இறைவா இது நியாயமா

ராகவன், வயது 38. சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர். ஒரு விசேஷத்திற்காக, சகலை ராமனின் வீட்டிற்கு வந்திருந்தார். காஞ்சிபுரம். காமாட்சி அம்மன் கோயில் அருகே வீடு. ராமன் வயது 44, காஞ்சிபுரத்தில் பட்டு வியாபாரம். ஆன்மிகத்தில் கொஞ்சம் ஈடுபாடு.

கோவில் தரிசனமெல்லாம் முடித்து விட்டு, ராகவனும் ராமனும் மொட்டை மாடியில் ஹாயாக அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுகொண்டு ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தனர். அங்கே இங்கே என்று சுற்றி, வனிதா பற்றி பேச்சு திரும்பியது. வனிதா பக்கத்து வீட்டு வயோதிக தம்பதியின் 12 வயது பேத்தி. ராமனின் மகளின் தோழி.

ராகவன் “அவளுக்கென்ன?”

ராமன் “வனிதா பாவம் ராகவன்! கிட்டத்தட்ட அவள் ஒரு அனாதை. இவள் அம்மா, மன நிலை சரியில்லாமல் சென்னையில் மருத்துவ நிலையத்தில் போராடிக்கிட்டிருக்காங்க. அவங்க பெரிய பெண்,வனிதாவின் அக்காவும் இப்போது உயிரோடு இல்லை. ஒரு விபத்திலே இறந்து போயிட்டா."

"இவள் அப்பா என்ன பண்றார்?"

"அவன் ஒரு ராஸ்கல். மகளையும் மனைவியையும் கண்டு கொள்வதேயில்லை! தஞ்சாவூரில், வேறு ஒரு பெண்ணோடு குடித்தனம். அவனெல்லாம் ஒரு மனுஷன்! ச்சே !.”

ராகவனுக்கு என்னவென்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் கூடிற்று “சொல்லுங்க ராமன்! இந்த குழந்தைக்கு அப்படியென்ன பெரிய கொடுமை?”

ராமன் பக்கத்து வீட்டு வனிதாவின், அவளது அம்மா துளசியின் சோகத்தை விவரித்த பிறகு, விக்கித்து ராகவன் சொன்னது இதுதான்:

“இறைவா ! இது நியாயமா? உனக்கே இது அடுக்குமா?”

****

நான்கு வருடத்திற்கு முன்பு:

துளசி. 38 வயது. வயது காலத்தில் கொஞ்சம் கவர்ச்சியாகவே இருந்தாள். ஆனால், காலத்தின் கோலம், இரண்டு பெண்களுக்கு தாய். குடும்ப தலைவி. கவலையினால் காதோர நரை.

கணவன் சந்திரன். அரசாங்க உத்தியோகம். சம்பளம், கிம்பளம் இரண்டும் . கொஞ்சம் அடாவடி பண்ணி வேறு பிடுங்குவான். அரசியல் செல்வாக்கோடு கட்டபஞ்சாயத்து வேறு. சந்திரனிடம் காசுக்கு பஞ்சமில்லை. அதனாலே குடி கூத்து கும்மாளத்திற்கு குறைவே இல்லை.

கணவனின் துர் நடத்தையில் துளசிக்கு மன உளைச்சல் . ஆனால் அவள் ரொம்ப சாது. எதிர்த்து பேச தெரியாது. எதற்கும் பயம். இரண்டு பெண் குழந்தைகள் வேறு. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள்.

அவளது வடிகால் ஆண்டவன். துளசிக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அவளுக்கு பக்தி என்பதை விட கடவுளிடம் பயம் அதிகம் என்றே சொல்லலாம். கணவனின் நடத்தையால், தனது குடும்பத்தை இறைவன் தண்டிப்பாரோ என பயம்.

‘தவறு செய்தவனை இறைவன் மன்னிக்க மாட்டான்’. அவளது அப்பா அம்மா சொல்லிக் கொடுத்தது. நம்பினாள். கணவனுக்காக வேண்டினாள். திரும்ப திரும்ப வேண்டினாள். மூர்க்கமாக. கண்மூடித்தனமாக.

தினமும் காலை மாலை வேளைகளில் தவறாது ஒரு மணி நேரம் சாமி படம் முன்னால் கண்ணை மூடி வேண்டுவாள். ஸ்தோத்திரம் சொல்லுவாள். தனது குறைகளை சொல்லுவாள். விடாமல் கோவிலுக்கு சென்று எல்லா சந்நிதிகளிலும் அர்ச்சனை பண்ணிவிட்டு வருவாள்.

என்றாவது ஒரு நாள் கோவில் போக முடியவில்லை என்றாலோ, அல்லது பிரார்த்தனை செய்ய முடியவில்லை என்றாலோ, அன்று ஏதேனும் குடும்பத்தில் பிரச்சினை வந்து விடும் என பயப்படுவாள்.

“இன்னிக்கு சரியா சாமியை வேண்டவில்லை, அதனால்தான் என் பெண்ணுக்கு இன்னிக்கு காலில் அடி பட்டது”, “இன்னிக்கு கோவில்லே விளக்கு ஏற்றலே, அதனாலே ஈஸ்வரன் என்னை தண்டித்தார், என் பெண் பரிட்சையில் பெயிலாயிட்டாள். என்னால் தான் என் குடும்பத்திற்கு இந்த தண்டனை.” என குமுறுவாள்.

“சரியான பைத்தியம் நீ”- அவளது கணவன் சந்திரன் அடிக்கடி சொல்வான். “உனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது?”. சந்திரன் கடவுள் பக்தி இல்லாதவன் அல்ல. ஆனால், அவனுக்கே மனைவி செய்வது கொஞ்சம் அதிகப்படி என தோன்றியது. ஆனாலும், ‘எப்படியோ போ’என்று விட்டு விட்டான்.

சந்திரனுக்கு கொஞ்சம் சபல புத்தி. இப்போது கொஞ்ச நாளாக வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக துளசிக்கு அரசல் புரசலாக சேதி. அது வேறு மன உளைச்சல்.

‘கணவன், தன்னையும் தன் இரண்டு பெண்களையும் நிர்கதியாக விட்டு விட்டு போய்விடுவாரோ? ஐயோ! அப்போ எங்க நிலைமை? கோவிந்தா! பெருமாளே! எங்களை காப்பாத்து. அவருக்கு நல்ல புத்தி கொடு.” அவளுக்கு தெரிந்ததெல்லாம் வேண்டுதல் ஒன்று தான்.

“கோவிந்தா! நான் எதாவது வேண்டிக்கிட்டு செய்யாம விட்டிருந்தால் மன்னிச்சிருப்பா. எங்களை தண்டிச்சுடாதே! அவரை என்னோட சேர்த்து வை. நான் திருப்பதிக்கு வந்து குடும்பத்தோட மொட்டை போடறேன்!

சர்வேசா! அண்ணாமலை தெய்வமே ! கிரி வலம் வரேன் ! கை விட்டுடாதே!. பழனி ஆண்டவா ! எங்கள் பேரில் கருணை காட்டு! பால் காவடி எடுக்கறேன்?” இதே புலம்பல் தான்.

எப்பவும் தானும் தன் குழந்தைகளும் நிர்கதியாக தெருவில் நிற்கும் நினைவுதான் அவளை அலைக்கழித்தது. கணவனை கேட்கவும் பயம். ஒரே குழப்பம். கவலை. பதட்டம்.

****

அன்று புற்றுக்கு பால் ஊற்றுவதாக வேண்டுதல். ஆனால், துளசியால் மாரியம்மன் கோவிலுக்கு போக முடியவில்லை. மாமியார் உடல் நிலை சரியில்லையென்று ஊருக்கு போக வேண்டியிருந்தது.

“அம்மா ! மக மாயி! கோபிக்காதே தாயே!. நான் ஊருக்கு திரும்ப வந்தவுடன் , மறக்காமல் , பால் ஊற்றுகிறேன்.” மனமுருக வேண்டிக்கொண்டாள் துளசி.

****

ஒரு வாரம் கழித்து அடுத்த வெள்ளி. துளசியின் முதல் மகளுக்கு பரிட்சை. பள்ளியில் மகளை விட்டு விட்டு, இன்றாவது புற்றிற்கு சென்று பால் ஊற்ற வேண்டும் “அம்மா ! மக மாயி! கோபிக்காதே தாயே! இன்னிக்கு வந்து விடுகிறேன்” .

மனதில் லலிதா ஸ்தோத்திரம் சொல்லிக்கொண்டே மகளுடன் சாலையை கடந்து கொண்டிருந்தாள். மகள் அனிதாமுன்னால், இவள் மகளின் பின்னால்.

எதிரே இருந்து ஒரு மண் லாரி கண் மூடித்தனமான வேகத்தில் ; கண் இமைக்கும் நேரத்தில், அவளது மகள் மேல் மோதியது. கண்ணெதிரே மகள் லாரியின் கீழே, ரத்த வெள்ளத்தில்.

துளசி “ஐயையோ! அனிதா!” ஓடிச்சென்று மகளை தூக்கினாள். ஜனங்கள் கூடினர். யார் கூடி என்ன பயன்? போன உயிர் போன உயிர் தான். அனிதா, மண்ணோடு மண்ணாக, தூசியோடு தூசியாக. துளசி மயக்கமானாள்.

அந்த அதிர்ச்சிக்கு பிறகு, துளசியின் நடத்தையில் நிறைய மாற்றம். விட்டத்தை பார்த்த வெற்று பார்வை. பேச்சு, சிரிப்பு சுத்தமாக இல்லை.

தனது மகள் தன் கண்ணெதிரே இறந்தது துளசிக்கு பெரிய அதிர்ச்சி. ஒவ்வொரு இரவும், அவளது உறக்கத்தில், திரும்ப திரும்ப லாரியும், விபத்தும், ரத்த வெள்ளத்தில் மகளும் கனவில் வந்து விழிப்பாள். அலறி அடித்துகொண்டு.

“அனிதா ! அனிதா! உன்னை கொன்னுட்டேனே“ என்று தேம்பி தேம்பி அழுவாள். கணவனை பார்க்கும் போதெல்லாம் ‘ஓ’ வென்று காட்டு கத்தல் கத்தினாள். “உன்னால் தான்! எல்லாம் உன்னால் தான்” என்று திரும்ப திரும்ப சத்தம் போட்டாள்.

தூக்க மாத்திரை கொடுத்து அப்போதைக்கு வேகம் கொஞ்சம் குறையும். திரும்பவும் பழைய குருடி கதவை திறடி தான்.

கொஞ்ச நாளில் அவள் சரியாகி விடுவாள் என உறவினர் எதிர்பார்த்தனர். ஆனால், நிலைமை மோசமாகி கொண்டு வந்தது. சாமி படத்தை பார்த்தாலே ஒரு கத்தல். “கடவுளே இல்லை! எல்லாம் பொய்!” என்பாள் ஒரு நேரம். கையில் கிடைத்ததை எடுத்து சாமி படத்தின் மீது வீசுவாள்.

“உன்னை போய் நம்பினேனே!” .

அவளே, கொஞ்ச நேரம் கழித்து “மாரியம்மா எனக்கு தண்டனை கொடுத்திட்டா” என்பாள். தனக்கு தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தாள். “அம்மா! தாயே! வனிதாவை ஒண்ணும் பண்ணிடாதே”. வனிதா அவளது இரண்டாம் மகள்.

இன்னும் கொஞ்ச நாள் ஆகியது. நிலைமை இன்னும் மோசம். “அனிதா கூப்பிடறா! அம்மா இங்கே வந்துடு! வந்துடுன்னு சொல்றா! நான் அவ கிட்டேயே போறேன்.” துளசி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள்.

ஒரு நாள், யாரும் பார்க்காத பொது, மேல் மாடியிலிருந்து கீழே குதித்து விட்டாள். பலமான காயம்.

துளசியை மருத்துவ மனையில் சேர்த்தார்கள். காயம் ஆறியது. ஆனால் மன நோய்? இப்போது நான்கு வருடங்களாக, துளசி சென்னையில், ஒரு மன நல மருத்துவ மனையில். மாறுதல் ரொம்ப இல்லை. ஏதேதோ மாத்திரைகள், ட்ரீட்மென்ட் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அயோக்கிய ராஸ்கல், அந்த சந்திரன் இப்போது தஞ்சாவூரில். அவனுக்கு எம்.எல்.ஏ சிபாரிசில் வருவாய் துறையில் நல்ல வேலை. கை நிறைய, பை நிறைய காசு. குடி கூத்து கும்மாளத்திற்கு குறைவே இல்லை. துளசியை நினைப்பதும் இல்லை. இரண்டாவது மகள், வனிதாவை மறந்தே விட்டான்.

வனிதா இப்போது அவள் பாட்டி வீட்டில். ராகவன், நீங்க பார்த்ததும் அவளை தான். என் மகள் போல இங்கேதான் வளைய வருவாள். அவளது பாட்டி தாத்தா எங்களுக்கு ரொம்ப நெருக்கம். அவங்க எல்லாரும் சொல்லித்தான் எனக்கு இதெல்லாம் தெரியும்.”

****

ராமன் துளசியின் கதையை முடித்தார். இரண்டு நிமிடம் இருவரும் பேசவில்லை. ராகவன் மனது கனத்தது.

ராகவன் அரற்றினார். : “ ஐயோ பாவம் !துளசிக்கு ஏன்இந்த வேதனை? அம்மா இருந்தும், வனிதாவுக்கு ஏன் இந்த சோதனை? ஆண்டவா! இது என்ன நியாயம்? “

ராமன் இடை மறித்தார். “ இதுக்கு ஏன் இறைவனை குறை சொல்றீங்க?”

ராகவனுக்கு கோபம். “பின்னே என்ன? தவறு செய்பவன் சவுக்கியமாக இருக்கிறான். சாமியே சரணம் என்று நம்பிய துளசிக்கு தண்டனை. இறைவனுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை? கடவுள் எங்கும் நிறைந்தவன், எல்லா சக்தியும் நிறைந்தவன், நியாயமானவன்னு நம்பறோமே, அது பொய்தானே?”

ராமன் சொன்னார்: “உங்கள் கோபம் நியாயமானதே! எனக்கும் கூட "என்ன கொடுமை சார் இது" என்று தோன்றும். ஆனால், இதற்கெல்லாம் கடவுளை குறை சொல்லி என்ன பிரயோசனம்?”

“அதுவும் சரிதான். சரி, தூங்க போலாமா கீழே! நேரம் போனதே தெரியலை” சொல்லிக் கொண்டே ராகவன் படி இறங்கினார்.

ராகவன் மனம் துளசியின் நிலை நினைத்து வருந்தியது. ரொம்ப பாவம் அவள்! “காமாட்சி தாயே! துளசிக்கு சீக்கிரம் குணமாகட்டும். அவளது கணவனுக்கு நல்ல புத்தி வரட்டும்”. ஆத்மார்த்தமாக வேண்டிகொண்டார்.

இதுவரை 'எனக்கு கொடு, என் குடும்பத்தை காப்பாத்து 'என்று கேட்டுக்கொண்டிருந்த ராகவனுக்கு, அறிமுகமே இல்லாத ஒரு குடும்பத்திற்காக இறைவனிடம் இறைஞ்சுவது ஒரு வித்தியாசமான, சந்தோஷமான அனுபவமாக இருந்தது.

அடேடே! மற்றவருக்காக வேண்டுவதிலும் ஒரு நிம்மதி கிடைக்கிறதே. ! இது அவருக்கு ஒரு மனதிற்கு இதமான நிகழ்வு.

****
முற்றும்

எழுதியவர் : முரளி (3-Dec-13, 9:26 pm)
பார்வை : 197

மேலே