எம்மொழிக்கும் மூத்தமொழி தமிழே - கவிஞர் இரா இரவி

எம்மொழிக்கும் மூத்தமொழி தமிழே!

- கவிஞர் இரா. இரவி

*****

சில நூறு வருடங்கள் தான் பல மொழிகளுக்கு
பல்லாயிரம் வருடங்கள் நம் தமிழ்மொழிக்கு

அகிலத்தின் ஆதிமொழி அற்புத தமிழ்மொழி
அகிலம் முழுவதும் பேசப்படும் தமிழ்மொழி

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய
கல்கண்டு கனிமொழி நம் தமிழ்மொழி

தமிழை உச்சரித்தால் ஆயுள் நீளும் உண்மை
தமிழை ஆராய்ந்த அறிவியலார் சொன்னது இது

எண்ணிலடங்காத சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி
எண்ணற்ற இலக்கியங்கள் உள்ள மொழி தமிழ்மொழி

வழக்கொழிந்து விட்டன பேச்சில் இல்லை பலமொழி
வாழையடி வாழையாக தழைத்து வளர்ந்தது தமிழ்மொழி

எழுத்தே இல்லாத சிலமொழிகள் உண்டு இங்கே
எழுத்திற்கு பஞ்சமே இல்லாத பைந்தமிழ் நம் மொழி

பன்னாட்டு மொழியாக திகழ்ந்து வருவது பண்டைத்தமிழ்
பழமொழி. திருக்குறள். நாலடியார் நிறைந்தது தமிழ்

பண்பாட்டை பறைசாற்றி வரும் கம்பீரம் தமிழ்
பண்பாட்டை பலருக்கும் பயிற்றுவிக்கும் நம் தமிழ்

ஈடு இணையற்ற வளமை மிக்கது வண்டமிழ்
அமெரிக்க ஐக்கிய மன்றத்தில் இடம்பெற்ற தமிழ்

வானிற்கு அனுப்பிய மொழிகளில் இடம்பெற்ற தமிழ்
வானளாவிய புகழினை பெற்றுத் தந்திட்ட தமிழ்

எம்மொழிக்கும் மூத்தமொழி எம் தமிழே
எந்தமொழிக்கும் பகை இல்லை எம் தமிழே!

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (2-May-25, 9:14 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 9

மேலே