+டா டா டா டா டாக்டர்!+ (அ வேளாங்கண்ணி)

"அ அ அ அ அம்மா! அம்மா!"

"என்னடா கணேஷ்!"

"இன்னைக்கு எ எ எ எ என்னம்மா சா சா சா சா சாப்பாடு?"

"ஏண்டா உனக்கு இன்னைக்கு இப்படி திக்குது? நேத்து வரைக்கும் நல்லா தாண்டா பேசிக்கிட்டு இருந்தே!"

"அதுதாம்மா எனக்கும் தெ தெ தெ தெ தெரியல... திடீர்னு கூடவா இப்படி வாய் தி தி தி தி திக்கும்?"

"அதாண்டா எனக்கும் ஒண்ணும் புரியல. சாப்பிட்டு போயி டாக்டர பாத்துட்டு வா!"

"ச ச ச ச சரிம்மா.. சாப்பாடு போடு!"

கணேஷ் சாப்பாட்டை ருசித்து சாப்பிட தொடங்கினான். அவன் காலேஜில் மூன்றாம் வருடம் படிக்கிறான். ஹாஸ்டலில் தங்கி படித்துவருகிறான். நேற்றிலிருந்து செமஸ்டர் லீவ். நேற்று மாலை தான் வீட்டிற்கு வந்தான்.

சாப்பிட்டவாறே நினைத்துக்கொண்டிருந்தான். ஏன் நமக்கு இப்படி திடீர்னு திக்குது. ஏதாவது மனநிலை சம்பந்தபட்டதா இருக்குமோ... நேத்து என்னா பண்ணேன்.. ஒரு நாவல் படிச்சேன்.. அதுல ஒரு கேரக்டர் திக்கி திக்கி பேசும்.. நைட் டீவில ஒரு படம் பாத்தேன்... அதுலயும் ஒரு காமெடி கேரக்டர் இப்படித்தான் திக்கி திக்கி பேசிக்கிட்டு இருந்துச்சு... அதெல்லாம் நினைச்சுக்கிட்டுத்தான் படுக்கப்போனேன்.. அதுனால தானோ என்னவோ என யோசித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தான்...

"சரிம்மா! நான் டா டா டா டா டாக்டர்ட்ட போய்ட்டு வர்றேன்", எனச் சொல்லிக்கொண்டு தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

மருத்துவமனையில் தனது முறைக்காக காத்துக்கொண்டு இருந்தான். அவன் கூட பள்ளியில் ஒன்றாய் படித்த மீனா, நர்ஸ் உடையில் வேக வேகமாக அவனை கடந்து கொண்டிருந்தாள். இவனைப் பார்த்தவுடன் சட்டென நின்றாள்.

"டே கணேஷ் நீயா? இரு ஒரு பைவ் மினிட்ல வர்றேன்", என சொல்லியவாறே ஓடினாள். கையில் ஏதோ ரிப்போர்ட் வைத்திருந்தாள்.

அவள் சென்றதும் பசுமையான நினைவுகளில் ஆழ்ந்தான் கணேஷ். பள்ளி நாட்கள் கண்ணுக்குள்ளே வந்து நிழலாடின.

பள்ளியில் இவன் தான் ஹீரோ. இவனைச்சுற்றி எப்போது ஒரு கூட்டமிருக்கும். போகும் வரும் பயந்த சுபாவமுள்ள நண்பர்களையும், பள்ளித்தோழிகளையும் கலாய்ப்பது தான் இவர்கள் வேலை. அதிகமாக இவர்களிடம் மாட்டுவது மீனா தான். அவள் திக்கி திக்கி பேசுவாள். அவளை எங்கு பார்த்தாலும் சரி "மீ மீ மீ மீ மீனா" என்று அனைவரும் சேர்ந்து கேலி செய்ய ஆரம்பித்தால் ரொம்ப தடவை அவளை அழவைத்துத்தான் அனுப்பியிருக்கிறார்கள். அப்படிச்செய்வது ரொம்ப குஷியாக இருப்பதாக தோன்றும் அவனுக்கு. ஆமாம் இப்போது என்னுடன் பேசிச்சென்றாலே அதே மீனா, திக்கியது மாதிரி தெரியவில்லையே என யோசித்துக்கொண்டிருந்த‌ வேளையில் மீனா திரும்பி வந்தாள்.

"டே கணேஷ்! எப்படா ஊருக்கு வந்த? எப்படிடா இருக்க?"

"ஹாய் மீ மீ மீ மீ மீனா! நான் நல்லா இருக்கேன். நே நே நே நே நேத்துதான் வந்தேன். இ இ இ இ இப்ப செமஸ்டர் லீவ் வி வி வி வி விட்டுயிருக்காங்க. அதான்"

"டே! அப்ப மாதிரியே என்னை கேலி பண்றியா! எனக்கு திக்குவது சரியாச்சுடா!"

"இல்ல மீனா! திடீர்னு எ எ எ எ எனக்கு இன்னைக்கு கா கா கா கா காலேலயிருந்து இப்படி திக்க ஆரம்பிச்சிருச்சு. எ எ எ எ என்னான்னே தெரியில. ரொ ரொ ரொ ரொ ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆமா உனக்கு எ எ எ எ எப்படி சரியாச்சு?"

"அப்ப எனக்கு சரியா படிப்பும் வராது. பசங்கள பாத்தாலும் பயமா இருக்கும். கொஞ்சம் திக்குனப்ப இருந்து நீங்கள்லாம் கேலி பண்ண ஆரம்பிச்சீங்களா.. எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாயிருச்சு.. அதுனால திக்கறதும் அதிகமாயிருச்சு. ஸ்கூல் முடுச்சுட்டு லீவ்ல நான் எங்க மாமா வீட்டுக்கு போயிருந்தேன். அவர் மனவியல் மருத்துவரா இருக்கார். அவர் தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா தைரியம் கொடுத்து என்னை தாழ்வு மனப்பான்மையில இருந்து மீட்டாரு. அப்புறம் கொஞ்சம் நாள்ல திக்குறதும் தானா சரியாய்டுச்சு. என்னை கேலி பண்ண நீயும் இப்ப திக்க ஆரம்பிச்சுட்ட பாத்தியா! குத்தி காட்றேனு நினைக்காத. ஏதோ பேசும் போதே தானா வந்துருச்சு. சாரிடா!"

"என்ன மீ மீ மீ மீ மீனா! இதுக்குபோயி சாரி கேக்குற. அவ்வளவு கேலி ப ப ப ப பண்ண நான் என்னைக்காவது உங்கிட்ட சா சா சா சா சாரி கேட்டுயிருக்கேனா! இப்ப நினைச்சு பா பா பா பா பாத்தா கஷ்டமா இ இ இ இ இருக்கு. ரொ ரொ ரொ ரொ ரொம்ப சாரி மீனா!"

"விடு விடு. இப்ப உனக்கு ஏன் திடீர்னு திக்குது?"

"அ அ அ அ அதுவாப்பா", என திக்கி திக்கி தனது நேற்றைய கதையை சொல்லி முடிக்கவும் மருத்துவரின் உதவியாளர் இவனை அழைக்கவும் சரியாக இருந்தது.

"சரி கணேஷ். டாக்டர பாரு. சரியாயிடும். கவலைப்படாதே", என கூறியவாறே தன் வேலையைத் தொடர கிளம்பினாள் நர்ஸ் மீனா.

டாக்டரிடம் சென்று புன்னகைத்தவாறே அமர்ந்தான் கணேஷ்.

"ம் சொல்லுப்பா! என்ன பிரச்சனை?"

"டா டா டா டா டாக்டர்! எனக்கு திடீர்னு நே நே நே நே நேத்துலயிருந்து ரொம்ப திக்க ஆரம்பிச்சிருச்சு. ரொ ரொ ரொ ரொ ரொம்ப கஷ்டமா இருக்கு டா டா டா டா டாக்டர். என்னான்னு பா பா பா பா பாருங்க"

"ஓ அப்படியா! நேற்று நடந்த நிகழ்வுகள் என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?"

"அதுவந்து நேத்துதான் டா டா டா டா டாக்டர் ஹாஸ்டல்ல இருந்து வீ வீ வீ வீ வீட்டுக்கு வந்தேன். சாயந்தரமா ஒரு நா நா நா நா நாவல் படிச்சேன். அதுல ஒரு கேரக்டர் இ இ இ இ இப்படித்தான் திக்கி திக்கி பேசும். நைட் டீவில ஒரு படமும் பா பா பா பா பார்த்தேன். அதுலேயும் ஒரு காமெடி கேரக்டர் இதே மா மா மா மா மாதிரி திக்கி பேசும். அது ரெ ரெ ரெ ரெ ரெண்டையும் நினைச்சுக்கிட்டே இருந்தேன். இன்னைக்கு கா கா கா கா காலேலயிருந்து இப்படி ஆச்சு டா டா டா டா டாக்டர்!

"இதுக்கு ஒ ஒ ஒண்ணும் பயப்படாதீங்க! ச ச ச ச சரியாயிடும் சீக்கிரமா.."

"டா டா டா டா டாக்டர்! நீ நீ நீ நீ நீங்களுமா...!!!"

"அது இல்லப்பா. நானும் இதுவரை நல்லாத்தான் பே பே பேசிக்கிட்டு இருந்தேன். இப்ப உங்க க க கதைய கேக்கும்போது ரொம்ப ஆ ஆ ஆழ்ந்து கவனிச்சிட்டு இருந்தேனா.. பாருங்க இப்ப எ எ எனக்கு கூட திக்குது. தானா வந்தது தானா போ போ போயிரும்பா. கவலைப்படாதே! எல்லாம் ம ம மனநிலை தான் காரணம்"

"ரொம்ப தாங்க்ஸ் டா டா டா டா டாக்டர். உங்கள பார்த்தவுடன் தான் என் பயமெல்லாம் தீ தீ தீ தீ தீர்ந்துச்சு. வரேன் டா டா டா டா டாக்டர்", என்று சொல்லியவாறே, இனி வாழ்க்கையிலேயே யாரையும் எதுக்கும் கேலி பண்ணக்கூடாது. கேலி பண்ண விஷயமே நமக்கு எப்பவேணா எந்த வழில வேணாலும் வரலாம். அப்பத்தான் அதோட வலியே புரியுது என நினைத்துக்கொண்டே கிளம்பினான் கல்லூரி விழாக்களில் பாட்டுப்பாடி பட்டைய கிளப்பும் க க க க கணேஷ், மருத்துவர் அளித்ததும் ஒரு மனவியல் சிகிச்சை தான் என்பதை உணராதவனாய்..!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Oct-13, 4:00 pm)
பார்வை : 194

மேலே