தீக்குச்சி.........

சிறியதாய் இருப்பதால்
கொஞ்சம் மலிவாயும்
இருப்பதால்
அடிக்கடி அதிகமாய்
உரசிக் கொளுத்துகிறேன்
தீக்குச்சிகளை..............

இதை நினைத்து
இப்பொழுது
என் மனசு கனக்கிறது.
தீக்குச்சித் தொழிற்சாலைகளில்
சிறுவர்கள் தான்
அதிகமாய்
வேலை புரிகின்றனர்.......
படித்தறிந்த செய்தி இது!

சின்னஞ்சிறார்களே....!
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?
எப்படி இருக்கிறீர்கள்?
பொஸ்பரஸ் தூள்
பட்டுப் பட்டு கைகள்
காய்த்துப் போய்
கிடக்கின்றனவா?
ஏதும் நானறியேன்.
மழலைகளே........!
உங்கள் உழைப்பையா
நான் இருந்து கொண்டு
எரிக்கிறேன்
உந்தன் உழைப்புக்கு முன்
அடுத்த வரி சொல்ல
அருகதையில்லை எனக்கு
மீட்டு வரத் துணிவுமில்லை.

வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்று
உங்களிடம் சொல்ல
மனசில்லை எனக்கு
மன்னித்துக் கொள்ளுங்கள்.
ஒரே ஒரு சந்தேகம்
உங்கள் வீட்டுத் தேவைக்கு
தீப்பெட்டி விலைக்கு வாங்குகிறீர்களா?
அல்லது இலவசமாய்த் தரப்படுமா?

எழுதியவர் : உமா சிவா (19-Sep-13, 11:59 am)
Tanglish : theekuchi
பார்வை : 623

மேலே