உறவு - உவர்ப்பு

விதிவிலக்கானது விதியின் பரிசளிப்பா?
இல்லை !
பாசாங்கு வாழ்க்கையிலே,
பலிக்கடாவும் நானா?
வாழ்ந்து தொலைக்க வந்தேன்!
வாலறுந்த பட்டமானேன்!
காலச் சுழற்சியிலே,
கொண்ட கோலமும் குறைந்துவிட்டேன்!

வேற்றுருச் சிந்தனைகள் கூற்றுவனாய் வேரறுத்து,
உறவில்லை நீயென்று உதறியும் தள்ளும்!
உதிர மறுப்பவனின் உதிரம் குடிக்கும்!
விட்டில் பூச்சியாக்கி விளக்கிலும் வீழ்த்தும்!

அன்பைக் கொட்டியதால்,
அந்நியமாக்கப்பட்டேன்!
உவர்ப்பு மிகுதியினால்,
உவப்பற்ற உறவுமானேன்!
அளவுடன் இருந்திருக்க வேண்டும்!
நானும் உப்புதான்!
வெறும் சுவையூட்டிதான்!

பளிங்காக மினுங்கினாலும் - நான்
வைரமில்லையே?
சுவையூட்டினாலும் - என்னில்
சுரமில்லையே!
நான்!
வெறும் உப்புதான்!
சமையலின் சேர்க்கை போல்,
சமையத்திற்கு மட்டும் நான்!
அவைக்கெல்லாம் அழைப்பில்லை!
அடுக்களையொன்றே என் அரசாங்கம்!

கண்ணீர் மிகுதியிலே - இன்று
கசிந்தும் போய்விட்டேன்!
இனி நான்,
காலக்கடலினிலே,
காணாமலும் போய்விடுவேன்!
ஆனாலும்,
உப்பு நீராய் வாழ்ந்திருப்பேன்!
உலகில் என்றும் நிலைத்திருப்பேன்!

எழுதியவர் : Raguvaran (3-May-25, 7:36 am)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 23

மேலே