நிழலான நிஜங்கள்

ஆதவனைக் காணாத கவலையில் கார்காலக் கருமுகில்கள் துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்க, பக்திப் பாடலுடன் களைகட்டிய அதிகாலைப் பொழுதில்.......

" என்னப்பா...காலையிலேயே ரொம்ப கவலையாய் இருக்கிறீங்க...!"
இரவு வேலையை முடித்துக்கொண்டு, அப்போதுதான் வீடு திரும்பிய ராகவன் மேலங்கியைக் கழற்றியவாறே தன் தந்தையிடம் கேட்டான்.

பதில் வருமுன்னே " சுகந்தி...அப்பாவுக்கு டீ போட்டுக் கொடுத்தியா...?" அவனின் குரல் மனைவியை நோக்கி நீண்டது.
"இப்பதாங்க கொடுத்தேன்..." சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்து பதில் கூறியவள், காலை உணவு தயாரிப்பதில் மும்முரமாய் இருந்தாள்.

சதாசிவத்தார் ஒரு நிமிடம் பதில் பேசாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டார். பின் சற்று செருமியபடி,
"ஒண்ணுமில்லையப்பா....குளிர்காலம் ஆரம்பமாயிட்டுது ...என்னாலை இந்தக் குளிரைத் தாங்க முடியேலை...ஒருக்கா ஊருக்குப் போய் வரலாமெண்டு யோசிக்கிறேன்...அதுதான்..."
முடிக்காமல் இழுத்தார்.

"அட அதுவா சங்கதி....போனாப் போச்சு...வந்து ரண்டு வருஷம் கூட ஆகேலை.அதுக்கிடையிலை ஊர் ஞாபகம் வந்துடிச்சா....!?"
சிரித்தபடி கேட்டான் ராகவன்.
" எங்கே சொப்னாவைக் காணேலை ...?" அவன் கண்கள் அருமை மகளைத் தேடியது.
"சொப்னாவும், ரமேசும் மாலாக்கா வீட்டை கணித வகுப்புக்கு போயிட்டினமப்பா .."
என்றபடி தேநீரை கணவனிடம் நீட்டினாள் சுகந்தி.

" லீவு நாளிலையும் பிள்ளையளை ஒழுங்காய்ப் படுக்கவிடாமல் படி படி எண்டு ரியூசனுக்கு கலைச்சுப் போட்டியா...!"
பதிலை எதிர்பாராதவனாய், தேநீரை வாங்கியபடி சோபாவில் சாய்ந்தான் ராகவன்.
தன் தந்தையை நினைத்தபடி பின்னோக்கிப் போயின அவன் ஞாபகங்கள் .......


தோட்டம் செய்தே அவனையும்,தமக்கையையும் சிரமப்பட்டு வளர்த்தனர் மரகதமும், சதாசிவமும்.
அடுத்தடுத்து கலவரங்கள் நாட்டில் நடக்க, உயிர் தப்பினால் போதும் என்று ராகவனின் படிப்பை இடைநடுவில் நிறுத்தி, தெரிந்த முகவர் மூலம் கடன்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தனர் பெற்றவர்கள். ராகவனின் அக்காவுக்கு ஊரிலேயே திருமணமும் செய்து வைத்தனர்.

ஒருநாள் மாலையில் சதாசிவம் வெளியே சென்றிருந்த சமயத்தில், மரகதம் வெளியே முற்றத்தில் மிளகாய் காயப் போட்டிருந்தாள்.
அதை எடுத்துக்கொண்டிருந்த சமயம் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து கூவி வந்த செல் ஒன்று முற்றத்தில் வீழ்ந்து வெடித்து அவளைப் பலி வாங்கியது. அந்த இடத்திலேயே சிதைந்துபோனாள் மரகதம்.

அந்த துயரச் சம்பவம் கேட்டு இடிந்துபோனான் ராகவன். அப்போது அவனுக்கு வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காததால் அவனால் தாயின் சிதைந்த உடலைக் கூடப் பார்க்க முடியவில்லை. மாதக் கணக்கில் உள்ளே வெடித்து அழுதான். தந்தையுடன் தொலைபேசியில் கதைத்து ஆறுதல் சொல்லத்தான் அவனால் அப்போது முடிந்தது.

காலப்போக்கில் சுகந்தியை விரும்பி மணம்செய்து, பிள்ளைகளும் இருவர் பிறந்த பின் தந்தையை வற்புறுத்தி வெளிநாட்டிற்கு அழைத்து வந்தான்.
முதுமையில் அவர் தனிமையில் வெம்பி இருப்பதைவிட தன்னுடன் அவர் இருப்பது அவருக்கும்,பிள்ளைகளுக்கும் நல்லதென்று ராகவன் நினைத்தான். ஆரம்பத்தில் வெளிநாட்டை சதாசிவம் விரும்பாவிட்டாலும் காலப்போக்கில் மகனின் வற்புறுத்தலால் சம்மதித்துக் கொண்டார். வெளிநாட்டிற்கு வரும்வரை மகளுடனேயே அவர் பொழுது சந்தோசமாகக் கழிந்தது.

சுகந்தியும் மாமாவை தன் தந்தைபோல் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். தனிமைத் துயர் மறக்க அவருக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டான் ராகவன்.
தனியறையில் அவருக்கென்று தொலைக்காட்சி இணைப்பையும் அவர் சுதந்திரம் கெடாமல் செய்து கொடுத்தான். பிள்ளைகளும் `அப்பப்பா` என்று அவருடன் ஒட்டிக் கொண்டனர். பிள்ளைகள் பேசும் மொழி அவருக்குப் புரியாவிட்டாலும், தமிழ் பேச அவர்களுக்குத் தெரிந்திருந்தது அவருக்கு பெரிய ஆறுதலைக் கொடுத்தது.

"என்னங்க..." மனைவியின் அழைப்பில் திடுக்கிட்டுத் திரும்பினான் ராகவன்.
" வந்து....உங்களுடன் கொஞ்சம் பேசணும்...இங்கே வரீங்களா...."
"என்னப்பா ...என்ன விஷயம்..?" அவள் அருகில் வந்தான் ராகவன்.

"அது...வந்து...ஒரு மாசமாய் சொப்னா ஒழுங்காய் சாப்பிடுறது இல்லைங்க....எப்பவும் சோர்ந்துபோய் இருக்கிறாள்...என்ன மாதிரி ஓடித் திரிஞ்ச பொண்ணு...பெரிய பிள்ளையாகி ஒரு வருஷம் கூட இன்னும் முடியேலை...அதுதான் டொக்ரரிட்டை ஒருக்கால் கூட்டிக் கொண்டுபோய் காட்டினால் நல்லது.." இழுத்தாள் சுகந்தி.

சொப்னாவுக்கு 13 வயதுதான் ஆகிறது. வெளிநாட்டில் பிறந்த பிள்ளை என்றாலும் அவளுக்கு விபரம் குறைவு. எப்போதும் குழந்தைபோல் துள்ளிக் கொண்டிருப்பவள்.

"என்னவாச்சு அவளுக்கு...! மறக்காமல் பிறகு ஞாபகப்படுத்து சுகந்தி..."
மனைவியிடம் உரைத்தபடியே, சிந்தனையில் ஆழ்ந்தபடி குளியலறையுள் நுழைந்தான் ராகவன்.

அடுத்தநாள் காலையில் வைத்தியரிடம் மகளை அழைத்துச் சென்றனர்.
சொப்னாவை பரீட்சித்துப் பார்த்த குடும்ப வைத்தியர் சொன்ன செய்தி அவர்களைத் திடுக்கிட வைத்தது.
" உங்கள் மகள் வயிற்றில் ரண்டு மாதக் கரு உள்ளது..." வைத்தியர் சொல்லி முடிக்குமுன்னமே சுகந்தி மயங்கி விழுந்தாள்.
நொறுங்கிப் போனான் ராகவன். சொப்னாவோ எதுவும் புரியாமல் வைத்தியசாலைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த குழந்தையின் படத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன...டொக்ரர் இது...!" நாக்குழறினான் ராகவன்.
"பாடசாலை நண்பர்களுடன் ஏதாவது......."
"அவள் படிப்பது பெண்கள் கல்லூரியில் டொக்ரர் .." பதில் அளித்தான் ராகவன்.
" அவள் ஓரிடமும் போவதில்லை...எந்த நேரமும் கண்காணித்தபடி நாமிருக்கிறோம்...அப்போ இது எப்படி..!"
மயக்கம் தெளிந்த சுகந்தி நம்பமுடியாதவளாய் பிதற்றிக்கொண்டிருந்தாள்.

இருவரும் நடைப்பிணமாக வீடு திரும்பினர். நடந்ததை தந்தையிடம் உரைக்காத ராகவன் அடுத்த கட்ட நடவடிக்கையில் அவசரமாய் ஈடுபட்டான்.
அதற்கிடையில் தந்தையின் விடாப்பிடியான வேண்டுதலுக்கமைய அவரை ஊருக்கு அனுப்பி வைத்தான்.
" போய் அக்காவோடை 3 மாதம் நிண்டிட்டு வேளைக்கு வந்திடுங்கோ அப்பா ...."
கைச் செலவுக்கு பணமும் கொடுத்து வழியனுப்பி வைத்தான். சதாசிவமும் கண்ணீருடன் விடைபெற்றார். திரும்பி வரும் நோக்கம் உள் மனதிலின்றி சந்தோசமாய் விடைபெற்றார் சதாசிவம்.

அதன்பின் சொப்னாவிடம் குடும்ப வைத்தியரும், சுகந்தியும் கனிவாக விசாரித்ததில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
" அப்பப்பா தானம்மா நீங்களும், அப்பாவும் வெளியே போற நேரங்களிலை......விளையாடக் கூப்பிட்டு அப்புறம்.....உங்ககிட்டை நடந்ததைச் சொல்ல வேண்டாமென்று சொன்னவர்...விளையாட்டுச் சாமானெல்லாம் நிறைய வாங்கித் தந்தவர்...." குழந்தைத்தனமாக எதுவும் அறியாமல் சொல்லிக்கொண்டிருந்தாள் சொப்னா.

ராகவனின் கண்கள் சிவந்தது. நடந்ததை நம்ப மறுத்தது. "அப்பாவா....!?"
சுகந்தியை நிமிர்ந்து பார்க்கும் திராணியின்றி தலை குனிந்தபடி விம்மிக்கொண்டிருந்தான்.

வைத்தியர் மூலம் போலீஸ் விசாரணையாகி, கடைசியில் பரிசோதனைக்காக ஊரிலிருந்து சதாசிவத்தார் வரவழைக்கப்பட்டார். தந்தையை நிமிர்ந்து பார்க்கக் கூட ராகவன் விரும்பவில்லை. பரிசோதனை முடிவுகளின்படி உண்மை நிரூபண மானது. அவரும் தன் தவறை ஒப்புக்கொண்டு மகனின் காலடியில் விழுந்தார்.

"என்னை மன்னிச்சிடப்பா......
தொலைக்காட்சியிலை பார்த்த கூடாத படங்களாலை மனம் பேதலிச்சு...ஏதோ ஒரு சபலத்திலை..."
அவர் முடிக்குமுன்னமே கோபத்துடன் விடுவிடென்று உள்ளே போய்விட்டான் ராகவன். மருமகளின் முகத்தைப் பார்க்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதார் சதாசிவம்.
திக்பிரமை பிடித்தவளாய் பேச வார்த்தையின்றி கணவனைப் பின்தொடர்ந்தாள் சுகந்தி.

" ஏன் அப்பா...அப்பப்பாவை பொலிசு கைது செய்துகொண்டு போகுது..!?" புரியாமல் கேட்டான் மகன் ரமேஸ்.
" மீசை நரைத்தும் ஆசை நரைத்துப் போகாததால் வந்த விபரீத விளைவு இது"
என்று மனதுள் சொல்லியபடி குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினான் ராகவன்.

முற்றும்.

( இக்கதைக்கான கரு,வெளிநாட்டில் நடந்ததாய் (இன்னொருவர் மூலம் தெரிவிக்கப்பட்டு) என் தோழி ஒருத்தி எனக்கு உரைத்த உண்மைச் சம்பவத்தை கதையாக்கியுள்ளேன்.)

எழுதியவர் : சுசானா (3-Dec-13, 9:25 pm)
பார்வை : 177

மேலே