ஏதோ ஒன்று

நாலாம் தெரு ஜோதிமணியின்
சாவுக்குப் போயிருந்தபோது
அவளைப் பார்க்க முடிந்தது.
பேச முடியவில்லை.
மூக்கைச் சீந்தி அழுத முகத்தையே
உற்றுப் பார்த்தேன்.
அவளும் பார்த்தாள் அவ்வப்போது.

கண்கள் சந்தித்த வேளையில்
தடுமாறிய முன்னாள் காதல்.
பூரித்து உப்பியிருந்த உடலில்
மின்னிய வடச் சங்கிலிகளும்
வளையல்களும்
நிகழ்நாளின் நிறைவாழ்வைச் சொல்லின.

தேய்ந்து பிய்ந்து
நிறம் போன செருப்பை
உட்கார்ந்திருந்த பெஞ்சின்
அடியில் தள்ளி மறைத்தேன்.

கணவன் காட்டிய
கண்களின் பாஷை புரிந்து
பொங்கிய அழுகையை
சட்டென நிறுத்தியெழுந்து
குழந்தையுடன் பின்தொடர்ந்தாள்.

ஜோதிமணியின் பிணத்துக்குப்
பக்கத்தில் செத்துக்கிடந்த
ஏதோ ஒன்றை உற்றுப் பார்த்தேன்.

எழுதியவர் : கணேஷ் எபி (25-Nov-13, 4:50 pm)
சேர்த்தது : ganesh ebi
Tanglish : yetho ondru
பார்வை : 99

மேலே