ஆதலினால்

இப்போதெல்லாம்
வளர்கிறது விஞ்ஞானம்
பிறழ்கிறது மனிதநேயம்..
குருதி ஓட்டத்தின்
இறுதிப் பாய்ச்சல்
முடிகையில் ...
சாய்ந்து விடுகிறது - இந்த
சதைப் பிழம்பு ;
அடங்கி விடுகிறது - அத்தனை
ஆராவாரமும் !
மாற்று வழியென்ன
மனிதம் தழைக்க...!?
--------------------------------
காதலில் இதயம் சேர்ந்தோம்;
காலம் முடிந்தபிறகும் அதை
உயில் எழுதுவோம்-
நோயாளி ஒருவனுக்கு !
நாத்திகனானாலும்
அவனுக்கு பிரம்மா
சத்தியமாய் நாமே தான் ...!
தன் குருதியில் ஒருபாதியைப்
பசு பாலாய்ச் சுரக்கிறது ;
வாழ்வின் சுருதி - மகிழ்வுடன்
நாம் செய்யும் ரத்த தானம் !
கர்ப்பத்தின் இருட்டை
கடைசிவரை சுமப்பவனுக்கு
வாழ்வின் வண்ணங்களை
நாம் தானம் கொடுப்போம் ;
உயிர் சுமக்கும் கருவறை
கழிவு நீக்கும் சிறுநீரகம்
காற்றுவாங்கும் நுரையீரல் ..
அஸ்தியாய் கரையவா?
மகிழ்வோடு தானம் செய்வோம் !
அழகுக்காய் மலர் தானம்
செய்யும் பூச்செடிகள்
ஒளிக்காய் உடல் தானம்
செய்யும் மெழுகுவர்த்தி
வெடித்த வயல்களுக்காய்
துடித்து விழும் கார்மேகம்
இவற்றினூடே
பிரளயம் தாண்டி
மனிதம் தழைக்க
மாற்று வழியென்ன...!?
ஆம்! உடலுறுப்பு தானம்..!
மனிதா நாமும்
தானம் செய்வோம் !