சாபத்துக்குரியவனின் வாழ்வு!(ரோஷான் ஏ.ஜிப்ரி)

வேறொருவரை
வலிந்து தினிப்பதர்க்கென
பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறது
கண்களில் தேக்கி வைத்திருந்த
வீடெனும் கனவு
பின்புலம் அற்றவனின் வாழ்வு
அக்கணமே சாபத்துக்குரியதாகிறது

இன்றைய குடில் புற்றில்
நீர்ப் பாம்புகள் சீறியபடி
சூரியனை நோக்கி படமெடுக்க
குடும்ப அரங்கில் வசை வசூல்
களை கட்டுகின்றன பேச்சு வாக்கில்
கல்லா கையாலாகத்தனத்தை கௌரவித்து

விளை நிலங்களில் தத்துப்புழு தாவி
அறக்கொட்டியென மேய
தூற்றி விடப்படுகின்றது
நம்பிக்கையின் கடைசி மணியும் பதரென

எஞ்சிய மூட்டைகளாலாகும் நிவாரணம்
இடைத்தரகர்களின் விலை நிர்ணயமாக
எதிர் பார்ப்பின் கால்கள் இடர
உடைந்த வக்கடைகளில்
இடிந்து விழுகிறது முகம் குப்புற மனசு

பரண் திடலில் நாட்டிய
ஆள் விரட்டி பொம்மையென
வரப்பில் வரிசையாய்
கொடுப்பனவு பாக்கியுள்ள கூலிகள்

“வேலையற்றவனின் வேலையென்று”
மனைவி போனமுறை
சொன்ன சொற்கள்
கன்னத்தில் அறைந்து விட்டு போக
துரத்திய யானைகளின் பிளிறல்
ஒலிக்கின்றன செவியின் சுவரில்
மரணத்தை தோற்றுவிக்க தக்கதாய்!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (19-Oct-13, 11:40 pm)
பார்வை : 85

மேலே