ஆசிரியர்

ஆசிரியர்...

ஆசிரியர் பற்றி ஓர் கவி எழுத
உட்கார்ந்தேன்.
என்னுள்ளே எண்ணப் புயல்கள்
மனத்துள்ளே கேள்வி வேள்விகள்?
எதைப்பற்றி எழுதுவது?
அவர்களின் மேன்மையைப் பற்றி எழுதுவதா?
அவர்களின் மேதமை பற்றி எழுதுவதா?
எல்லோரும் எழுதுவார்கள் மேன்மையைப் பற்றியும்
மேதமை பற்றியும் சகஜம்.
மாதா..பிதா..குரு..தெய்வம்
உண்மை.
குருவுக்குப் பின்தான் தெய்வமே..!!
இப்போது
தெய்வமாய் கும்பிடும் குருசாமி
கல்லாகி போனரே..!
குருகுல வாழ்க்கை மறந்து
மறைந்தே போனது.
குரு பெயர்ச்சி பலனோ
எதிர்மறையாய் ஆகிப்போனது இன்று.
குருக்கள் இப்போது குருடாகிப் போனார்களே!
கட்டைவிரல் காணிக்கை கேட்கும்
துரோணாச்சாரிகள்
அதிகமாகிப் போனார்களே!
எழுத்தறிவித்தவன் இறைவனாவான்
அந்தோ ..மாணவர்களின்
தலையெழுத்தை மாற்றி
அவர்களின் எதிர்காலத்தையே
இருளில் அமுக்கிவிடும்
அவலங்களின் அரங்கேற்றம்
தொடர்கதையானதே.
குரு காணிக்கையாய்
மாணவியரின் கற்பு
விலையாகிப் போகிறதே.
பத்திரிக்கை..தொலைக்காட்சி
சுடும் செய்திகளாய்
நிறைந்து வயிற்றில்
அமிலம் ஊற்றுகிறதே..!
ஆசிரியர்கள் இன்று
ஆ சிறியர்கள் ஆகி
மதிப்பிழந்து போனார்களே
ஆசிரியர்களே கண் விழியுங்கள்
எதிர்கால மாணவர்களின்
வாழ்க்கையும் வளங்களும்
உங்கள் கைகளில்.
பெற்றோரின் நம்பிக்கைகளை
கண்ணாடித் துண்டாக்காதீர்கள்..
கலங்கரை விளக்காயிருங்கள்
கலங்கியச் சாக்கடையாய்
நாறிப் போகாதீர்கள்.
Dr. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
சாவித்ரிபாய் பூலே
இரவீந்த்ரநாத் தாகூர்
ஸ்வாமி விவேகானந்தர்
APJ அப்துல்கலாம்
மீண்டும் பிறந்துவந்து
தொலைந்த குரு மரியாதையை
மீட்டெடுக்கட்டும்
மாணவரின் எதிர்காலத்தை
குன்றின் தீபமாய்
வானின் நட்சத்திரமாய்
பிரகாசிக்க விடட்டும்.
ஏற்றவிட்ட ஏணியைப் பற்றி
இப்படி ஓர் கவிஎழுத வைத்த
காலத்தின் கொடுமையை
நொந்துகொள்ளாமல்
வேறு என்ன செய்ய?

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (3-Apr-25, 7:39 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : aasiriyar
பார்வை : 16

மேலே