மனிதநேயத்தைத் திருப்பித் தா
என் அன்பான இறைவனே
நான் கல்வியறிவு இல்லாதவன்,
தாய்தந்தையின்றி வளர்ந்தவன்,
நற்சேர்க்கை அறியாதவன்,
நான் மனிதநேயம் அற்றவன்!
ஒரு கையளவு தண்ணீர் கேட்டேன்
என் தொண்டையை நனைத்துக் கொள்ள,
ஆனால் நீ என், பலவீனம் அறிந்து
உடலெங்கும் மதுவை ஊற்றி என்னை
மொடாக் குடியனாக ஆக்கி விட்டாய்!
எனக்கு ஒரு பேனா கேட்டேன்
காதல் கீதம் நான் எழுத,
ஆனால் நீ, வன்முறையைப் போதித்து
கைகளில் ஆயுதத்தை கொடுத்து என்னைக்
கொடிய கொலைஞனாக ஆக்கி விட்டாய்!
நான் பொறுமையை வேண்டினேன்,
என் துயரத்தின் வலியினால் ஏற்பட்ட
பயத்தைப் போக்க, ஆனால் நீ,
என் சினத்தை உப்புக் கரைசலாக்கி பகைமை
உணர்வை என் குருதியில் கலந்து விட்டாய்!
நான் மெய்யறிவு ஒளிவிளக்கினைக் கேட்டேன்,
அறியாமை இருளினைப் போக்க, ஆனால் நீ,
கணக்கற்ற பேராசைக் கொழுவிளக்குகளை
ஏற்றி, மோகக்கனவுகளைக் காட்டி என்னை
குற்ற உணர்வுள்ள ஆன்மாவாக ஆக்கி விட்டாய்!
ஓ என் அன்பான இறைவனே!
உன்னிடம் என் வழிபாடு ஒன்றுதான்,
என்னை மீண்டும் மனிதனாக்கு!
மனிதநேயத்தைத் திருப்பித் தா!
மனிதநேயம் மட்டுமே தா!
ஆதாரம்: Suman Kumar Das என்பவரின் Make me human…! என்ற கவிதை.