உழவும் உயிர் அற்று கிடக்குதே ......
காடெல்லாம் நாடாக்க
பாடுபட்ட எத்தனையோ கைகள்
காடெல்லாம் கழனியாக
ஓடாய் தேய்ந்த உழவர் எத்தனையோ
மேடு பள்ளம் எல்லாம்
கோடு கோடாக உழுது
ஆடு மாடெல்லாம் அழகாக தொழுது
வீடெல்லாம் விருந்தளிக்கும்
விலையில்லா விவசாயி இவரோ ....
மண்ணெல்லாம் விளைய
பொன்னாக பெருக
எண்ணமெல்லாம் எண்ணமுடியாத
வண்ணமென வயலெல்லாம்
மனம் போல குணம் போல
தினம் விளையனும் வெள்ளாமை ....
உழுது போட்ட நிலமெல்லாம்
பழுதாகி கிடக்குதைய்யா
உயர உயர கட்டிடம் எல்லாம்
உயர்ந்து நிற்குதைய்யா ...
பொழுது பார்த்து எழுந்து
உழுது பயிர் செய்த
உழவன் பூமியோ உயிரற்று
உழவும் உயிர் அற்று கிடக்குதே ......
உணர்வு கொண்டு
உணவு தந்த உழவரெல்லாம்
உணர்வற்று உணவும் அற்று
உழவும் உயிர் அற்று கிடக்குதே ......