதலாளி. இந்த வார்த்தைக்காகத் தான் காத்திருந்தாற் போல அவனும் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து விரைந்தான். தினமும் இட்லி சாப்பிட்டு அலுத்துப்போன விரக்தியில் இரண்டு தோசையையும் ஒரு மசால் வடையையும் வாங்கினான். நான்கு ருபாய் போக மீதமிருந்த ஒரு ரூபாயை மிட்டாய்க்காக சட்டைப்பையில் போட்டுக்கொண்டான். பசி
ருசி அறியாது என்பதை மறந்து பொறுமையாக தோசையை சாம்பாரில் முக்கி எடுத்து வாயில் போட்டுக்கொண்டிருந்தான். தட்டை காலி செய்ய அவனுக்கு இருபது நிமிடம் பிடித்தது.
நிறைய சாப்பிட்ட திருப்தியில் மெதுவாக ரோட்டு ஓரத்தில் நடந்து கொண்டிருந்தான் முத்து. பிளாட்பாரத்தின் முனையை கடக்கும்போது அவனை தடுத்து நிறுத்தியது ஒரு குரல். அது "ஐயா சாமி" என்ற தன் இரு கால்களையும் இழந்த அந்த பிச்சைக்காரியின் குரல் தான். எதையும் கண்டு கொள்ளாமால் நிறுத்திய நடையை மீண்டும் தொடர்ந்தான். திடீரென்று அவன் கால்கள் நின்றன. ஆனால் இந்த முறை எந்த குரலும் அவனை தடுத்து நிறுத்தவில்லை. ஒரே வேகத்தில்
ரோட்டைக்கடந்து, தன் சட்டைப்பையிலிருந்த ஒரு ரூபாயை எடுத்து, அந்த பெண்ணின் தட்டில் போட்டு விட்டு பஞ்சர் கடையை நோக்கி நடந்தான்.
ஒன்றல்ல, ஆயிரம் மிட்டாய்களின் இனிப்பு முத்துவின் மனதில்..!!!!!!
**முற்றும்**