பெண் சிசு - ஒரு தாயின் ஓலம்

அந்தி சாஞ்ச ஒரு ராப்பொழுதுல
உன்கூட ஒன்னா நான்சேர
நாளெண்ணி முப்பதுல
உருவானா சிறுக்கி மக

வாழையடி வாழையாக
வம்சத்தோட வாரிசாக
வளம் வருவான் இளவரசன்னு
காத்திருந்தா எங்க வீட்டு
கிழவி அவ

பசும்பாலும் பனை நீரும்
நெய் வருத்த கருவாடும்
வாய் நெறைய சோறூட்டி
வயிரால வளத்த மக

செவ்வாட்டு ஈரலையும்
பக்குவமா பூண்டு சேர்த்து
நல்லெண்ணையோட சிறுவெங்காயம் வதக்கி
வருத்த கறி வாய்க்கு வர

அலுங்காம குலுங்காம
பொத்தி வெச்ச ஒத்த உசுர
பதுசாத்தான் பாத்துக்கிட்டேன்
குங்குமப்பூ பாலோட

இளவரசன் வாரான்னு
ஊர்கூடி பந்த போட்டு
சாதி சனம் வளவி பூட்ட
வீதி சனம் வெறிச்சு பாக்க
வளகாப்பும் தான் வந்தோட

பத்து மாசம் பறந்தோட
முத்தான ஒரு புதனுல
அய்த்தானின் துணையோட
நான் போனேன் பெத்தெடுக்க
என் வம்சத்தோட முத்தெடுக்க

ஒடம்பு வலி ரணமாக
உதிரமது வெளியோட
ஊரெழுப்பும் சத்தத்தோட
பதுமை அவ பிறந்து வந்தா
பஞ்சணையில் படுத்துறங்க

பசியோட பிஞ்சு அவ சத்தம்கேட்டு
பால் வார்க்க நான் போனேன்
பச்சை உடம்புக்காரி
என் நெஞ்சோட

மகராசன் வருவான்னு
காத்திருந்த கிழவி அவ
ஒப்பாரி வெச்சாளே
எழவு விழுந்த வீடு போல

மகராணி போலாட்டம்
என் ஆசை மக இருந்தாலும்
மொகம் கூட பாக்காம
மறு பேச்சு பேசாம
மொறச்சாளே பாவி அவ

தாய் பாலு வேணுமுன்னு
பச்சைப் புள்ள கை நீட்ட
அண்ணாந்து பாக்கச் சொல்லி
அழுத புள்ள அவ வாயில்
கள்ளிப்பால குடுத்தாளே
கிழவி இல்ல கள்ளி அவ

கண்ணிருந்தும் குருடச்சியா
வாயிருந்தும் ஊமைச்சியா
பச்சைப் புள்ள துடிக்கையிலே
வக்கத்துப் போயி நிக்குறா
வாக்கப் பட்டு வந்த மக ............


----------மு.ஓம்குமார்

எழுதியவர் : மு.ஓம்குமார் (24-Oct-13, 6:56 pm)
பார்வை : 806

மேலே