தலைவனின் மதம் ரோஷான் ஏஜிப்ரி
மக்களுக்காக தலைவர்கள்
வாழ்ந்த காலம் போய்
தலைவர்களுக்காக
மக்கள் வாழ வேண்டிய
கலி காலம் இது..
இங்கும் எனக்கு தெரிந்த
ஒரு கோண் கோலோச்சுகிறான்
திசைகள் நாற்புறமும் மந்திரித்து
பூதங்கள் நிறுத்தியிருகிறான்
ஏவல்,விலக்கல் இரண்டும்
அவனது ஆணையின் படியே
ஆகுமானதாகிறது...
வாக்கையும்,வசதியையும் வழங்கியவன்
கஞ்சிக்கும் வழியற்று
கல்வெட்டு கனவுகளில்...,
வாக்கையும்,வசதியையும் வாங்கியவன்
வெல்வெட்டு விரிப்புகளின்
வீராப்பு இருக்கைகளில்
தலைவனின்
இருப்பின் சௌகரியத்தை
மேல் நாட்டு நாய் கம்பிரமாய்
குரைத்து சொல்கிறது “வாவ்” வென..
அந்த தெருவே குலை நடுங்கும் அளவு
வசதியின் அனைத்து படித்தரங்களும்
அரண்மணையின் தட்டுகளை
நிறைத்து இருக்கின்றன
இறக்குமதி மதுபான புட்டிகள்
குவளைகளுக்குள் குதிக்க
தயாராகி நிற்கின்றன
கண்ணாடி மேசியில்
தடாகத்தில் நீந்துகின்றன
தலைவன் விரும்பி உண்ணும்
செதிலற்ற மீன்கள்
இப்போதும் அவனது கல்லையில்
இரண்டு துண்டுகள் வலதும்,இடதுமாய்
“செகுருட்டி கமரா” என்னும்
தெய்வங்களை வழிபட்டபடி
தலை நகரில் தரித்திருக்க
தலைவனின் மதம் படர்ந்து
வேர் பிடிக்கிறது எனது மண் பற்றி!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.