வணக்கம் தோழர்களே- கே-எஸ்-கலை

அன்பிற்கு அடையாளமும் அர்த்தமும் தந்து என்னை நானே நேசிக்க வைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், அந்த அழகான சொந்தங்களை எனக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கும் எழுத்து தள இயக்குனர்கள் மற்றும் நிர்வாகத் தோழர்களுக்கும் உரிமையும் அன்பும் கொண்ட வணக்கங்கள் உரித்தாகட்டும் !

எங்கோ ஒரு மூலையில் கிறுக்கிக் கொண்டிருந்தவனை பாலூற்றி பசியாற்றி பல இதயங்களில் வேரூன்றி விளையாடச் செய்த இந்த எழுத்து திடலின் முன் மகிழ்ச்சி ததும்ப பேசுகின்ற இந்த நிமிடங்களில் எண்ணிலா பட்டாம்பூச்சிகள் மனதுக்குள் சிறகடித்துப் பறந்துக் கொண்டிருக்கும் செய்தி சிலர் அறிவீர்கள்...பலருக்கும் அறியத் தருகிறேன் பாசத்துடன் !

இணைய உலகத்திற்கு வெளியே குடும்பத்தை தவிர ஒற்றைக் கைவிரல்கள் மிகையாகும் அளவிலேயே எனக்கு சொந்தங்கள் இருக்கிறார்கள் ! அதனால் அதீத உரிமையோடும் அக்கறையோடும் உங்களில் பலருடன் அடிக்கடி சண்டைப் போட்டுக்கொண்டும், சிரித்துப் பேசி மகிழ்ந்துக் கொண்டும் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக உறவாடுவது யான் பெற்ற பாக்கியமே !

என்னை, என்னைவிட நேசிக்கும் ஒரு மாமேதையுடன் இனிவரும் என் வாழ்க்கைப்பாதை நீளப் போகும் அந்த மகத்தான நாள் குறித்து உங்களுடன் பேசுவதில் பேரானந்தம் !

இணையவழிச் சொந்தமாக, முகபுத்தகத்தில் பத்தோடு பதினொன்றாக புகுந்து அகப்புத்தகத்தின் அத்தனைப் பக்கங்களுக்கும் சொந்தக்காரியாய் ஆகிப்போன அந்த குட்டி தேவதையின் முழுமையான சொந்தக்காரனாய் ஆகப் போகும் தருணம், நரம்புகள் யாவிலும் ஓடும் உதிரத்தை அமிர்தமாய் ஆக்கிக் கொண்டிருகிறது !

என்னைவிட அன்பிலும், அறிவிலும், அழகிலும் மிளிரும் ஒருத்திக்கு என்னை முழுமையாய் சமர்ப்பணம் செய்யும் அந்த மகத்தான திருநாள் எதிர்வரும் புதன்கிழமை ( 20-11-2013 ) காலை 8.05 தொடக்கம் 9.45 இற்கு இடைப்பட்ட நேரம் என பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டுள்ளது

இப்போது உங்களில் பலரும் மனதுக்குள் என்னிடம் கேட்கும் “யாரவள்?” என்ற கேள்வி மிருதுவாய் அழகாய் என் மனதுக்குள்ளும் கேட்கிறது...எனக்குள் நீங்கள் அனைவரும் இருக்கும் காரணத்தால் !

ஆம் தோழர்களே...என்னை முழுமையாய் ஆட்கொண்டு ஆட்சி செய்யப் போகும் அந்த தேவதை...உங்களில் பலருக்கும் அறிமுகமான தோழியாக இருக்கும் “ஹேயேந்தினி ப்ரியா” என்பதை மகிழ்ச்சியின் உச்சத்தில் நின்று அறிவிக்கும் இந்த நொடியில் உலகில் இருக்கின்ற மிகப் பெரிய அதிஷ்டசாலியாய் உணருகிறேன் !

அன்புள்ளம் கொண்ட தோழர்களே...நிறைய பேச விரும்புகிறேன்..ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை...உங்களில் பலருக்கும் பல காரணங்களால் நன்றி சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். மணவாழ்வில் அடி எடுத்து வைக்கும் இந்த அற்புத பாக்கியத்தை பெற்ற களிப்பில் திணறிக் கொண்டிருக்கும் எங்கள் இருவருக்கும் உறவாகிப் போன உங்கள் அனைவரையும் இதயத்தால் அணைத்து எழுத்தால் முத்தமிட்டு இப்போதைக்கு விடைபெறுகிறோம் !

தொடர்ந்தும் எங்கள் இதயத்துள் தாங்கள் அனைவரும், தங்கள் அனைவரினதும் இதயங்களுக்குள்ளும் நாங்களும் வாழ்வோம் !

--வாழும்வரை காதலிப்போம் – வாழ்க்கை எங்களைக் காதலிக்கும்--

எழுதியவர் : கே.எஸ்.கலை (16-Nov-13, 11:03 am)
பார்வை : 652

மேலே