காலமெல்லாம் உன் காலடியில்

மல்லிகையாய் மணம் பரப்பி
ரோஜாவாய் இதயம் வருடி
தாமரையாய் இதழ் விரிக்கும்
நம்மினிய காதல்ப் பயணத்தில்..!

உன் முதல்ப் பார்வையில்
என்னுள்ளமதைப் பறிகொடுத்து
உச்சரிக்கத் தொடங்கிவிட்டேன்
தினமும் உன் பெயரை ..............!

உனக்காகக் காத்திருக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
யுகமாகக் கடந்து செல்ல
காத்திருந்தேன் உன் வருகைக்காக..!

மணிக்கணக்கில் உன்னுடன் பேச
மணிக்கணக்கில் ஒத்திகை பார்த்து
உனைப் பார்த்த மறுகணமே
மௌனத்தில் முகம் புதைப்பேன்...!

உன் கம்பீர வீர நடையில்
கனிவான வார்த்தைகளில்
மயங்கவைக்கும் மீசையில்
எனை மறந்து ரசிப்பேன் நான்...!

காதல்ப் பயணத்தின் சுபமாக
இனிக்கவைக்கும் அத்தியாயமாய்
என் கைப் பிடித்து
அக்கினி வலம் வந்து
மங்கல நாண் பூட்டினாய்............!

கருத்தொருமித்த நம் வாழ்வில்
கவலைகளை மறக்கவைத்தாய்
உடலை உருக்கும் வேலையிலும்
அலுப்பின்றி `அழைப்பு` எடுப்பாய்..!

உன் உள்ளன்பில் எனைமறந்து
உயரப் பறப்பேன் நீல வானில் ....
காலமெல்லாம் உன் காலடியில்
தவம் கிடப்பேன் என் மன்னவனே...!!
----------------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (15-Oct-13, 5:07 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 791

மேலே