என்னவோ எழுத 4

என்னவோ எழுத...4

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே...?!

மழலைப்பிஞ்சு வெம்ப இன்றும் பால்ய
மணநாணேற்றி (வ)தைப்பதை உலகோற்கு...மழலை
அர்த்தநாரியாய் ஈசன்உலவும் நாடெங்கள் நாடென
ஆசைப் பறையைஅடித் தறைவேனோ...

கல்வியால் அறிவுக்கண் திறக்குமென சொலும்
கற்றறிந்தோரே மழலை மொட்டுக்களை ..தம்
காமஇச்சைக்குத் துணையாக்கிக் கண்ணியம் தவறும்
கருமத்தைக் காரித் துப்புவேனோ...

எட்டிக்கா யென பள்ளி பாடத்தைத்
தட்டிக் கழிக்கும் பிள்ளைமனம்... மாற
கட்டித் தங்கக் கல்விச் சுமையை
வெட்டிப் பொன்அணியாக்கா தொழிவேனோ...

கல்விச்சாலை வர்த்தகச் சோலையென பூத்துக்
குலுங்கிக் காசுலோர் பக்கம்சாயும் ...வர்த்தக
கல்விக்குடல் கிழித்து காசுக்கல்வி இரத்தம்
குடிக்க நரசிம்மமாய் எழுவேனோ...

மழலைதெய்வம் குப்பையென வீசு வோரை
நின்று கொல்லும் நிலைமாற்றி...அன்றே
பழிதீர்க்கும் தெய்வமாய் மழலை மாறட்டுமென
சாபக்குரோதம் விதைத்திடு வேனோ...

உண்மையை மென்று எச்சில் விழுங்காமல்
உடைந்த பானைநீ ரெனகசிந்து...கலகமூட்டும்
உன்மத்தம் பிடித்தவனென எழுதத் தடை
உரைப்பா யெனமுடங் கிடுவேனோ...

அவதூறு வழக்கு என்மேல் வராதிருக்கவும்
எழுத்துத் தடைபெறாது நிலைக்கவும்...வன்மக்குப்பை
கிளறாமல் காதலொன்றே வசந்தவாழ்வு தருமென
பண்பாடும் காதற்சேவலாய் மாறுவேனோ...

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே...?!

...நாகினி

எழுதியவர் : நாகினி (2-Dec-13, 4:54 pm)
பார்வை : 75

மேலே