மனிதாபிமானம்

தாயை பிரிந்து மழலையாக
காடு கடத்தப்பட்டேன்.

உறவு, சூழல் இழந்து
அனாதையாக வளர்ந்தேன்.

மலர்ந்து கிடக்க இயலாமல் - மனையில்
மடக்கி படுத்து கிடந்தேன்.

காலில் சங்கிலி இறுக்க
கைதியாகி காலம் கழித்தேன்.

ஊர் நெடுக நடந்து நடந்து
யாருக்கவோ பிச்சையேடுத்தேன்.

கால் கடுக்க பருத்த உடலோடு
கல்யாண பந்தலில் நின்றிருந்தேன்.

புணர்தல் இச்சை கொள்ளாமல்
பூப்பெய்தி கிழவியானேன்.

ஊசி அங்குசம் கிழிக்க
வலியில் நானும் துடித்திருந்தேன்.

ஒருநாள்
பொறுமையிழந்து மிதித்தேன்.

நசுங்கிய பாகனை பார்த்து
உங்கள் மனதில் வழிந்தது பாருங்கள்....
அந்த உணர்வுக்கு பெயர்
"மனிதாபிமானம்"

---தமிழ்தாசன்---

எழுதியவர் : தமிழ்தாசன் (25-Oct-13, 10:39 pm)
பார்வை : 87

மேலே