அம்மா மரணித்து விட்டாள்
அம்மா மரணித்து விட்டாள்
அந்த ஊருக்குள் என் குடிசையின் முன் பெஞ்சில அம்மா படுக்க வைக்கப்பட்டிருக்கிறாள். ஐந்தடி நீளமும், இரண்டடி அகலமுமே கொண்டதாக இருக்கிறது அந்த பெஞ்சு. அதில அம்மாவை படுக்க வைத்தும் பெஞ்சில இடமும் வலமும் கொஞ்சம் இடம் இருந்தது.
வாடி வதங்கிய சரீரம், வயதின் தளர்ச்சி நாலடியாக சுருங்கி நல்ல உணவை இத்தனை வருடங்களாக காணாத வயிறு, ஒரு கருமையான மூட்டையாகத்தான் எனக்கு தெரிந்தது. அவள் மேல் போர்த்தியிருந்த வெள்ளை துணிதான் அது ஒரு பிணம் என்று காட்டியது.
நான் இங்கு வந்து இருபத்தி ஐந்து வருடங்கள் இருக்கலாம், ஆறு மாதத்திற்கு முன்னால் இங்கு வந்திருக்கிறேன். என் மச்சினன் என் பிறப்பை கண்டு பிடித்து இன்னாரின் மகன் நீ என்று சொன்ன பின்னால் மலேசியாவில் இருந்து வந்திருந்த நான் இங்கு வந்தேன்.
இவள்தான் உன்னை பெற்றவள் பக்கத்தில் இருந்த மச்சினன் சொல்லவும் மெளனமாய் அம்மாவை பார்த்தேன். இதோ இப்படி படுத்து கிடக்கிறாளே அதே போலத்தான் அன்று ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தாள். கறுத்து சிறுத்து காணப்பட்ட அம்மாவை என்னாலே காண சகிக்கவில்லை
என்ன செய்வது? நான் இந்த ஊரைவிட்டு ஓடும்போது எனக்கு வயது பத்து இருக்கலாம். என்னோடு இன்னொரு பையனும் அன்று இரயிலில் ஏறியது ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஏன் இரயில் ஏறினோம் என்று ஞாபகமில்லை. ஆசிரியர் அடிக்கு பயந்து ஏறினோமா? இல்லை யாரோ ஒருவன் என்னை புளியமாரால் விளாசுவது ஞாபகம் இருக்கிறது, அது அப்பனாய் கூட இருக்கலாம், அந்தாளுக்கு பயந்து கூட இரயில் ஏறியிருக்கலாம்.
அதன் பின் தனியாய் சென்னையில் சுற்றிய ஞாபகம் இருக்கிறது. மூன்று மாதங்கள் தெருவிலேயே படுத்து தூங்கியது கூட ஞாபகம் இருக்கிறது. ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து முதலாளி என்னை நம்பி மலேசியாவுக்கு அனுப்பி அங்கு ஒரு கடையில் வேலைக்கு சேர்த்து விட்டதும் நடந்து முடிந்து போன காலங்கள்.
அவரே ஒரு குடும்பத்தில் பெண்ணை பார்த்து கட்டி வைத்து மலேசியாவில் குடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். இரு குழந்தைகளாகி இருவரும் மாங்கு மாங்கு என்று சிறிய கடை ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
இத்தனை வருடங்கள் கழித்து சென்னைக்கு வந்த பொழுது மச்சினன் என் ஊரை கண்டு பிடித்து இதோ இறந்து கிடக்கிறாளே அவளை அம்மாவென அறிமுகமும் படுத்திவிட்டான்.
அப்பா..! எனக்கொரு மூலவேரை கண்டு பிடித்து விட்ட மகிழ்ச்சி இருந்தாலும், அவளையும் கூப்பிட்டு போய் வைத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கும் வசதிப்படவில்லை.
அக்கம் பக்கத்து குடிசையில் இருப்பவர்களிடம் பத்து நூறு கொடுத்து அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், சொல்லி விட்டு சென்றவன், இதோ ஆறு மாதங்கள் கழித்து தகவல் அறிந்து அம்மாவை வழி அனுப்புவதற்காக அடித்து பிடித்து தனியாக வந்து சேர்ந்திருக்கிறேன்.
பாவம் மிகுந்த சிரமத்திலேயே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறாள். நான் இங்கிருக்கும் வரை உன் அப்பா அவளை போட்டு அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்.அவளுடைய ஒரே நம்பிக்கையாய் நீ இருந்தாய், ஆனால் நீயும் ஒரு நாள் காணாமல் போய், அதன் பின் அவள் வாழ்க்கை சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாகி ஒரு வழியாய் உன் அப்பனும் போய் சேர்ந்த பின்னால்தான் அவளுக்கு அவனது அடி உதைகளில் இருந்து விடுதலை கிடைத்தது.
ஆனாலும் கை கால்கள் விழுந்து விட்ட நிலையில் அக்கம் பக்கம் அவ்வப்போது ஊற்றும் கஞ்சியை குடித்தே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறாள்.
அவளுக்கு நிம்மதி என்று பார்த்தால் இந்த் ஆறு மாதங்கள்தான், அதுவும் நீ மலேசியாவில் இருந்து வந்திருந்ததால் ஊரில் கொஞ்சம் அவளுக்கு மரியாதை கிடைத்து இருக்கிறது. அக்கம் பக்கம் நீ பணம் கொடுத்திருந்ததால் அவளுக்கும் கொஞ்சம் சாப்பிட,கொஞ்சம் கெளரவமாய், சோறு போட்டிருக்கிறார்கள். ஆனால் ஆறு மாதங்கள் கூட அந்த நிம்மதி கிடைக்கவில்லை, அதற்குள் போய் சேர்ந்து விட்டாள்.
சட்டென என் நினைவுகள் கலைய எதிரில் ஒருவன் கவலையாய் முகத்தை வைத்துக்கொண்டு நின்றான். என்னைய ஞாபகம் இருக்கா? ஹூஹூம் எனக்கு கொஞ்சம் கூட ஞாபகம் வரவில்லை, இருந்தாலும் தலையை மட்டும் ஆட்டினேன்.
ஒண்ணாம் வகுப்பில் இருந்து ஒண்ணா படிச்சோம், பரஞ்சோதி நீ சோதி சோதின்னு கூப்பிடுவே.. அவன் சொன்னது எதுவும் எனக்கு ஞாபகமே வரவில்லை, என்றாலும் மெளனமாய் அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தேன்.
அம்மாவை நல்லபடியாய் அனுப்பணும் மெல்லிய குரலில் சொன்னான். சட்டென என் சட்டை பையில் இருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து அவன் கையில் திணித்தேன். இந்தா இதுல இரண்டாயிரம் ரூபாய் இருக்கும் என்னென்ன பண்ணனும்னு நினைக்கிறயோ அப்படி பண்ணு.
அவன் முகம் பிரகாசமானது. பத்து நிமிடத்திற்குள் அங்கு வந்தவர்களுக்கு சுட சுட டீ வழங்கப்பட்டது. பறையின் தாளங்கள் ஒலிக்க வைக்க நான்கைந்து பேர் வந்து விட்டனர்.
களை கட்டி விட்டது அம்மாவின் மரணம் அந்த ஊரில். அதுவரை தான் தனியாக சுற்றி அக்கம் பக்கம் போட்ட சாப்பாட்டை சாப்பிட்டு வாழ்ந்தவள் இப்பொழுது ஊரே வாயில் வைக்கும்படி பிரயாணப்படுகிறாள். பறையின் தாளங்களூம் ஆட்டம் பாட்டங்களுடன், பட்டாசுகளும் வெடிக்க ஊர்வலம் சுடுகாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தது.
அந்த ஊர்வலத்துக்கு கிட்டத்தட்ட ஐம்பது பேர்களுக்கு மேல் சேர்ந்து விட்டனர். எல்லாம் பரஞ்சோதியின் ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும்.
எல்லா காரியங்களும் முடிக்க மணி மாலை நான்குக்கு மேல் ஆகி விட்டது. திரும்பி வந்து எல்லாம் குழுமி பின் ஒவ்வொருவராக விடை பெற்று சென்றார்கள்.
பரஞ்சோதி இந்தா மிச்சப்பணம் எல்லா செலவும் போக, நானூறு ரூபாயை கையில் கொடுத்தான்.
நான் அவன் கையிலேயே அந்த பணத்தை திணித்தேன். நீ காலையில இருந்து ஒரு பொட்டு தண்ணி கூட குடிக்காம வேலை செஞ்சுகிட்டு இருந்தே. இன்னும் வேணா பணம் தர்றேன், இந்தா என்று ஒரு ஐநூறு ரூபாயை சேர்த்து அவன் கையில் திணித்தேன்.
அவன் அப்படியே எல்லா பணத்தையும் மீண்டும் என் கையில் திணித்தான். உண்மையிலேயே உனக்கு என்னை ஞாபகம் இருக்கா? தெரியலை, ஆனா எனக்கு ஞாபகம் இருக்கு, உங்கம்மா உன்னையத்தான் மலையாட்டம் நம்பி இருந்துச்சு, ஆனா அன்னைக்கு உன்னைய இரயிலுக்குள்ள ஏத்தி விட்டுட்டு நான் இறங்கி வந்துட்டேன். ஏன் அப்படி வந்தேன்னு எனக்கு இன்னைக்கு வரையிலும் தெரியலை.
அதுக்கப்புறம் உங்கம்மாவை பார்க்கறப்ப எல்லாம் என் மனசு பட்ட பாடு,அதுவும் அவ ஒரு வேளை சோத்துக்காக வீடு வீடா கையேந்தி நின்னது.. நீ இருந்திருந்தா இதுவெல்லாம் நடந்திருக்குமா? அப்படீன்னு ஒவ்வொரு நாளும் நான் நினைச்சு அழுதிருக்கேன்.
என்னால என்ன பண்ண முடியும்? முடிஞ்சா உங்கம்மாவுக்கு ஒரு வேளை கஞ்சி ஊத்த முடியும், அதுக்கே எனக்கு வழியில்லை, நானும், என் பொஞ்சாதியும் கூலிக்கு போனாத்தான் என் மூணு குழந்தைகளுக்கும் கஞ்சி ஊத்த முடியும். இப்படி இருக்கறப்ப நான் உங்கம்மாவ பார்த்து பார்த்து அழுகறதை தவிர எனக்கு வேற ஒண்ணும் தோணவே இல்லை. உங்கம்மா இந்த ஆறுமாசமா நெஞ்சிய நிமிர்த்திகிட்டு நடக்கறதை பார்த்த பின்னாடிதான் என் மனசு சமாதானமாச்சு.
உங்கம்மாவ கெளரவமா அனுப்பனுமுன்னு முடிவு பண்ணித்தான் நான் யோசிச்சுகிட்டு நின்னேன். நல்ல வேளை நீயே கை நிறைய பணம் கொடுத்து அவளை கெளரவமா அனுப்பி வைக்க முடிஞ்சது. போதும், போதும், என் பசி எல்லாம் இந்த சந்தோசத்துலயே அடங்கிடுச்சு, கண்களில் நீர் வழிய சொல்லிக்கொண்டே போனான்.
அது வரை எந்த உணர்ச்சிகளும் தோன்றாமல் கடமையாய் காரியங்களை செய்து கொண்டிருந்தவன் முதன் முதலாக அவன் கைகளை பற்றிக்கொண்டு அம்மா..அம்மா.. பெரும் சத்தத்துடன் விம்மல்களாய் என் வாயில் இருந்து பீறிக்கொண்டு வெளி வந்தது.