புத்தகம்

புதுமையின் விடியல்
புரட்சியின் விதை
பன்முக குவியல்
படைப்பாளியின் பங்கீடு !

தலை முறை தாண்டியும்
தாகம் தீர்க்கும்
வற்றா நதி ...
நூலகத்தின் அகமே
இதற்கு பிடித்த பதி....!

புண்பட்ட மனதிற்கு இது
மருந்து போடும் ...
அறிவு பசி வந்து விட்டால்
விருந்தே போடும் .......

மயிலிறகாய் மாறி
மனதை வருடிவிடும் ,,,,,,,
மௌனமாய் நமக்குள் பேசி
நம்மை ஆளும் ...!

புறப் போரை புகழ்ந்து சொல்லும்
அகப் போருக்கு அடிமை யாக்கும் ....

இது
கவிஞருக்கு காதலன்
எழுத்தாளனுக்கு ஏற்றவன்
பேச்சாளனுக்கு உதாரணன்
புதுமையை விரும்பும் புத்துணர்வாளன் !

இதை
கையில் ஏந்தாத மானிடன் இல்லை
இதன் மதிப்பை உணராதவன்
மனிதனும் இல்லை ....

நாடிப் படிப்பவரிடம்
நவரசம் காட்டும்!
நல்லதை சொல்லி நம்பிக்கை ஊட்டும் ...

மெய்ப்பாட்டியல் இதனுள்
அடக்கம்!
பிடித்து படித்தால்.,பரவசத்தில்
மெய் முழுதும் சிலிர்க்கும் ...........

பொங்கும் உணர்வை
பெருகிட வைக்கும் ....
புரியா கேள்விகளுக்கு
விடையாய் வரும் .....

ஆத்திகனும் நாத்திகனும்
இதனில் அடக்கம் ...
அகிலத்து மக்களுக்கு
அற்புத சொர்க்கம்!

ஆதியும் அந்தமும் தெரியா
அட்சய சொரூபம் ...
அனைத்து மொழிகளுக்கும் இதுவே
அடைக்கல வாசம்............!

மந்திரத்தையும் ,தந்திரத்தையும்
சாதனைகளையும் ,சம்பவங்களையும்
சிந்தனைகளையும் ,சிலிர்ப்பையும்
பரவசத்தையும் ,பாதிப்பையும்
வரலாற்றையும் ,வாழ்க்கையையும்
வயல்வெளியையும் ,வான் வெளியையும்
வறட்சியையும் ,புரட்சியையும்
இன்னும் பலவற்றையும்
ஒரு சேர எடுத்துக்கூறும்
ஈடில்லா அறிவன் தான்
தான் என்று இருமாப்பு கொள்ளும் !

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம்
மட்டுமல்ல ,,,,,,,,,
பொருள் நிறைந்த புத்தகமும் இல்லை !

கற்றுத் தருவதில்
கலங்கரை விளக்கம் ...
காலப்பதிவின்
கண்கவர் அடையாளம்!

மூடி இருக்கும்
உணவு வயிற்றுப் பசியை
தீர்ப்பது போல ,,,,
மூடிக்கிடக்கும் புத்தகமும்
அறிவு பசிக்கு அன்னமாகும் !

இறைவனுக்கும் புத்தகத்திற்கும்
ஒரே ஒரு வேறு பாடுதான்!
இறைவனை உணர்ந்து படிக்க வேண்டும்
புத்தகத்தை படித்து உணர வேண்டும் !

புத்தகங்களை படியுங்கள் .....
மனம் அமைதி பெரும் !
புத்தகங்களை நண்பராகுங்கள் ...
சிந்தனை சிறகடிக்கும் .....!
புத்தகங்களோடு வாழுங்கள்
அறிவு பயணப் படும் ....!
புத்தகங்கலேயே சுவாசியுங்கள்
தேடல் இனிக்கும் ......................................!

எழுதியவர் : yathvika (10-Oct-13, 1:57 am)
Tanglish : puththagam
பார்வை : 3941

மேலே